

காதலில் பிரிவு என்பது ஓர் அங்கம். அந்தப் பிரிவுத் துயரைப் பாடாத கவிஞர்களே இருக்கமுடியாது.பிரிவாற்றாமை என்று ஒரு தனி அதிகாரமே இயற்றி இருக்கிறார் திருவள்ளுவர். காதலில் எல்லா நிலைகளையும் பாடிய கவியரசர் கண்ணதாசன் இதை மட்டும் பாடாமல் இருப்பாரா என்ன?
கவியரசர் கதை, வசனம் எழுதி 1960இல் தீபாவளிப் பண்டிகை வெளியீடாக வந்த படம் ‘மன்னாதி மன்னன்’. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நாட்டியப் பேரொளி பத்மினி, அஞ்சலிதேவி நடித்த ராஜா ராணி கதை. அதில் இடம் பெற்ற சாகா வரம் பெற்ற பாடல்கள் திரை இசைக்கடலில் அபூர்வ ரத்தினங்களாக இன்றளவும் ஒளிவீசிக் கொண்டிருக்கின்றன.
கதைப்படி, கணையாழி அணிவித்து காந்தர்வ மணம் செய்துகொண்ட நாயகன் (எம்.ஜி.ஆர்.) நாயகியை (பத்மினி) கடமை நிமித்தம் பிரிந்து செல்ல நேர்கிறது. சென்ற இடத்தில் அவனுக்கு ஆபத்து நேரிடுகிறது. அதனை உள்ளுணர்வு அவளுக்கு உணர்த்தவே தவிக்கிறாள் அவள். கூடவே பிரிவுத் துயர் இன்னும் தவிக்க வைக்கிறது. இதுதான் பாடலுக்கான கட்டம்.
கவிஞர் தொடங்குகிறார். இசைக்கு அவரது ஆருயிர் மெல்லிசை மன்னர்கள் என்கிறபோது உற்சாகத்திற்கு கேட்க வேண்டுமா என்ன.? பாடல் அருமையாக பிறந்து விட்டது. முதல் காட்சியின் முடிவுக்கான பின்னணி இசையையே - பாடலின் முகப்பிசையாக அமைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர். பாடல் தொகையறாவாக தொடங்குகிறது. நடபைரவி ராகத்தின் சாயலோடு .. இசைப்பேரரசி பி. சுசீலா அவர்களின் தேன்குரல் எடுத்த எடுப்பிலேயே உச்சத்தை தொட்டுவிடுகிறது.
'பதறிச் சிவந்ததே நெஞ்சம்
வழி பார்த்து சிவந்ததே கண்கள்
கதறிச் சிவந்ததே வதனம்
கலங்கி நடுங்கி குலைந்ததே மேனி'
மனதில் நிறைந்த நாயகனுக்கு ஒரு ஆபத்து. எதிரிகள் வசம் அவன் சிக்கி இருக்கிறான் என்ற எண்ணத்தில் அவள் நெஞ்சம் பதறிச் சிவக்கிறதாம். கவியரசரின் சொல்லாடல் இந்த தொகையறா வரிகளில் பிரமிக்க வைக்கிறது.
கண்கள் சிவந்திருப்பது.. அவன் சென்ற வழியையே பார்த்து பார்த்து உறக்கமே இல்லாமல் தவித்திருப்பதால் என்றால் அது சரிதான். ஆனால் கவியரசர் அதற்கு முன்பாகத் தொடங்கிய வரிகளாக 'பதறிச் சிவந்ததே நெஞ்சம்' என்கிறார். நெஞ்சம் சிவப்பது இதுவரை யாருமே கேள்விப்பட்டதே இல்லையே ? அது எப்படி!?
எந்த உணர்வுக்கும் அடிப்படை மனம்தான். உறக்கத்துக்கும் மனதுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மனம் ஒரு நிலையில் இல்லாவிட்டால் அங்கு உறக்கமே வராது. இங்கு அவளது கண்கள் அவனை காணாமல் சென்ற பாதையையே பார்த்து சிவந்திருக்கிறது. அவள் மனமோ ஒரு நொடிகூட விலகாமல் அவனையே நினைத்து உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கிறது. அதனால் கண்களுக்கு இணையாக மனமும் விழித்துக் கொண்டே இருப்பதால் அவனுக்கு ஏதோ நேர்ந்துவிட்டது என்று உள்ளுணர்வாக அறிந்ததும் கண்களுக்கு இணையாக மனமும் சிவந்துவிட்டதாம்.
ஏற்கெனவே தவிப்பில் மனமும் கண்களும் சிவந்திருக்க அவற்றின் பிரதிபலிப்பு முகத்தில் மட்டும் தெரியாமல் இருக்குமா என்ன? அகத்தின் அழகுதானே முகத்திலும் தெரியும். ஆகவே கதறிச் சிவந்தது அவள் வதனம். கதிகலங்கி நடுங்கி நிலைகுலைந்து போய்விட்டது அவளது மேனி என்று தொகையறாவில் அன்பு ஒன்றை மட்டுமே உயிரோட்டமாக வைத்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் மனநிலையை வெகு அற்புதமாக எளிமையான வார்த்தைகளில் வடித்துவிடுகிறார் கவியரசர்.
இதன் பிறகு பாடலைத் தனது ஆளுமைக்குள் கொண்டுவந்து விடுகிறார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
விறுவிறுப்பான வயலின்களின் வீச்சு காட்சிக்கான பின்னணி இசையாகவும் அதே நேரம் பாடலுக்கான முகப்பிசையாகவும் அமைந்து இடை இடையே சித்தாரின் மீட்டலும் கேட்கும் செவிகளுக்கு நல்விருந்தாக அமைய இசைப்பேரரசி பி. சுசீலா அவர்களின் ராஜாங்கம் தொடங்கிறது.
பிரிவுத்துயர் அவளை வருத்துகிறது. ஏக்கம் பல்லவியாக உருமாறுகிறது.
அவனோடு ஒன்றாக இருந்த நாட்களில் பல நேரங்களில் கண்களாலேயே இருவருக்குள்ளும் வார்த்தைப் பரிமாற்றங்கள் நடந்திருக்க வேண்டும். இப்போது போல் அலைபேசி யுகமா என்ன? எங்கிருந்தாலும் இந்த நாளில் இன்ன நேரத்தில் வந்து சேருவேன் என்று தகவல் சொல்வதற்கு? ஆகவே உன்னை என்று என் கண்கள் சந்தித்து மீண்டும் பேசுமோ? நாம் ஒன்றாக மீண்டும் இணைவது என்பது காலத்தின் கையில் அல்லவா இருக்கிறது? அது நம்மை ஒன்று சேர்க்குமோ இல்லை நிரந்தரமாக பிரித்தே விடுமோ என்று மயக்க அணி வகையில் பல்லவியைத் தொடங்குகிறார் கவிஞர்.
'கண்கள் இரண்டும் என்று உன்னைக் கண்டு பேசுமோ
காலம் இனிமேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ.'
பல்லவியின் இரண்டாவது வரியின் கடைசியில் வரும் 'ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ' என்ற இடத்தில் பி. சுசீலா அவர்களின் குரலில் வெளிப்படும் நயமான பாவம் மிளிரும் சங்கதிகள் ..மனதில் பிரிவின் துயரை ஊடுபாவாக நெசவு செய்து பரவ விடுகின்றன.
பல்லவி முடிந்த பிறகு வரும் இணைப்பிசையில் பிரமிக்க வைக்கிறார் மெல்லிசை மன்னர்.
விறுவிறுப்பான வயலின் இசை ஒரு கோர்வையில் இயங்க அதற்கு இணையாக காற்றிசை வாத்தியம் (either it may be trumpet or clarinet) மந்தர ஸ்தாயியில் (low base) வேறு ஒரு இசைக்கோர்வையோடு வயலினின் விறுவிறுப்புக்கு ஈடுகொடுத்து பத்து நொடிகள் இணையாக பயணிக்கும் அழகு - ஒரே நேரத்தில் காட்சிக்கான பின்னணி இசையாகவும், பாடலுக்கான இணை இசையாகவும் அமைந்து கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்தாகிறது.
அவள் மேலே சொல்கிறாள்.
'நான் ஒரு கிளியாக பிறந்திருந்தால் பறந்துவந்து உன்னைத் தேடி கண்டுபிடிப்பேன். தென்றல் காற்று என்னும் தேரில் ஏறி ஓடி உன்னிடம் வந்துவிடுவேன். என்ன செய்வது? பெண்ணாக பிறந்துவிட்டேனே.? நீ சென்ற இடத்தை நினைத்து என் சிந்தை வாட நிற்கிறேன். என்னை தேடி வருபவர்கள் எல்லாருமே 'என்னம்மா உன் நாயகன் உன்னை விட்டு போய்விட்டானாமே.? எப்போ வருவதா சொல்லி இருக்கிறான்?' என்று ஏதோ அக்கறையோடு பேசுவதுபோல வம்பளக்கத்தான் வருகிறார்களே தவிர யாராவது ஒருவராவது,'நான் வேண்டுமானால் அவர் இருக்கிற இடத்துக்கு உனக்காக போய்ப்பார்த்து உன்னைப்பற்றி செய்தியை சொல்லி தூது போய்வருகிறேன்' என்று சொல்கிறார்களா என்றால்.. ஹூஹூம்.. ஒருவர் கூட இல்லை.' என்று மனம் வருந்துகிறாள் அவள்.
'பச்சைக்கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடிவரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
சென்ற இடம் காணேன் சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது சொல்லக்காணேன்'
தொடர்ந்து சரணத்தின் முதல் இரண்டு வரிகளாக..
'நின்ற இடம் யாவும் நிழல் போல தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே'
என்று அவளது எண்ணங்களை வார்த்தெடுத்த நேரத்தில் சட்டென்று கவியரசரின் மனதில் கம்பனும் அவன் படைத்த ஆதி காவியமாம் ராமாயணமும் வந்து போகின்றன. இங்கு கதாநாயகியின் கையில் மோதிரம் அணிவித்து காந்தர்வ மணம் புரிந்திருக்கிறான் கதாநாயகன். அசோகவனத்தில் இருக்கும் சீதாதேவியைக் காணச்செல்லும் அனுமனுக்கு தன்னை உணர்த்த உதவியது ராமன் கொடுத்தனுப்பிய கைவிரல் மோதிரம் தானே. . அங்கும் ஒரு கணையாழி. இரண்டிலுமே கணையாழி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே ராம கதையையும் சீதாதேவியின் பிரிவுத் துயரையும் பாடலில் இணைக்கவேண்டும். தனது கதை நாயகியை காப்பிய நாயகிக்கு நிகராக உயர்த்த வேண்டும் என்று கருதியோ என்னவோ சுந்தர காண்டத்தின் சாரத்தை இரண்டே வார்த்தைகளில் சொல்லி முடித்துவிடுகிறார்.
ராமன் கொடுத்த கைவிரல் மோதிரத்தை சீதாப்பிராட்டியிடம் கொடுத்த அனுமன் இரண்டே வார்த்தைகளில் அவரிடம் சொல்வதாக கவியரசர் சொல்கிறார்:
'கணையாழி இங்கே மணவாளன் அங்கே' -
அதற்கு சீதாதேவியின் பளிச்சென்ற பதில் அடுத்த வார்த்தையில் ..
'காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே?'
- அவ்வளவுதான் சுந்தரகாண்டம் முழுவதும் இந்த இரண்டே வரிகளுக்குள் அடங்கி விடுகிறது.
இப்போது இந்தப் பாடல் முழுவதையும் சீதா தேவி - அனுமன் சந்திக்கும் கட்டத்தோடு கற்பனை செய்து பாருங்கள்.
இராமாயண சுந்தர காண்டம் முழுவதுமே கண்முன் நிழற்படமாக விரியும்.
இப்படி ஒரு பிரிவுத் துயரை பிரதிபலிக்கும் திரைப்படப் பாடலுக்குக் காப்பிய அந்தஸ்தைப் பெற்றுக்கொடுக்க கவியரசரால் மட்டுமே முடியும் என்று நிரூபித்த இந்தப் பாடல் திரை இசைக்கடலில் ஒரு நற்பவழமாகக் காலத்தை வென்று ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.
(தொடர்ந்து முத்தெடுப்போம்...)