

புத்தாயிரத்தில், இங்கிலாந்திலிருந்து தமிழ் சினிமாவுக்கு பிரிட்டிஷ் பெண்ணான எமி ஜாக்சனை அழைத்து வந்து கதாநாயகி ஆக்கினார் இயக்குநர் விஜய். தற்போது எமியை விட அழகான தோற்றம் கொண்ட மரியா என்கிற உக்ரைன் நாட்டுப் பெண்ணை தேடிப் பிடித்து வந்து ’பிரின்ஸ்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக்கியிருக்கிறார்கள். சமீபத்தில் நடந்த ’பிரின்ஸ்’ பிரஸ் மீட்டில் அத்தனை கண்களும் மரியாவின் மீதுதான் கவிந்திருந்தன. மரியா உக்ரைன் பெண்ணாக இருந்தாலும் படத்தில் ’பிரிட்டிஷ் பெண்’ கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்தி நடித்திருக்கிறாராம். இந்தப் படத்துக்காகவே நடனமும் தமிழும் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். தமிழில் கேள்வி கேட்டாலே நச்சென்று பதில் சொல்கிற அளவுக்கு தயாராகிவிட்ட மரியாவுக்கு, இந்நேரம் மதுரை ரசிகர்கள் மன்றம் தொடங்கியிருந்தாலும் ஆச்சர்யமில்லை!
தமிழ்ப் பட போட்டி: டிசம்பரில் களைகட்டும் சென்னை சர்வதேசப் படவிழாவில் ’தமிழ் படங்களுக்கென்றே நடத்தப்படும் போட்டி ஆண்டுதோறும் வளர்ந்துகொண்டே வருகிறது. அந்தப் பிரிவில் போட்டியிட்டு, சிறந்த படம் முதலிடம், சிறந்த படம் இரண்டாமிடம், ஸ்பெஷல் மென்ஷன் ஜுரி விருது, அமிதாப் பச்சன் ’யூத் ஐகான்’ விருது ஆகிய பிரிவுகளின் கீழ் வெல்லும் படைப்புகளுக்கு ரூபாய் 7 லட்சம் ரொக்கப் பரிசு, விருது ட்ராபி, சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இதில், அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்களின் டிப்ளமா படங்களுக்கு வழங்கப்படும் விருதுகளும் பரிசுகளும் தனி.
“2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்ப் பட போட்டிப் பிரிவுக்கு இதுவரை 15 திரைப்படங்கள் மட்டுமே வந்துள்ளன. ஆனால், இந்த ஆண்டு வந்துள்ள சிறந்த படங்களின் எண்ணிக்கை முப்பதைத் தாண்டும். இந்த அரிய வாய்ப்பினை தரமானப் படைப்புகளைத் தந்த படைப்பாளிகளும் தயாரிப்பாளர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். படங்களை விரைந்து அனுப்ப வேண்டுகிறோம்” என்று அழைப்பு விடுக்கிறார் சென்னை சர்வதேசப் பட விழாவை ஒருங்கிணைத்து வரும் இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation) திரைப்படச் சங்கத்தின் செயலாளரான தங்கராஜ்