சுவர்களுக்குள் அடைபட விருப்பமில்லை! - ஜிவி பிரகாஷ்குமார் பேட்டி

சுவர்களுக்குள் அடைபட விருப்பமில்லை! - ஜிவி பிரகாஷ்குமார் பேட்டி
Updated on
2 min read

வரவிருக்கும் 2017-ல் அதிகப் படங்களில் நடிக்கும் நாயகனாக இவர்தான் இருப்பாரோ என எண்ண வைத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். காரணம் அடுத்தடுத்து படங்களைத் தயங்காமல் ஒப்புக்கொண்டுவரும் அவர் தற்போது ‘அடங்காதே’ படப்பிடிப்புக்காக வாரணாசியில் முகாமிட்டிருக்கிறார். அவரிடம் தொலைபேசியில் உரையாடியதிலிருந்து...

‘கடவுள் இருக்கான் குமாரு' படத்தின் கூட்டணியே புதிதாக இருக்கிறதே...?

‘கடவுள் இருக்கான் குமாரு' ஒரு ரோடு மூவி. அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் அதிகமான படங்கள் வந்ததில்லை. சாலையில் நடைபெறும் சம்பவங்களை வைத்து இயக்குநர் ராஜேஷ் கதை சொன்னார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சென்னை டூ பாண்டிச்சேரிக்குப் போகும்போது நடைபெறும் கதை. அனைவருமே பாண்டிச்சேரி என்றவுடன் மது அருந்தும் காட்சிகள் இருக்கும் என நினைப்பார்கள். ஆனால், ராஜேஷ் இப்படத்தில் மது அருந்தும் காட்சி எதையும் வைக்கவில்லை.

பிரகாஷ்ராஜ், காமெடி கலந்த வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார். அவருடைய அடியாட்களாக ரோபோ சங்கர், சிங்கம்புலி வருவார்கள். ஊர்வசி மேடம், கோவை சரளா, ராஜேந்திரன், ஆர்.ஜே.பாலாஜி என ஒரு பெரிய காமெடி கூட்டமே இப்படத்தில் இருக்கிறது.

அதிகப் படங்களில் ஒப்பந்தமாகியிருப்பதால், உங்கள் படங்கள் அடிக்கடி வெளியாகும் சூழல் தெரிகிறதே...

இந்த ஆண்டு 2 படங்கள் வெளியாகியிருக்கின்றன. இன்னும் 2 படங்கள் வெளிவர இருக்கின்றன. ராஜீவ் மேனன் சார் படம், ‘அடங்காதே', சசி சார் படம், ‘4ஜி', இயக்குநர்கள் ராம்பாலா, பாண்டிராஜ் இயக்கும் படங்கள் உட்பட பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன். என்னிடம் வித்தியாசமான ரசிக்கக்கூடிய கதைகள் வரும்போது, அதில் நடிக்காமல் இருக்க முடியவில்லை. ஆகையால் ஒப்பந்தமாகிறேன். ஆதிக் ரவிச்சந்திரனுடன் ஒரு படம் பேசிக்கொண்டிருக்கிறோம். அடுத்த ஆண்டு அந்தப் படமும் வெளிவரலாம்.

நீங்கள் நடிக்கும் படங்களைத் தவிர மற்ற படங்களுக்கு இசையமைப்பதில்லையே, என்ன காரணம்?

என்னால் ஒரு படம் தள்ளிப் போகக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். நடிப்போ இசையோ ஒரு படம் ஒப்புக் கொண்டால் அதில் முழு ஈடுபாட்டுடன் நடித்து முடித்துக் கொடுக்க வேண்டும். எனக்காகக் காத்திருக்கும் இயக்குநர்களுக்குக் கண்டிப்பாக இசையமைத்துத் தருவேன்.

2016-ல் படம் தயாரிப்பேன் என்றீர்கள். ஆனால் தொடங்கப்படவில்லை. ஏன்?

படம் தயாரிப்பதற்கான எண்ணமெல்லாம் இருக்கிறது. உண்மையில் எனக்கு அதற்காக நேரம் ஒதுக்கி, கதை கேட்டு ஒரு படக்குழுவை உருவாக்குவதற்கான நேரமில்லை. இப்போது நான் நிறைய தயாரிப்பாளர்களுடன் பணியாற்ற வேண்டும் என நினைக்கிறேன். நானே தயாரித்து, நானே சம்பாதித்துக்கொள்ளும் எண்ணம் எனக்கில்லை. வெளி தயாரிப்பாளர்கள் படங்களில் நான் நிறைய நடித்து, அவர்கள் லாபம் சம்பாதித்தால்தான் திரையுலகம் இன்னும் வலுவாக இருக்கும் என நினைக்கிறேன்.

உங்களை எந்த மாதிரியான நாயகனாக வெளிப்படுத்திக்கொள்ள ஆசை?

‘டார்லிங்' வெற்றியைத் தொடர்ந்து நான் பேய் படத்தில் நடித்திருந்தால் “இவர் பேய்ப் பட ஹீரோ” என்று சொல்லியிருப்பார்கள். வெவ்வேறு கதைக் களங்களில் நடிக்கவே நான் விரும்புகிறேன். ஒவ்வொரு படமும் ஒரு பெயரைக் கொடுக்கிறது. நான் எந்தவொரு வட்டத்துக்குள்ளும் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. ஜி.வி. பிரகாஷ் அனைத்து விதமான கதைகளுக்கும் பொருந்துவார் என்று இயக்குநர்கள் சொல்ல வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது.

இசையமைப்பாளராக இருந்து நாயகனாகியிருப்பதில் இழந்தது என்ன, பெற்றது என்ன?

10 வருடங்களில் இசையமைப்பாளராக 50 படங்களில் பணியாற்றியிருக்கிறேன். நாயகன் என்ற அந்தஸ்து ஒரு புதிய அனுபவம். இழந்தது எதுவுமில்லை. இவ்வளவு நாள் ஸ்டூடியோவுக்குள் நான்கு சுவருக்குள் இருந்தேன். இப்போது வெளியே வந்து நடிக்கிறேன். இசை என்பது மன உளைச்சல் தரும் என்றாலும் நடிப்பது என்பது உடல் ரீதியாக மிகவும் வேலை வாங்கக் கூடியது. நாயகனாக இருப்பதென்பது உடம்பின் தோலில் இருந்து அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும். சண்டைக் காட்சிகளில் கவனிப்புடன் இருக்க வேண்டும்; இப்படி நாயகனாகப் பல விஷயங்களில் மிகவும் பார்த்து பண்ண வேண்டியதிருக்கிறது.

உங்களைச் சுற்றியும் சர்ச்சை உலா வருகிறது. இதற்கு தங்களுடைய பதில் என்ன?

நான் என் வேலையைப் பார்த்துக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறேன். பேசுகிறவர்கள் பேசிக்கொண்டேதான் இருப்பார்கள். அவர்கள் சொல்வதைத் தலையில் ஏற்றிக்கொண்டு, அதற்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தால் நமது நேரம் வீணாகிவிடும்.

ரசிகர்கள் வித்தியாசமான படங்களைக் கொடுத்தால் உடனே ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நான் இசையமைக்க வந்தபோது “இவர் ஏன் இசையமைக்க வந்தார்” எனக் கேட்டவர்கள் இருக்கிறார்கள். நம்முடைய வேலையை முழுமையாகச் செய்தபடி போய்க்கொண்டே இருக்க வேண்டும். அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்று யோசித்து நாம் வேலை செய்யத் தொடங்குவதில் எனக்கு உடன்பாடே கிடையாது.

நான் தீவிரமான விஜய் ரசிகன். இதனால் அஜித் ரசிகர்கள் என்னைக் கிண்டல் செய்வார்கள். என் மனதுக்குப் பிடித்தவர்களை நான் பிடித்திருக்கிறது என்று சொல்வதற்கு நான் யாரைக் கேட்க வேண்டும்? கடவுளையே பலர் கலாய்க்கிறார்கள். மனிதர்களைக் கலாய்ப்பது எல்லாம் ஒன்றுமே கிடையாது. என் அடுத்த படத்துக்குத் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்றால்தான் நான் வருத்தப்பட வேண்டும். ட்விட்டரில் கத்துபவர்களுக்காக என் நேரத்தை வீணடிப்பதில்லை.

நாயகிகளுடன் கிசுகிசு செய்தியிலும் உங்களுடைய பெயர் அடிபட ஆரம்பித்திருக்கிறதே...

கிசுகிசு செய்திகள் வருவது நல்ல விஷயம்தான்.அதற்கெல்லாம் நான் கவலைப்படுவதில்லை. நான் எப்படி நடந்துகொள்கிறேன் என்பது என்னைச் சுற்றியிருப்பவர்களுக்குத் தெரியும். பிறகு நான் ஏன் கவலைப்பட வேண்டும்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in