

கன்னடத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்ற ‘காந்தாரா’ திரைப்படம் பிற மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சூழலில், படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் ‘பூத கோல’ வழிபாட்டு முறையைப் பற்றி சர்ச்சையான கருத்தைத் தெரிவித்திருக்கிறார் படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டி.
மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசு ஒருவர் பூர்வகுடி மக்களின் நிலத்தை அபகரிக்கத் திட்டமிடுகிறார். அதைப் பற்றி அறிந்து கொள்ளும் ஊர் மக்கள் இத்திட்டத்தை முறியடித்தார்களா, இல்லையா என்பதுதான் படத்தின் கதை. கடலோர கர்நாடகமான உடுப்பியின் கிராமத்தில் நடக்கும் கதையாகப் படமாக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களின் நம்பிக்கைகளில் ஒன்றுதான் இந்தப் ‘பூத கோல’ ஆட்டம். இதில், தெய்வ வேடம் அணிந்தவர் ஊர் மக்கள் முன்பு நடனமாடி கதை சொல்வர்.
படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இந்தப் ‘பூத கோல’ ஆட்டம் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது. திரைக்கதை எழுதி, இயக்கி, நடித்திருக்கும் ரிஷப் ஷெட்டி க்ளைமேக்ஸ் காட்சிகளில் ‘பூத கோல’ ஆட்டத்தை மிகச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், சமீபத்தில் பத்திரிகைக்குப் பேட்டி அளித்திருந்த பேட்டி ஒன்றில் ரிஷப் ஷெட்டி, “பூத கோல ஆட்டம் இந்து மரபுகளின் ஓர் அங்கம்” எனக் கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
படத்தில் பூர்வகுடி மக்களை காக்கும் பஞ்சுருளி தெய்வம் இந்து கலாச்சாரத்தைச் சேர்ந்தக் கடவுளாகக் காட்டப்பட்டுள்ளது. இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ”அந்தத் தெய்வங்கள் நம் கலாச்சாரத்தின் ஓர் அங்கம். இவை கண்டிப்பாக இந்து கலாச்சார மரபுகளின் கீழ் வருபவைதான். நான் ஓர் இந்து. எனது மதத்தின் மீது எனக்கு மரியாதையும் நம்பிக்கையும் உண்டு. அதற்காக மற்ற மதத்தினரை தவறாகச் சொல்ல மாட்டேன். இந்து மதத்தில் பின்பற்றப்படும் மரபுகளைத்தான் நாங்கள் படத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
ரிஷப் ஷெட்டியின் இந்தக் கருத்து சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி உள்ளது. இந்து கலாச்சாரத்தில் கடவுளர் விஷ்ணு ஓர் அவதாரமாகப் பஞ்சுருளி தெய்வத்தைப் படத்தில் காட்டியிருப்பது உண்மைக்கு முரணாக இருப்பதாகப் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். பஞ்சுருளி தெய்வம், துளு பகுதி மக்களின் நாட்டார் தெய்வம் என்றும், இந்து தெய்வங்களைப் போல நாள்தோறும் வழிபடும் முறை இல்லை என்றும் வரலாற்று ஆய்வுகளை மேற்கோள்காட்டி பலர் பதிவிட்டு வருகிறார்கள். நாட்டார் தெய்வங்களை இந்து கலாச்சாரத்திற்குள் கொண்டு வந்து படத்தில் காட்டப்படுவதற்கு தொடர்ந்து கண்டனங்கள் முன்வைக்கப்படுவது கவனிக்க வைக்கிறது.