திரை (இசைக்) கடலோடி 16 | தெலுங்குப் பாடல்களை விஞ்சும் தமிழ் வரிகள்!

திரை (இசைக்) கடலோடி 16 | தெலுங்குப் பாடல்களை விஞ்சும் தமிழ் வரிகள்!
Updated on
4 min read

வெண்ணிலாவைப் பாடாத கவிஞர்களே இருக்க முடியாது. அதிலும் பெண்ணை முழுநிலாவோடு ஒப்பிடாத கவிஞர்களே இருக்க முடியாது.

உண்மையில் வானவீதியில் உலாவரும் நிலவு ஒரு ஆண்பாலினம் தானே! சந்திரன்,அம்புலி மாமா என்றெல்லாம் தானே அதனை சொல்கிறோம். ஆனால் அதன் அழகும் பிரகாசமும் ஒரு மரபு மயக்க நிலையை கவிஞர்களுக்கு ஏற்படுத்தி விடுகின்றன.

ஒரு சில பாடல்களைத் தவிர, ‘அமுதை பொழியும் நிலவே’, ‘பகலிலே சந்திரனை பார்க்கப்போனேன்’ இவைபோல் நிலவின் ஆண்பாலினத்தை உணர்த்தும் பாடல்களை தமிழ்த் திரையுலகில் விரல் விட்டு எண்ணி விடலாம். திரை இசைக்கடலில் இந்த வாரம் இந்த வகையைச் சேர்ந்த பாடல் முத்து ஒன்றைத்தான் நாம் பார்க்கப்போகிறோம். இது உடுமலை நாராயண கவிராயரின் படைப்பாகும்.

1953இல் ஆந்திர மாநிலம் தமிழ்நாட்டில் இருந்து பிரிக்கப்பட்ட நேரத்தில் திரையுலகில் தெலுங்கின் தாக்கம் இருந்தது. நாகிரெட்டியாரின் விஜயா வாகினி ஸ்டுடியோ நிறுவனம் ஒரே கதையை தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாரித்தனர்.

‘பாதாள பைரவி’, ‘மிஸ்ஸியம்மா’, ‘கடன் வாங்கி கல்யாணம்’, ‘மாயா பஜார்’ போன்ற விஜயா வாகினியின் வெற்றித் தயாரிப்புகளால் என்.டி. ராமராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ் ஆகியோர் இரு மொழி ரசிகர்களாலும் விரும்பப்பட்டனர். ஆதுர்த்தி சுப்பாராவ், புல்லையா, சாணக்யா போன்ற இயக்குநர்கள் ஒரே நேரத்தில் தமிழிலும் தெலுங்கிலும் தரமான படங்களைத் தர ஆரம்பித்தனர். பாடல்கள் ஒரே மெட்டில் அமைய காரணம் இந்த இரு மொழி தயாரிப்புதான். எஸ்.ராஜேஸ்வரராவ், எச்.வேணு, கண்டசாலா, சலபதிராவ் போன்ற இசை அமைப்பாளர்கள் தங்கள் பங்குக்கு பொற்காலத் திரையிசையின் பக்கங்களைச் சற்றே ஆந்திர வாசம் கொண்டு நிரப்ப ஆரம்பித்தனர்.

ஒரே மெட்டமைப்புக்கு சமுத்ரால, ஆத்ரேயா போன்ற கவிஞர்கள் முதலில் கதைப்போக்குக்கு ஏற்ற பாடல்களைத் தெலுங்கில் கொடுத்துவிட, உடுமலை நாராயண கவி, தஞ்சை ராமையாதாஸ், மருதகாசி போன்றவர்கள் அதே மெட்டுக்களுக்குத் தமிழில் எழுதினார்கள். இவற்றைக் காப்பி அடிக்கப்பட்ட பாடல்கள் என்று ஒதுக்கிவிடமுடியாது. சொல்லப்போனால், தெலுங்குப் பாடல்களில் இருந்த கற்பனை வளம் மிகுந்த வரிகளை தூக்கிச் சாப்பிட்டன தமிழ் வரிகள்.

இனிமையான மெட்டின் மீது கருத்தாழம் மிகுந்த பாடல் வரிகள் உட்கார்ந்தபோது -அருமையான குரல் வளம் மிக்க பாடகர்கள் பாடும்போது - அவை காலத்தால் அழிக்க முடியாத பாடல்களாகவும் அமைந்துபோயின.

அந்த வகையில் அமைந்த பாடல் முத்துக்களின் ஒன்றுதான் இப்போது பார்க்கப்போவது..

ஆரம்பத்தில் சொன்னதுபோல நிலவின் ஆண்பாலினத்தை உணர்த்தும் உடுமலை நாராயண கவியின் பாடல் இடம் பெற்ற இந்தத் திரைப்படம் தெலுங்கில் ‘மாங்கல்ய பலம்’ என்ற பெயரிலும், தமிழில் ‘மஞ்சள் மகிமை’ என்ற பெயரிலும் ஆதுர்த்தி சுப்பாராவ் அவர்கள் இயக்கத்தில் 1959இல் பொங்கல் வெளியீடாக வந்து இருமொழிகளிலும் நூறு நாட்கள் கடந்து ஓடி வெற்றி கண்ட படம். உதகமண்டலத்தில் வெளிப்புறக்காட்சி படமாக்கப்பட்ட முதல் படமும் இதுதான் என்று பதிந்துள்ளார் ராண்டார்கை. இந்தப்பாடலுக்கு இசை அமைத்தவர் மாஸ்டர் வேணு என்று அனைவராலும் அழைக்கப்பட்ட எச். வேணு. இவர் பிரபல நடிகர் பானு சந்தரின் தந்தை.

பாடலுக்கான சூழல் இதுதான்:

குடும்பத்தால் எதிர்க்கப்பட்ட இளம் காதல் ஜோடிகள் தனியாக சந்திக்கின்றனர். இருவருமே வானவீதியில் அழகாக உலாவரும் நிலவைப் பார்க்கின்றனர். என்ன நேர்ந்தாலும் உன்னைக் கைவிடமாட்டேன் என்று அவளுக்கு அவன் உறுதி அளிக்கவேண்டும்.

இதுதான் காட்சி.

பாடல் முழுவதும் ‘பிறிது மொழிதல் அணி’ நயத்தோடு அற்புதமாக உடுமலை நாராயண கவி உருவாக்கிக் கொடுக்க கண்டசாலாவும், பி. சுசீலாவும் உயிர்கொடுக்க காலத்தை வென்று நிற்கும் காவியப்பாடல் நம் செவிகளில் தேன்வார்க்க கிடைத்துவிட்டது.

அவள் ஏதோ போகிறபோக்கில் சொல்வது போல சொல்கிறாள் :

‘அதோ வான வீதியில் அழகான வெண்ணிலா தன்னை அலங்கரித்துக்கொண்ட தாரகையோடு மேக ஊஞ்சலில் எவ்வளவு அழகாக ஆடுகிறான்.’- என்று மட்டுமே சொல்லி நிறுத்திவிடுகிறாள் அவள்.

உடுமலை நாராயண கவியின் வார்த்தை பிரயோகம் இந்த பல்லவியிலேயே பிரமிக்க வைக்கிறது. நிலவு மகனை அழகான வெண்ணிலா என்பவர் தொடர்ச்சியாக நட்சத்திரத்தை அலங்காரத் தாரகை என்று சொல்கிறார். எத்தனை அழகாக இருந்தாலும் தங்களை மேலும் அலங்கரித்துக்கொள்வது தானே பெண்களின் குணம். அலங்காரத் தாரகை என்ற ஒற்றை வரியில் பெண்ணினத்தின் குணத்தையே காட்டி விடுகிறார் அவர்.

அவள் சொன்னதை வழிமொழிந்து ஆமோதிப்பது போல அவனும் திருப்பிப் பாடுகிறான்.

அடுத்த சரண வரியில்

‘இருள் என்னும் மேகத்திரைக்கு பின்னால் மறைந்திருந்த வெண்ணிலா அலங்கார தாரகையைக் கண்டதும் காதல் என்னும் உறவு தந்த உரிமையில் ஒன்றாக ஓடி ஆடி எவ்வளவு அழகாக விண்வீதியில் அசைந்து ஆனந்த கானம் பாடுகிறது பார்.’என்று சொல்கிறான்.

‘அதுமட்டுமல்ல.. நிலவையும் தாரகையையும் ஒன்று சேர விடாமல் இடை மறித்து மின்னல் வெட்டுகிறது. இடியோ சத்தமிட்டு எதிர்க்கிறது. என்ன ஆனாலும் சரி. தாரகையே உன்னை நான் கைவிட்டுவிடமாட்டேன் என்று அந்த நிலவு உற்சாகமாக ஆடுகிறது பார்.’ என்று சொல்கிறான் அவன்.

இவர்கள் வாழ்க்கையிலும் அப்படித்தான். அவனது அன்னையோ மின்னல் போல இருவரும் இணைவதை தடுக்கிறாள். தந்தையோ பெருத்த கோபத்துடன் இடி போல கர்ஜிக்கிறார். ‘நீ கவலைப்படாதே. உன்னை நான் ஒரு நாளும் கைவிட்டுவிடமாட்டேன்.’ என்று அவளுக்கு மறைமுகமாக உறுதி கொடுத்து அவளது கலக்கத்தை அவன் போக்குகிறான்.

பாடல் முழுவதும் கவனித்தோமானால் ஒரு இடத்தில் கூட இருவரும் தங்கள் நிலையைச் சொல்லி வருந்துவதாகவோ ஒருவர் மற்றவருக்கு ஆறுதல் சொல்வதாகவோ ஒற்றை வார்த்தைப் பிரயோகம் இருக்காது.

நிலவும் தாரகையும் இணைந்த இணைவைப் பார்த்ததும் இருவருக்குள்ளும் நம்பிக்கை பிறக்கிறது. இடி, மின்னல் என்று வரும் துன்பங்கள் எல்லாமே தற்காலிகம் தான். அவை நிரந்தரமல்ல. வானில் என்றுமே நிரந்தரமாக இருப்பவை நாங்கள் மட்டும் தான். எங்களுக்கான இந்த பால்வெளியில் இருந்து எங்களை பிரிக்க யாராலும் முடியாது என்று அந்த இளம் ஜோடியைப் பார்த்து அவை சொல்லாமல் சொல்வது போல் தோன்ற.. இருவருக்குள்ளும் ஒரு தன்னம்பிக்கை பிறக்கிறது. நாமும் அதுபோலத்தான் இருக்கவேண்டும் என்ற மனஉறுதி அவர்கள் காதலுக்கு வலு சேர்க்கிறது.

இதோ முழுப்பாடல்:

‘ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்காரத் தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் பாடுதே..’

இருளான மேகமென்னும் திரைக்கு பின்னாலே மறைந்தேன் இந்நாளே உறவோடு ஓடியாடி உயர் காதலாலே உவந்தே மண்மேலே.

அலங்காரத் தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் பாடுதே

இன்னலாகத் தோன்றும் மின்னல் இடை மறித்தாலும் இடி எதிர்த்தாலும் கண்மணி தாரகை உன்னைக் கைவிடேன் என்றே களிப்போடு சென்றே..

அலங்காரத் தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் பாடுதே

இந்தப் பாடல் காட்சியில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் பாடல் முழுவதும் நாகேஸ்வரராவும், நடிகையர் திலகம் சாவித்திரியும் தொடாமலேயே முகபாவனைகளினாலேயே காதலை அற்புதமாக வெளிப்படுத்தி இருப்பார்கள்.

உண்மைக்காதலர்களுக்கு தேவையான மன உறுதிக்கு ஒரு அழிக்கமுடியாத சின்னமாக விளங்கும் இந்தப் பாடல் திரை இசைக் கடலில் ஒளி வீசும் ஒரு நல்முத்து.


(தொடர்ந்து முத்தெடுப்போம்..)

மாஸ்டர் வேணு

இயற்பெயர் : மத்தூரி வேணுகோபால்
பிறந்த வருடம் : 1916
இசை அமைத்த முதல் படம் : மல பிள்ள (தெலுங்கு)
தமிழில் முதல் படம் : காலம் மாறிப் போச்சு.
பிரபலமான தமிழ் படங்கள் : காலம் மாறிப் போச்சு, பெண்ணின் பெருமை, எங்க வீட்டு மகாலக்ஷ்மி, மஞ்சள் மகிமை.
இவரைப் பற்றி: பொதுவாக காப்பி அடிப்பது பிடிக்காதவர். "காதலிக்க நேரமில்லை" படம் தெலுங்கில் "ப்ரேமிஞ்சி சூடு" என்ற பெயரில் தயாரானது. படத்தின் இயக்குனர் புல்லையா அவர்களோ தமிழில் வந்த அதே மெட்டுக்கள்தான் வேண்டும் என்று தீர்மானமாகக் கூறிவிட்டார். வேறு வழி இல்லாமல் அதே மெட்டுக்களை அரை மனதோடு பயன்படுத்திய வேணு தனது மனக்குறையை இயக்குனரின் மனைவியும் நடிகையுமான சாந்தகுமாரி அவர்களிடம் வெளிப்படுத்த அவரது குறுக்கீடால் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் புதிய மெட்டு பயன்படுத்தப் பட்டது. "நாளாம் நாளாம் திருநாளாம்" பாடல் "வெண்ணெலே ரேயி" என்று ஆரம்பிக்கும் பாடலாக பி.பி. ஸ்ரீனிவாஸ் - பி. சுசீலா பாட வேணு அவர்களின் சொந்த மெட்டில் இசையமைக்கப்பட்டது. இயக்குனர் புல்லையா அவர்கள் விருப்பமே இல்லாமல் ஏற்றுக்கொண்ட இந்த பாடல் படம் வெளிவந்ததும் மிகவும் பிரபலமானது.

மறைந்த தினம்: செப்டெம்பர் 8, 1981

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in