

நேஷனல் ஜியாகரஃபிக் சேனலில் ‘இந்தியாவின் பிரம்மாண்டமான சமையல் அறைகள்’ தொடரை ஒளிபரப்பினார்கள். இவற்றில் வீடுகளின் சமையல் அறைகள் இடம்பெறவில்லை. மாறாக வழிபாட்டுத் தலங்களில் அன்னதானத்துக்காக இயங்கும் சமையல் அறைகள் முக்கிய இடம்பெற்றன. குருத்துவாராவில் தினமும் 10,000 பேருக்கு உணவு படைக்கிறார்கள் என்றும், இதுவே இந்தியாவின் மாபெரும் சமையல் அறை என்றும் குறிப்பிட்டார்கள். (திருப்பதியை விடவா? ஒருவேளை அந்தச் சமையலறையின் அளவைக் கொண்டு கூறியிருப்பார்கள் – 18,000 சதுர அடி).
நிறுத்த வேண்டும்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காகப் பொருட்களை வாங்க பெர்லின் நகரில் மார்க்கெட்டில் குவிகிறார்கள் மக்கள். அங்கு வரும் ஒரு லாரி தாறுமாறாக அந்தச் சாலையில் பாய்கிறது. 12 பேர் இறக்க, 49 பேருக்குப் படுகாயம். தீவிரவாதத்தின் புதிய தாக்குதல் வடிவமாகிக்கொண்டிருக்கின்றன இவை போன்ற செயல்கள். லாரிக்குள்ளும் ஒரு பயணி இறந்து கிடந்தார். லாரி ஓட்டியவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவில்லை என்றது பி.பி.சி. நியூஸ் சேனல். பிரேக் பிடிக்காத வண்டிகளுக்கு மட்டுமல்ல, இதுபோன்ற தீவிரவாதச் செயல்களுக்கும் உடனடியாக பிரேக் போட நடவடிக்கைகள் தேவை.
முகச்சுளிப்பு
இயக்குநர் வெங்கட் பிரபு தமாஷ் என்ற பெயரில் முகம் சுளிக்க வைக்கும் விஷயங்களைத் தனது பேட்டிகளின் இடையில் அள்ளித் தெளிப்பது வழக்கம்தான். ஆனால் சன் டிவி நிகழ்ச்சியில் அவரிடம் ‘சொப்பன சுந்தரி பாடலை எதற்காக உங்கள் லேட்டஸ்ட் திரைப்படத்தில் வைத்தீர்கள்?’’ என்ற கேள்விக்கு ‘‘அது எங்க குடும்பப் பாடலா மாறிடுச்சுன்னு வச்சுக்கோங்களேன். கூட்டமான இடத்தில் நாங்கள் தொலைந்துவிட்டால். ‘சொப்பன சுந்தரியை யாரு வச்சிருக்கா?’ என்ற முதல் வரியை நான் பாடினால் யுவன், ப்ரேம், வைபவ்னு எல்லாருமே அவங்கவங்க இடத்திலேந்து கை தூக்குவாங்க. நாங்க இணைஞ்சிடுவோம்” என்று கூறியது அபத்தம் மற்றும் ஆபாசத்தின் உச்சம்.
நடன நிகழ்ச்சியா? சோக நிகழ்ச்சியா?
விஜய் டிவி தொடங்கி வைத்த பாதையை ஒருவிதத்தில் ஜி டிவி அப்படியே பின்பற்றுகிறது. பாட்டு நிகழ்ச்சி அல்லது நடன நிகழ்ச்சி என்றால் பாடல்களைக் கேட்டும், நடனத்தைப் பார்த்தும் மகிழத்தான் பெரும்பாலானவர்கள் விரும்புவார்கள். பங்கு பெறுபவர் தன் சோகப் பின்னணியைச் சொல்லிக் கண்ணீர் விடுவதும், செட்டில் உள்ளவர்கள் ஆளாளுக்குக் கண்கலங்குவதை க்ளோஸப்பில் காட்டுவதும் சகிக்கவில்லை. வேண்டுமென்றால் நிகழ்ச்சியில் கடைசியாக ஒரு பதினைந்து நிமிடம் இதைக் காட்டித் தொலைக்கலாம். கைக்குட்டையோடு கண்ணீரைத் துடைத்துக்கொள்ளக் காத்திருப்பவர்களுக்கு மட்டும் அந்த பாக்கியம் கிடைத்தால் போதுமே.