

குற்றாலத்தில் ‘பாபநாசம்’ படப்பிடிப்பு. சாரல் விழுந்து கொண்டிருந்தது. சில நொடிகளில் சாரல் வலுத்து, தூறல் ஆகி, அதுவும் வலுத்து மழையானது. படப்பிடிப்பு தடைப்பட்டது. திண்ணையில் ஒதுங்கினோம். வெறிக்காத மழையை வெறித்துப் பார்த்தபடி சிறிது நேரம் நின்றுகொண்டிருந்தோம். ஏதோ பேசத்தொடங்கி எங்கெங்கோ சென்ற உரையாடல், ‘வாத்தியார்’ பாலுமகேந்திராவிடம் வந்து சேர்ந்தது. கமல் அண்ணாச்சியின் உடம்புக்குள் வாத்தியார் பாலுமகேந்திரா புகுந்துகொண்டார். கேமராவிலிருந்து இறங்கி தன் தொப்பியை சரிசெய்து கொண்டு, சற்றே சாய்த்த தோள் குலுக்கலுடன் நடந்து என் அருகில் வந்து தோளில் கை வைத்து, நடிப்பில் சிறு திருத்தம் சொல்லும் வாத்தியாரைப் போல் நடித்துக் காண்பித்தார். அந்த இடத்தில் அவர் பாலுமகேந்திரா. நான் கமல்ஹாஸன்.
கமல் அண்ணாச்சியுடன் பல மணி நேரம், பல நாட்கள், பல வருடங்கள் பேசிக்கொண்டே இருந்திருக்கிறேன். ஒரு நாள் கூட அவருடனான உரையாடல் சலித்ததில்லை. விட்ட இடத்திலிருந்து அடுத்த நாள் உரையாடல் தொடரும். பெரும்பாலான உரையாடல்களில் தவறாமல் இடம்பெறும் ஆளுமைகள் டி.கே.சண்முகம் அண்ணாச்சி, கே.பாலசந்தர், நாகேஷ், ஜெயகாந்தன், பாலுமகேந்திரா, இளையராஜா போன்றோர். கமல் அண்ணாச்சியின் சிறப்பே அவர் பேசும் ஆளுமைகளின் உடல்மொழியை அப்படியே நம் முன் கொணர்ந்து நிறுத்துவதுதான். அந்த வகையில் நான் பார்க்காத டி.கே.சண்முகம் அண்ணாச்சியைப் பார்த்திருக்கிறேன். பழகியறியாத கே. பாலசந்தர், நாகேஷுடன் பழகியிருக்கிறேன். காலம் சென்ற ஜெயகாந்தன், வாத்தியார் பாலுமகேந்திரா இருவரையும் மீண்டும் மீண்டும் சந்தித்திருக்கிறேன். இளையராஜாவிடம் ‘நீங்கள் இப்படி சொன்னதை உங்களைப் போலவே சொல்லி காண்பித்தார்’ என்பேன். ‘அப்படியே சொல்லியிருப்பாரே!’ என்று சிரிப்பார்.
கமலுக்கு என்னைத் தெரியும்! - ஒருமுறை ஜெயகாந்தனிடம் கமல் அண்ணாச்சியைப் பற்றிப் பேச வாய்த்தது. ‘பொதுவாக இப்போது வெளிவரும் படங்களைப் போய்ப் பார்ப்பதில் ஆர்வம் காட்டாத நீங்கள், கமல்ஹாசன் படங்களுக்கு மட்டும் அவர் அழைத்ததும் சென்று பார்க்கிறீர்களே! ஏன்?’ என்று கேட்டேன். அதற்கு ஜே.கே. சொன்ன பதில். ‘கமலுக்கு என்னைத் தெரியும்’. இந்த விஷயத்தை கமல் அண்ணாச்சியிடம் சொன்னபோது, அவர் முகத்தில் தெரிந்த உணர்ச்சிக்குறிப்பை என் ஆயுளுக்கும் மறக்க மாட்டேன்.
பல்வேறு உணர்ச்சி பாவத்தால் உலகெங்கிலும் இருக்கிற கோடானு கோடி ரசிக மனங்களில் நீங்கா இடம்பிடித்த ஒப்பற்ற கலைஞரான கமல்ஹாசனின் முகத்தில், கேமரா இல்லாத தருணங்களில் எல்லா உணர்ச்சிகளையும் நீங்கள் பார்த்து விட முடியாது. தனது உற்ற உறவுகளின் மரணத்தில்கூட அவர் கலங்கிப் பார்க்க இயலாது. துக்கம்தான் என்றில்லை. மகிழ்ச்சியைக்கூட அவ்வளவு தாராளமாக வெளிப்படுத்திவிடாத முகம் அது. ஆனால் ஜெயகாந்தன் சொன்ன ‘கமலுக்கு என்னைத் தெரியும்’ என்கிற வரி, அவர் முகத்தில் அத்தனை பெருமிதத்தை அள்ளித் தெளித்தது. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அதைச் சொல்லி மகிழ்ந்திருக்கிறார். ஒரு திரைப்பட நடிகராக மட்டும் அவர் இருந்திருந்தால் ஜெயகாந்தன் தன்னைப் பற்றிச் சொல்லியிருந்த வரி அவருக்குப் புரிந்திருக்காது.
வாத்தியார் பாலுமகேந்திராவும், இளையராஜாவும் எப்போதும் ஜெயகாந்தன் குறித்துப் பேசுவதில் ஆர்வம் காட்டுவார்கள். கமல் அண்ணாச்சியும் அப்படித்தான். அவ்வப்போது ஜெயகாந்தனின் உரைகள், கட்டுரைகள், கதைகளிலுள்ள வரியைச் சொல்வேன். இருவரும் அதை சிலாகித்துப் பேசிப் பேசி பொழுது நிறையும்.
“கும்பல் என்பது கூடிக்கலைவது; கூட்டம் என்பது கூடி வாழ்வது. கும்பல் என்பது கூடி அழிப்பது, கூட்டம் என்பது கூடி உருவாக்குவது. வன்முறையையும் காலித்தனத்தையும் கும்பல் கைக்கொள்ளும். ஆனால் சந்திக்காது. கூட்டம் என்பது அடக்குமுறையையும் சர்வாதிகாரத்தையும் நெஞ்சுறுதியோடு சாத்வீகத்தாலும் சத்யாக்கிரகத்தாலும் சந்திக்கும்” ஜெயகாந்தனின் இந்த வரிகள் கமல் அண்ணாச்சிக்கு மிகவும் பிடித்த வரிகள்.
தேடிச் செல்வதில் நாயகன் - சினிமா தவிர அவர் அதிகம் பேசுவது இலக்கியம். புதுமைப்பித்தனின் ‘சாப விமோசனம்’, ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’, ‘கயிற்றரவு’ போன்ற கதைகளைச் சிலாகிப்பார். வடுவூர் துரைசாமியின் காட்சிப்படுத்துதலை வியப்பார். மோகினி என்கிற புனைப்பெயரில் எழுதி வந்தது ரா.கி.ரங்கராஜன் என்பது தெரியாமலேயே அவரது வாசகனாக இருந்ததைச் சொல்வார். அவர் வாசித்து மகிழ்ந்த எழுத்தாளர்களின் பட்டியல் மிக நீண்டது. அவர் மனதில், காலம் சென்ற எழுத்தாளர் சுப்பிரமணிய ராஜூ மீது மிகுந்த மதிப்பு உண்டு. தமிழ்த் திரையுலக ஆளுமைகளில் இப்படி எல்லா இலக்கியவாதிகள் குறித்தும் தெரிந்து வைத்திருப்பது மட்டுமல்லாது அவர்களுடன் பழகியும் வருபவர், அவர் ஒருவர்தான். நீல.பத்மநாபனைத் தேடி திருவனந்தபுரம் செல்வார். தொ. பரமசிவனைப் பார்ப்பதற்கு அடிக்கடி திருநெல்வேலி சென்று வருவார். அவரது அலுவலகத்துக்கு சுந்தர ராமசாமி வந்திருக்கிறார். ஞானக்கூத்தன் அவரது நண்பர். நவீன தமிழ் இலக்கியத்தில் தற்போது எழுதி வரும் புதிய எழுத்தாளர்களைக்கூட அறிந்து வைத்திருப்பார்.
மூத்த இலக்கியவாதிகளை கமல் அண்ணாச்சி மதிக்கும் விதம் பற்றி ஒரு சம்பவம் சொல்கிறேன். முன்பெல்லாம் அவரது பிறந்த நாளன்று இலக்கியவாதிகளை கௌரவிப்பதை ஒரு வழக்கமாக செய்துவந்தார். இடையில் அவரது தகப்பனார் காலமான பிறகு சில காலம் அந்த நிகழ்வு நடைபெறாமல் இருந்தது. ஒரு இடைவெளிக்குப் பிறகு அவரது பிறந்தநாளன்று மீண்டும் அந்த வழக்கத்தைத் தொடர இருப்பதாக என்னிடம் சொன்னார். எந்த எழுத்தாளரை கௌரவிக்கலாம் என்று கேட்டதற்கு நான் பெரியவர் கி.ராஜநாராயணனின் பெயரைப் பரிந்துரைத்தேன். கி. ராவின் வாசகரான அவருக்கும் அது ஏற்புடையதாக இருந்தது. அவரது பிறந்த நாளன்று கி.ராவை சென்னையில் நடைபெறும் விழாவில் கௌரவிக்க வேண்டும் என்பது விழா ஏற்பாட்டாளர்களின் திட்டம். நான் விசாரித்த வகையில் புதுசேரியில் வசித்து வரும் கி. ராவால் பயணம் செய்ய முடியாது என்கிற தகவல் தெரிய வந்தது.
இங்கே விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. கி.ராவால் பயணம் செய்ய இயலாது என்கிற விஷயத்தை அவரிடம் சொன்னேன். அடுத்த நொடியில் சொன்னார். “அதனாலென்ன சுகா? நாம கிளம்பி புதுச்சேரிக்குப் போய் ஐயாவைப் பாத்துட்டு வரலாம்” என்றார். சென்னையிலிருந்து புதுவைக்குக் காரில் சென்றோம். கி.ராவின்இல்லம் சென்று அவருடன் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்து விட்டு, அவருக்கான கௌரவத்தை நேரில் செய்து மகிழ்ந்தார். கி.ரா. பாட்டையாவும் நானும் தெற்கத்தி வட்டார வழக்கில் பேசிக் கொள்ள, கமல் அண்ணாச்சியும் கலந்துகொண்டார்.
இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும். கமல் அண்ணாச்சியும், நானும் எப்போதும் தெற்கத்தி தமிழில்தான் பேசிக் கொள்வோம். எப்போது ஃபோனில் அழைத்தாலும் அவரிடமிருந்து ஹலோ வராது. ‘எப்படி இருக்கிய’தான் வரும். கி. ரா பாட்டையா எங்களிடம் கேட்டார். ‘கை நனைக்கேளா, தொண்டைய நனைக்கேளா?’. சட்டென்று புரிந்துகொண்ட தெற்கத்திக்காரர் கமல் அண்ணாச்சி, ‘தொண்டையே நனைக்கோம்யா’ என்றார். சூடான ரசம் வந்தது. பருகினோம். அந்த சமயத்தில் கி.ரா அவர்கள் ‘ரசம் நன்றாக வைக்கத் தெரிந்த வீட்டில் பெண் எடுக்கலாம்’ என்று எழுதியதை நினைவுகூர்ந்து சொன்னேன். ரசத்துடன் ரசமான இலக்கிய உரையாடல் நிகழ்ந்தது.
கடவுளுக்கு கமல் பாடிய பாடல்! சினிமா, இலக்கியம் தாண்டி எங்கள் இருவரையும் இணைத்த மற்றொரு விஷயம் இசை. அபூர்வமான இசைப்பதிவுகளையும், நாங்கள் ரசித்த இசைத்துணுக்குகளையும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வோம். பாகநேரி பில்லப்பன் என்னும் நாகஸ்வரக் கலைஞனின் இசைத்துணுக்கை ஒரு முறை அனுப்பி வைத்தேன். கேட்டுவிட்டு புளகாங்கிதம் அடைந்த கமல் அண்ணாச்சி சந்தோஷத்தில் கிட்டத்தட்ட புலம்பினார் என்றுதான் சொல்ல வேண்டும். அத்தோடு அவர் மனம் சமாதானம் அடையவில்லை. பில்லப்பனைத் தேடிப் பிடித்துப் பேசினார். அவர் குறித்து எல்லா இடங்களிலும் பேசி எங்கோ ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் வாழ்ந்து வரும் அந்த எளிய கலைஞனை உலகறியச் செய்தார். கேரளத்தில் உள்ள ரப்பர் தோட்டத்து விவசாயி ராகேஷ் உன்னி, ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘உன்னைக் காணாது நான் இன்று நான் இல்லையே’ பாடலை அத்தனை நயமாகப் பாடிய காணொளியைப் பார்த்து விட்டு அவருக்கு அனுப்பி வைத்தேன். ராகேஷின் குரலைக் கேட்டு அசந்து போனார்.
‘இந்த மாதிரியான ஆட்களையெல்லாம் நேர்ல பாத்து பாராட்டணுங்க’ என்றார். உடனே அதற்கான தேடலில் இறங்கினேன். திரைப்பட இயக்குநர் சுதீஷ் ராமச்சந்திரன் மூலம் ராகேஷ் உன்னியைத் தொடர்பு கொண்டு எனக்குத் தெரிந்த மலையாளத்தில் பேசி சென்னைக்கு வரவழைத்தேன். கமல் அண்ணாச்சியின் முன் அதே பாடலை பாடினார் ராகேஷ் உன்னி. கட்டியணைத்துக் கொண்டார், கமல் அண்ணாச்சி. யாரோ ஒரு கேரளத்து விவசாயியை கமல்ஹாஸன் பாராட்டுகிறார் என்றால் சும்மாவா? ஊடகங்கள் அதை பதிவு செய்து ராகேஷின் மீது வெளிச்சம் பாய்ந்தது. புகழ் பெற்ற பிரபலமான கலைஞர்களைப் பாராட்டுவதையும் விட இது போல பேர் தெரியாத கலைஞர்களைப் பாராட்டுவதை தன் கடமையாகவே செய்து வருகிற கலைஞர் கமல்ஹாஸனின் அடிப்படை பலமே அவர் ஒரு நேர்மையான ரசிகர் என்பதுதான். தமிழ் சினிமாவில் இன்றைக்கு புகழ் பெற்று விளங்கக் கூடிய பல கலைஞர்களை இனம் கண்டு அவர்களை இழுத்து வந்து இன்றைய பிரபலங்களாக ஆக்கியவர், அவர்.
அவரது இசை ரசனை குறித்து என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஒரு சம்பவத்தை நினைவுகூர்கிறேன். கமல் அண்ணாச்சி கடவுள் நம்பிக்கை இல்லாதவர். ஆனால் அட்சரம் பிசகாமல் அவர் பாடிய கடவுள் பாடல் ஒன்று இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. டி.பி. ராமச்சந்திரன் இசையமைப்பில் உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் எழுதி சீர்காழி கோவிந்தராஜன் பாடிய புகழ் பெற்ற முருகன் பாடலொன்றின் தொகையறாவை கமல் அண்ணாச்சி பாடிக் கேட்டவர்கள் பாக்கியவான்கள். எனக்கு அந்த பாக்கியம் கிட்டியிருக்கிறது.
ஏது பிழை செய்தாலும், ஏழையேனுக்கு இரங்கித்
தீது புரியாத தெய்வமே . . . தெய்வமே . . . .
“நீதி தழைக்கின்ற” போரூர் தனிமுதலே . . . . .
நாயேன் பிழைக்கின்ற வாறு நீ பேசு….. முருகா… முருகா…
சிறு வயதிலிருந்தே நான் கேட்டு என் மனதில் பதிந்திருக்கும் ‘நீயல்லால் தெய்வமில்லை’ என்ற இந்தப் பாடலின் தொகையறாவின் வரிகளை நான் இப்போது மனதுக்குள் அசை போடும்போது இந்த நான்கு வரிகளை நீட்டி முழக்கி ஆலாபித்து பாடி என்னைச் சொக்க வைத்த கமல் அண்ணாச்சியின் குரல்தான் கேட்கிறது.
திருநெல்வேலி பகுதிகளில் அண்ணாச்சி என்ற சொல் அண்ணனை மட்டும் குறிக்காது. அங்கு அண்ணாச்சி என்றால் அன்பு. மதிப்பு. தோழமை. பிரியம். பாசம். இவை அனைத்தும் எனக்கு கமல்ஹாஸன் அவர்களிடம் இருக்கிறது. அதனால்தான் அவர் எனக்கு கமல் அண்ணாச்சி.- சுகா, kssuka@gmail.com