

தொடர்ந்து பெண் மையப் படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், கால் டாக்ஸி ஓட்டுநராக நடித்துள்ள படம் ‘டிரைவர் ஜமுனா’. 18 ரீல்ஸ் நிறுவனத்தின் எஸ்.பி.சௌத்ரி தயாரித்திருக்கும் இப்படத்தை ‘வத்திக்குச்சி’ படப் புகழ் கின்ஸ்லின் இயக்கியிருக்கிறார். சமீபத்தில் நடந்த இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் பேசினார்: “ ‘கனா’ படத்துக்குப் பிறகு நான் நடித்து திரையரங்குகளில் வெளியாகும் படம் ‘டிரைவர் ஜமுனா’. சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகளில் ரசிகர்களின் ஆதரவு குறைந்துவிட்டது. அதேநேரம், வித்தியாசமான, விறுவிறுப்பான கதை, தரமான மேக்கிங் இருந்தால் ஆதரவு குறையவில்லை. ‘டிரைவர் ஜமுனா’ அந்த வகைப் படம். எனக்கு கார் ஓட்டுவது மிகவும் பிடிக்கும். அதனால் இப்படத்தின் சண்டைப் பயிற்சி இயக்குநர் அனல் அரசிடம் ‘ஆக் ஷன் காட்சிகள் அனைத்திலும் டூப் போடாமல் நானே நடிக்கிறேன்’ என பிடிவாதமாக இருந்து சேஸிங், சண்டைக் காட்சிகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் துணிந்து கார் ஓட்டி நடித்தேன். அது மறக்க முடியாத அனுபவமாக அமைந்துவிட்டது” என்றார்.
81 நிமிடங்களில் ஒரு படம்! - கடந்த 2015 இல் வெளியான ‘துணை முதல்வர்’ படத்தில் ஜெயராமுடன் இணைந்து கதாநாயகனாக நடித்திருந்தார் திரைக்கதைத் திலகம் கே.பாக்யராஜ். தற்போது மீண்டும் அவர் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘3.6.9’. பிஜிஎஸ் புரொடக்சன்ஸ் - ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை சிவ மாதவ் இயக்கியிருக்கிறார். தேவாலயம் ஒன்றில் பாதிரியாராக இருக்கிறார் பாக்யராஜ். ஞாயிறு காலை திருப்பலி நேரத்தில் தேவாலயத்துக்குள் நுழையும் சிலர், அதைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, வழிபாட்டுக்கு வந்த பக்தர்களை துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக்குகிறார்கள். அவர்களிடமிருந்து பாதிரியார் பக்தர்களை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. “ஆன்மிகத்துக்கும் அறிவியலுக்குமான தொடர்பை சுவாரசியமாகப் பேசியிருக்கிறோம். சயின்ஸ்பிக் ஷன் படமாக உருவாகியிருக்கும் இதை, 81 நிமிடங்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தி முடித்து உலகச் சாதனை படைத்திருக்கிறோம். இதற்காக, ஒரே நேரத்தில், ஒரே களத்தில் 24 கேமராக்கள் இயக்கப்பட்டு 150 நடிகர்கள், 450 தொழில்நுட்ப கலைஞர்கள் ஒரே அலைவரிசையில் பணிபுரிந்துள்ளனர்” என்கிறார் படத்தின் இயக்குநர்.
நான்கு நண்பர்களின் கதை - ‘பீச்சாங்கை’ படத்தின் மூலம் கவனம் பெற்ற ஆர்.எஸ்.கார்த்திக் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படம் ‘போர்குடி’. இப்படத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு அர்ப்பணிக்கும் வகையில் ‘வீச்சருவா வீசி வந்தோம்..’ என்கிற பாடலை வைத்திருக்கிறார்கள். இப்பாடலின் காணொளியையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தியாகு எழுதியிருக்கும் இப்பாடலுக்கு செந்தமிழ் இசையமைத்திருக்கிறார். 11 வில்லேஜர்ஸ் பிலிம் புரொடக் ஷன் - யாதவ் பிலிம் புரொடக் ஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தைத் தயாரித்துள்ளன. கிராமப்புற கபடிக் குழு ஒன்றையும் அதில் அங்கம் வகிக்கும் நான்கு நண்பர்களின் நட்பையும் மையமாக வைத்து இப்படம் உருவாகியிருக்கிறது.