

தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு கடும் நெருக்கடியில் இருக்கும் நேரத்தில் அதன் பெருமையைப் பேச வந்திருக்கிறது இந்தப் படம்.
கி.பி. 1700-ஐ ஒட்டிய காலத்தில் கதை நடக் கிறது. யாராலும் வெல்ல முடியாத ஜல்லிக்கட்டுக் காளை ஒன்றை வளர்க்கிறார் சூழூர் என்ற கிரா மத்தின் தலைவர் வீரைய்யன் (ரவி மரியா). அவர் மகள் இளமியை (அனு) மாங்கனிபுரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பு (யுவன்) காதலிக்கிறான். இரண்டு கிராமங்களுக்கிடையிலான வழிபாட்டுப் பிரச் சினை, ஜல்லிக்கட்டுப் போட்டியாக உருவெடுக் கிறது. போட்டியில் வென்றால் சமமான வழிபாட்டு உரிமை மாங்கனிபுரத்துக்கு கிடைக்கும். காளையை வெல்பவனுக்குத் தலைவரின் மகளை மணந்துகொள்ளும் உரிமையும் கிடைக்கும். கருப்பு, மிக ஆபத்தான வடம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் வென்று காதலியைக் கைப்பிடித்தானா இல்லையா என்பதுதான் கதை.
படம் தொடங்கியதுமே அந்நாட்களின் ஜல்லிக்கட்டு முறைகள், வடம் ஜல்லிக்கட்டு மற்ற எல்லாவற்றையும் விட எவ்வளவு ஆபத்தானது, தமிழர்களின் கலாச்சார வாழ்வுடன் அது எப்படிப் பின்னிப் பிணைந்தது என்பதை விவரிக்கும் இரண்டு நிமிட அனிமேஷன் படம் நிமிர்ந்து உட்கார வைக்கிறது.
அதைத் தொடர்ந்து, 300 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் கிராமத்துக்குள் நம்மை அழைத் துச் செல்கிறார் அறிமுக இயக்குநர் ஜூலியன் பிரகாஷ். கதைக்கு எவ்வளவு தேவையோ அதை மட்டும் பேசும் காட்சிகள் நறுக் கென்று நகர்கின்றன. இளமி கருப்பு இடை யிலான காதலை விவரிக்கும் விதம், வழிபாட்டுப் பிரச்சினையின் அறிமுகம், ஊர்த் தலைவரின் சவால், ஜல்லிக் கட்டுக்குத் தயாராவது என்று காதலும் வீரமும் கலந்து திரைக்கதை நகர்கிறது. இப் படித்தான் முடியப்போகிறது என்ற எதிர்பார்ப்பைச் சுக்கு நூறாக்கி அதிர்ச்சியில் உறையச் செய்கிறது கிளைமாக்ஸ்.
அம்மையில் படுத்த படுக்கை யாகிவிடும் காதலியை எப்படியாவது குணப் படுத்திவிட வேண்டும் என்று உயிரைப் பணயம் வைத்து மலைத் தேன் எடுக்கச் செல்லும் உணர்ச்சிகரமான காதலனாகவும் பின்னர், பாண்டியப் படைத் தளபதி சொல்லித் தரும் சூட்சுமங்களைப் புரிந்து கொண்டு காளையை அடக்கிக் காதலியைக் கைப்பிடிக்கப் போராடும் வீர இளைஞனாகவும் யுவன் தனக்குத் தரப்பட்ட வேலையை நன்றாகவே செய்திருக்கிறார். அனு கிருஷ்ணாவின் நடிப்பும் யதார்த்தம். கிஷோர், ரவி மரியா ஆகியோரும் படத்தின் மதிப்பைக் கூட்டுகிறார்கள்.
பழைய காலகட்டத்தைத் திரையில் கொண்டு வரப் போராடியிருக்கிறார் கலை இயக்குநர் ஜான் பிரிட்டோ. விலங்கு நல அமைப்புகளின் கெடுபிடிகளால் நிஜமான காளையைக் ஜல்லிக் கட்டுக் களத்தில் காட்ட முடியாமல் போய்விட்டது இதுபோன்ற கதைக்குப் பெரும் இழப்பு. வடம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளை கிராஃபிக்ஸ் கைவண்ணம் என்பதை உணரும்போது காட்சிகளின் வீரியம் குறைகிறது. பாத்திரங்கள் தட்டையாகத் தீட்டப்பட்டுள்ளன. இரண்டு கிராமங்களுக்கிடையேயான பகைமை சொல்லப்பட்டுள்ள விதம் எதிர்பார்க்கும் தடத்திலேயே பயணிக்கிறது.
காந்த் தேவாவின் இசையும் யுகாவின் ஒளிப்பதிவும் இந்தக் குறைகளைப் பெருமளவு ஈடுசெய்கின்றன. நாட்டார் தெய்வங்களின் பின்னணிக் கதையைச் சிதைக்காமல் படமாக்கிய இயக்குநர் ஜூலியன் பிரகாஷைப் பாராட்டி நல்வரவு கூறலாம்.
கதை, கதாபாத்திரங்கள், காட்சியமைப்பு, தடம் புரளாத திரைக்கதை, திடுக்கிட வைக்கும் கிளைமாக்ஸ் எனப் பல விதங்களிலும் கவரும் இந்தப் படத்தின் பட்ஜெட் பெரிதாக அமைந்திருந்தால் மேலும் வலிமையாக வெளிப் பட்டிருக்கும்.
கிடைத்த வசதிகளுக் குள் பெருமளவில் செறிவாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘இளமி’ அழகான பண்பாட்டு நினை வூட்டல்.