

அத்திப் பூத்தாற்போல் எப்போதாவது தமிழில் சிறார் சினிமா வருவதுண்டு. இப்போதும் அப்படித்தான். பதின்ம வயதுக்குள் காலடி வைக்காத இரண்டு கிராமத்துக் குழந்தைகளின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ‘எறும்பு’ என்கிற சிறார் படத்தை இயக்கியிருப்பதாகக் கூறுகிறார் சுரேஷ்.ஜி. அவருடன் படம் குறித்து உரையாடியதிலிருந்து ஒரு பகுதி.
ஒரு சிறார் திரைப்படம் எடுக்க வேண்டும் என்று ஏன் நினைத்தீர்கள்? - நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். அங்கே பிள்ளைகள் பெற்றோருக்கு பயந்து நடப்பார்கள். அந்த பயம்தான் அவர்களிடம் ஒழுங்கு உருவாகக் காரணமாக இருக்கும். ஒரு சிறு தவறு செய்துவிட்டால் பயந்து நடுங்கியிருப்போம். வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் ‘அட! இதற்காகவா அப்போது இவ்வளவு பயந்தோம்!’ என்று தோன்றும்.
அப்படியொரு விஷயத்தை சிறார் திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதுதான் இந்தப் படம். படத்தைப் பார்க்கும் அனைவரும் ‘நானும் இப்படித்தானே இருந்தேன்’ என பால்ய காலத்தை அசைபோடத் தொடங்கிவிடுவார்கள். பால்யத்தில் எவ்வளவோ தொலைத்திருப்போம். ‘எறும்பு’ அதை மீட்டுக்கொடுக்கும்.
உங்களை பாதித்த சிறார் திரைப்படம், படைப்பாளி என்று யாரைச் சொல்வீர்கள்? - ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதியின் ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ படத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தேன். இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு இவ்வளவு விஷயங்களைச் சொல்லமுடியுமா என்று வியந்திருக்கிறேன். அதேபோல், மணிகண்டனின் ‘காக்கா முட்டை’ படம் மாநகரத்தின் பின்னணியில் உண்மையை நகைச்சுவையும் வலியும் ததும்பப் பேசியது. ‘எறும்பு’ கிராமிய பின்னணியில், முழுவதும் குழந்தைகளுக்கான படமாக, பெரியவர்கள் பார்த்து புரிந்துகொள்ள வேண்டிய படமாக உருவாகியிருக்கிறது.
என்ன கதை? - கரும்பு அறுவடை காலத்தில் ஊர் ஊராகப் போய் வேலை செய்யும் விவசாயக் கூலியாக இருக்கும் ஒரு கிராமத்துத் தம்பதி. அவர்களுடைய இரண்டு குழந்தைகள்தான் இக்கதையின் முதன்மைக் கதாபாத்திரங்கள். 12 வயது அக்கா. 9 வயது தம்பி. பெற்றோர் வேலைக்குச் சென்றிருக்கும் நேரத்தில் பாட்டியின் பாதுகாப்பில் பள்ளிக்கூடம் சென்று வருவார்கள். அப்போது எதிர்பாராமல் ஒரு தவறு செய்துவிட்டு பயந்து நடுங்குகிறான் தம்பி.
அவனிடம் ‘உனக்கு நான் இருக்கேன்டா.. பயப்படாதே..!’ எனச் சொல்லி அவனைத் தேற்றி அரவணைக்கிறாள் அக்காள். அவளாலும் தம்பியைக் காப்பாற்ற முடியாது என்கிற நிலை வருகிறது. அப்போது அக்காவையும் தம்பியையும் எது காப்பாற்றியது என்பதுதான் கதை. முழுவதும் கிராமத்திலேயே கதை நடக்கிறது. ‘எறும்பு’ என்கிற தலைப்பில் கதையின் மொத்த ஆன்மாவும் குவிந்திருக்கிறது.
யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள்? - ‘கைதி’, ‘கனா’ போன்ற படங்களில் நடித்த சிறுமி மோனிகா சிவா அக்காவாகவும், ‘பிகில்’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் நடித்த சிறுவன் சக்தி ரித்விக் தம்பியாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடைய அப்பாவாக சார்லி நடித்திருக்கிறார். இவர்களைத் தவிர, மிக முக்கியமான கதாபாத்திரங்களில் எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், சூசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கே.எஸ். காளிதாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அருண் ராஜ் இசையமைத்திருக்கிறார். இவர், ‘தடம்’ படத்துக்கு இசையமைத்தவர். இப்படத்துக்காக பிரபல இசையமைப்பாளர்களும் பாடகர்களுமான ஷான் ரோல்டன், பிரதீப் ஆகிய இருவரும் தலா ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். மண்று ஜீவிஎஸ் புரொடக் ஷன்ஸ் படத்தைத் தயாரித்திருக்கிறது.