பட்டிக்காடா பட்டணமா-50 | மதுரைக்குப் பெருமை சேர்த்த சினிமா!

பட்டிக்காடா பட்டணமா-50 | மதுரைக்குப் பெருமை சேர்த்த சினிமா!
Updated on
3 min read

தமிழ் கலாச்சாரத்தின் பெருமை, அதன் வேர்களின் தொன்மை, அதன் அடையாளங்களின் மேன்மை இவை பிரதிபலிக்கும் மதுரை மண் சார்ந்த மாந்தர்களின் வாழ்வியலை ஜனரஞ்சகமாக காட்சிப்படுத்திய கருப்பு வெள்ளை காவியம் நடிகர் திலகம் - பி.மாதவன் பாலமுருகன் கூட்டணியில் உருவான ‘பட்டிக்காடா பட்டணமா'.

ஒரு முனையில் மதுரை சோழவந்தான் மறு முனையில் லண்டன் சென்னை என்கிற முடிச்சும் தொய்வில்லாத பர பர திரைக்கதை நகர்வுகளும் மக்கள் மனங்களை வெற்றி கொண்டன.

படத்தின் பாட்டுடை தலைவன் மூக்கையாவாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அள்ளி முடித்த கொண்டை முடியும் கடுக்கணும் அணிந்து அசல் சோழவந்தான் கிராமத்தானின் உடல்மொழியை நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார். மாரியம்மன் கோவிலுக்கு தீச்சட்டி எடுப்பதிலிருந்து வேட்டியை வரிந்து கட்டி சிலம்பு சுற்றுவதிலிருந்து பஞ்சாயத்து தலைவராக தீர்ப்பு சொல்லும் இடத்திலும் கம்பீரமான மூக்கையா. கல்பு கல்பு என்று குழைந்து புடவை கட்ட தெரியாத மனைவிக்கு அதை கட்டுவதற்கு உதவி செய்யும்போது காதல் கணவன் மூக்கையா..

முதலிரவன்று மனைவியுடன் ‘கேட்டுக்கோடி உறுமி மேளம்’ பாடலுக்கு அவர் ஆடும் நடனம் இருக்கிறதே அது வேற லெவல். தமிழ் திரைப்பட குத்து பாடல்களில் தனியிடம் பிடித்த ‘என்னடி ராக்கம்மா’ பாடலுக்குஅவரின் உடல் அசைவுகள் குறிப்பாக கேமராவுக்கு முதுகைக் காண்பித்துக் கொண்டே இசைக்கேற்றவாறு அவர் பின்புறம் கால்களை உயர்த்தி ஆடும் நடன அசைவுக்கு பலத்த கைதட்டல்கள் விழும். வீட்டை நவீனப்படுத்துகிறேன் என்று மனைவி வாசலில் இருந்த கலப்பையை பின்பக்கம் வீசிவிட நான் கும்பிடற சாமியை விட கலப்பைத்தான் பெரிசு என குரல் உயர்த்தும்போது உண்மையான விவசாயியை கண் முன் நிறுத்துவார்.

மனைவியை திருத்தி நல்வழிக்கு கொண்டு வர முகேஷ் என்கிற கெட்டப்பில் வரும்போது அட்டகாசம் செய்வார். தானும் படித்தவன்தான் என்பதை ஆங்கிலத்தில் மனைவியுடன் பேசும்போது கூட மொழி ஒரு நாகரீக சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்குதான் என்பதை உணர்த்துவார். தன்னை கடத்தி சென்று அடிக்கும் ஆட்களை திருப்பி அடித்து சாந்தி தியேட்டரை எனக்கே காட்றியா என்று அரங்கத்தை அலற விடுவார் என்றால் எல்லா முயற்சியும் தோல்வி அடைந்து மீண்டும் சோழவந்தான் வந்தடைந்து வீட்டு மாடிப்படியில் கையறு நிலையில் கண்களில் கண்ணீர் கட்டி நிற்க வார்த்தைகளே இல்லாமல் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருக்கும் அவரின் வலியை பார்வையாளனுக்கும் கடத்துவார். பஞ்சாயத்தில் ஏற்பட்ட அவமானத்தை சொல்லி குமுறுவது ஒரு முத்திரை என்றால் இறுதி காட்சியில் தமிழ் பண்பாட்டு நாகரீகத்தை பற்றி விளக்குவது மற்றொரு நடிப்பு முத்திரை.

‘லண்டன் ரிட்டர்ன்’ நாகரீக நங்கையாக கலைச்செல்வி ஜெயலலிதா. அவரது கதாபாத்திரத்திற்கு ஒரு வித்தியாச பூச்சு தரப்பட்டிருக்கும். வெறும் ஆணவம் மட்டுமல்லாமல் அத்தை மகன் மேல் அன்பு, அவரின் வீரம், கண்ணியம் இவையெல்லாம் அவர் மேல் ஒரு ஈர்ப்பை உருவாக்குவதை இயல்பாக வெளிப்படுத்துவார். தன்னுடைய சுதந்திரத்தில் குறுக்கீடு அது உடையாகட்டும் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தனது நண்பர்கள் மற்றும் தன் மேல் கணவன் காட்டிய கோபம் வன்முறையாய் வெளிப்பட்டதும் காட்டும் ஆவேசமாகட்டும் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருப்பார்.குழந்தை மேல் வைக்கும் அன்பு கணவன் தன்னை நிரந்தரமாக பிரிந்து விடுவானோ என்கிற பயம் தனது இடத்தை விட்டுக் கொடுக்க கூடாது எனும் போராட்டம் இப்படி படம் நெடுக ஜெயலலிதா தனது நடிப்பினால் நிலை நிறுத்திக் கொண்டதின் விளைவே அவரின் கல்பனா கதாபாத்திரம் பிலிம் பேர் இதழின் சிறந்த நடிகை விருதை அவருக்குப் பெற்று தந்தது.

பாத்திர படைப்புகளை சரியான முறையில் வார்த்தெடுத்தது, அதற்கு சரியான கலைஞர்களை தேர்வு செய்ததும் வெற்றியை எளிதாக்கியது. பணம் நாகரீக மோகம் போன்ற காரணங்களால் உற்ற உறவை கூட தூக்கி எறியும் ஆணவத் தாயார் பாத்திரத்தில் சுகுமாரியும் மனைவியிடம் பணிந்து போகும் கணவன் பாத்திரத்தில் வி கே ராமசாமியும் கச்சிதமாக பொருந்தினர். அப்பத்தாவாக எஸ் என் லட்சுமி, சகோதரி வகையினராக மனோரமா, காந்திமதி ஆகியோரும் நல்ல தேர்வே.

படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்களில் கவியரசர் கண்ணதாசனும் மெல்லிசை மன்னர் விஸ்வநாதனும் முக்கியமானவர்கள். ‘யாரிடம் குறை இல்லை.. யாரிடம் தவறில்லை?’ எனக் கேள்வி எழுப்பி ‘பிரிவு ஒரு தீர்வில்லை’ என்பார் கவிஞர். ‘எல்லோருக்கும் ஊர்கோலம் இரண்டு தரம்.. அதில் ஒரு கட்டம் முடிந்ததடி’ என்கிற வரிகளில் நாயகனின் விரக்தியைப் பேசுவார் மெல்லிசை மன்னர். தனது பங்கிற்கு ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு விதமான இசையை கொடுக்க படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தன

தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை படங்களின் வரலாற்றில் அதிக பட்ச வசூலை பெற்ற ‘பட்டிக்காடா பட்டணமா’ மதுரை மாநகரில் வெள்ளிவிழா கண்டது. அன்று வெள்ளி விழா கண்ட காவியம் இன்று 50 ஆண்டுகளை நிறைவு செய்கின்ற நேரத்தில் பொன் விழா கொண்டாட்டம் அதே மதுரையில் சிவாஜி அன்பர்களால் முன்னெடுக்கப்படுகிறது என்பது காவிய நயம். தமிழ் பண்பாட்டு விழுமியத்தின் திரை அடையாளமாய் ‘பட்டிக்காடா பட்டணமா’ என்றும் நிலை கொள்ளும்.

தொடர்புக்கு: t.murali.t@gmail.com
படங்கள் உதவி: ஞானம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in