

கன்னட சினிமாவுக்கு 2022 வெற்றிகரமான வருடம்! ‘கே.ஜி.எஃப் 2’ தொடங்கி தற்போதைய ‘காந்தாரா’ வரை வரிசையாக நான்கு பிளாக் பஸ்டர் வெற்றிகளைக் கொடுத்துள்ளது. இந்த நான்கு படங்களும் இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக 1851 கோடி ரூபாயைத் தாண்டி வசூல் செய்திருக்கின்றன. தற்போது ‘இப்படங்களின் வரிசையில் இணைகிறோம்’ என்கிற முழக்கத்துடன் வந்துள்ளது ‘கேடி - த டெவில்’ என்கிற புதிய கேங்ஸ்டர் படத்தின் படக்குழு. அப்படத்தின் டீசர், டைட்டில் லுக் ஆகியவற்றை, சமீபத்தில் பெங்களூருவில் நடந்த விழாவில் ஊடகத்தினருக்கு அறிமுகப்படுத்தினர். இவ்விழாவில் விஜய்யுடன் ‘மதுர’, சிம்புவுடன் ‘தம்’ ஆகிய தமிழ்ப் படங்களில் கதாநாயகியாக நடித்தவர், தற்போது படத் தயாரிப்பாளராக வலம் வரும் ரக் ஷிதா, பாலிவுட்டின் சஞ்சய் தத் உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.
கதாநாயகனின் கதாபாத்திரப் பெயரான காளிதாஸ் என்பதைச் சுருக்கி ‘கேடி’ என தலைப்பு வைத்திருக்கிறார்கள். “எழுபதுகளில் கர்நாடகத்தில் நடந்த உண்மைக் கதையைப் படமாக்கியிருக்கிறோம்” என்கிறார் படத்தை இயக்கி வரும் பிரேம். “கடந்த 2011இல் வெளியான ‘ஜக்கையா’ என்கிற படத்தை இயக்கும் முன், பிரபலமான தொழில்முறை ரவுடிகள் 10 பேரை நேரில் சந்தித்து அவர்களின் வாழ்க்கையைப் பற்றி தெரிந்துகொண்டு அந்தப் படத்தை எழுதி இயக்கினேன். நான் சந்தித்துப் பழகிய ரவுடிகளில் மூன்று பேர் தற்போது உயிருடன் இல்லை. அந்தப் படம் நடிகர் சிவராஜ் குமாருக்கு பெரிய வெற்றியாக அமைந்தது. அதேபோல், தற்போது ‘கேடி’யில் நாயகனாக நடித்து வரும் துருவா சர்ஜாவுக்கு இந்தப் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும்” என்று பேசினார். ஆக் ஷன் கிங் அர்ஜுனின் அக்காள் மகன்தான் இந்த துருவா சர்ஜா. இதுவரை இவரது நடிப்பில் வெளிவந்துள்ள ஐந்து படங்கள் கர்நாடகத்தில் வரிசையாக வெற்றி பெற்றுள்ளன.
படம் குறித்து துருவா சர்ஜா பேசும்போது “பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை நான்கு தென்னிந்திய மொழி சினிமாக்களும் பிரிந்து கிடந்தன. இன்று அந்த வேற்றுமை மறைந்துவிட்டது. இந்தப் படத்தின் மலையாள டீசருக்கு மோகன்லால் சாரும் தமிழ் டீசருக்கு விஜய்சேதுபதி அண்ணாவும் இந்தி டீசருக்கு சஞ்சய் தத் சாரும் குரல் கொடுத்திருக்கிறார்கள். தென்னிந்திய படவுலகம் மொழி வேறுபாடுகளைக் கடந்து தற்போது திறமைகளைப் பகிர்ந்துகொள்கிறது. இது ஆரோக்கிய மான போக்கு. இப்படம் ரத்தம் தோய்ந்த கதை மட்டுமல்ல, காதல், அறம் கலந்த குடும்பக் கதையும் தான் ‘கே.ஜி.எஃப்’, ‘புஷ்பா’ படங்களின் தாக்கம் இல்லாமல் இதை இயக்குநர் உருவாக்கி வருகிறார்” என்றார். கன்னட சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள கே.வி.என்புரொடெக் ஷனின் நான்காவது தயாரிப்பான இப்படத்தின் தமிழ் பதிப்பை, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தமிழ்நாட்டில் வழங்கவிருக்கிறது.