

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இன்று வெளியாகும் ‘கலகத் தலைவன்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் நிதி அகர்வால். இந்தப் படத்தில் தீயவர்களை தேடி அழிக்கும் உதயநிதிக்கு படம் முழுவதும் வந்து உதவும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். எதிரிகளிடம் சிக்கிக்கொள்ளும் கதாநாயகி தப்பிச் செல்ல முடியாமல், மண், குப்பைகள் குவிந்துகிடக்கும் இடத்தில் படுத்துக் கிடப்பதுபோன்ற கிளைமாக்ஸ் காட்சியை மூன்று நாள் படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
பொறுமையாக அதில் நடித்துக்கொடுத்துள்ள நிதிக்கு கண்ணில் தொற்று ஏற்பட்டு கஷ்டப் பட்டதை நினைவு கூர்ந்திருக்கிறார். ‘அத்தனை கஷ்டத்துக்கும் பலன் காத்திருக்கிறது’ என்று கூறியிருக்கிறார்.
சீனு ராமசாமியின் விருப்பம்! - மாணவர்களின் வாழ்க்கையை மேம்பட வைக்கும் ‘சினிமா ரசனைக் கல்வி’யை அவர்களுக்கு திரையிடலுடன் கற்றுக்கொடுக்க வேண்டும் வேண்டும் என தன் வாழ்நாளெல்லாம் பாலு மகேந்திரா வலியுறுத்தி வந்தார். இன்று தமிழ்நாடு அரசின் முன்னெடுப்பால் அது நனவாகிவிட்டது. சமீபத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு திரையிடப்பட்ட ‘குப்பச்சிக்களு’ என்கிற கன்னட சிறார் படத் திரையிடலில் அவர்களுடன் பங்கேற்று கலந்துரையாடியது மறக்கமுடியாத அனுபவம்.
பள்ளிக் குழந்தைகளை ஆளுமைத் திறன் மிக்கவர்களாக மாற்றும் இந்த முன்னேடுப்புக்கு என் ஆயுட்காலம் முழுவதும் தமிழக அரசு, பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்” என தனது விருப்பதைக் கூறியுள்ளார் சீனு ராமசாமி.
கிராமத்து அரசியல்! - கதாநாயகர்களின் கால்ஷீட் கிடைக்காதபோது, தங்கள் கதையில் இயக்குநர்களே நடிக்க வருவது இயல்பாகிவிட்டது. “நகரங்களைவிட கிராமங்களில்தான் கட்சி அரசியலின் தாக்கம் அதிகம். அரசியல் குடும்பங்களுக்குள் நுழையும்போது அங்கே உறவுகளைக்கூட ஓட்டுக்களாகப் பார்க்கும் நிலை உருவாகிவிடுகிறது. ஒரே வீட்டுக்குள் வெவ்வேறு அரசியல் கொள்கைகளோடு வசிக்கும் மனிதர்களுக்குள் இருந்த அன்பையும் பாசத்தையும் தேடும் கதையாக ‘பாண்டிய வம்சம்’ உருவாகியிருக்கிறது” என்கிறார் இப்படத்தை எழுதி, இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ள ஏ. சிவபிரகாஷ்.
ரா கிரியேஷன்ஸ் - ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில் ரக் ஷிதா பானு, ஆலியா ஹயாத் ஆகியோர் கதாநாயகிகளாகவும் மனோஜ் குமார் வில்லனாகவும் நடித்துள்னர். இவர்களைத் தவிர விஜயகுமார், போஸ் வெங்கட், குட்டி புலி சரவணன் சக்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காந்த் தேவா இசையமைத்துள்ளார்.