

‘கழுகு’ தொடங்கி இதுவரை ஐந்து படங்களை இயக்கியிருக்கும் சத்யசிவா. சசிகுமார் நடிப்பில் ‘நான் மிருகமாய் மாற’ என்கிற தனது ஆறாவது படத்தை இயக்கியிருக்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து..
சசிகுமார் நடிக்கும் படம் ஒன்றுக்கு ‘நான் மிருகமாய் மாற’ என்கிற தலைப்பு ஆச்சர்யமூட்டுகிறது! அவரை ‘மாஸ் கமர்ஷியல் ஆக் ஷ’னுக்கு இழுத்திருக்கிறீர்களா?
சசிகுமார் சார் என்றாலே குடும்பக் கதை, அதில் ஆக் ஷன், சென்டிமெண்ட் இருக்கும். அவரது படங்களில் இடம்பெறும் வன்முறைக் காட்சிகளிலும்கூட நம்பக்கூடிய யதார்த்தம் இருக்கும். இந்தப் படத்தைப் பொறுத்தவரை, ஒரு சாமானிய மனிதன் ‘எக்ஸ்ட்ரீம் வயலெண்ட்’ ஆக மாறினால் அவன் கையிலெடுக்கும் வன்முறை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதைச் சொல்லவே இந்த தலைப்பு. முதலில் ‘காமன் மேன்’ என்றுதான் தலைப்பு வைத்திருந்தோம். ஆனால் அது கிடைக்கவில்லை.
வன்முறைக் காட்சிகளை எப்படி சித்தரித்திருக்கிறீர்கள்?
தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் வன்முறைக் காட்சிகளை மிகவும் ‘கச்சாத் தன்மை’யுடன் சித்தரிக்கும் போக்கு உருவாகியிருக்கிறது. அது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவும்படுகிறது. அந்த ‘கரண்ட் டிரெண்ட்’டை இதிலும் ‘ஃபாலோ’ செய்திருக் கிறேன். நிஜ வாழ்க்கையில் ஒத்தைக்கு ஒத்தை அடித்துக்கொள்ளும்போது எப்படிப்பட்ட வன்முறை பிரயோகிக்கப்படுமோ அதுதான் இந்தப் படத்திலும் இருக்கிறது. குடும்பத்துடன் பார்க்க வருகிறவர்கள் அதிர்ச்சியடையவோ அருவருக்கவோ செய்யும் விதமாகச் சித்தரிக்கவில்லை. அதை ஒரு இயக்குநராகவும் இருக்கும் சசிகுமாரே விரும்ப மாட்டார்.
இதில் சசிகுமாரின் கதாபாத்திரம் பற்றிக் கூறுங்கள்..
முந்தைய படங்களில் அவர் ஏற்ற கதா பாத்திரங்களில் இருக்கும் மென்மையை இந்தப் படத்தின் கதாபாத்திரத்தில் பார்க்க முடியாது. இதில் அவருக்கான வசனம் மிகக் குறைவு. அவர் ‘ஃபெர்பாம்’ செய் வதற்கான இடங்கள்தான் அதிகம். கோடம்பாக்கத்தில் தொழில்முறை சவுண்ட் இன்ஜினியராக தனது வேலையில் கண்ணும் கருத்துமாக பணிபுரியும் ஒரு ‘காமன் மேன்’ கேரக்டர்தான் சசிகுமார் ஏற்றிருப்பது. நாயகன் தனக்குத் தொடர்பே இல்லாமல் சந்திக்கும் கசப்பான சம்பவங்களால் எப்படிக் கொந்தளிக்கிறார், அதன் விளைவுகள் எப்படி அமைகின்றன என்பதுதான் கதை. நடிப்பில் பிரித்து மேய்ந்திருக்கிறார் சசி சார். அவருடன் போட்டிப் போட்டு, கதாநாயகியாக நடித்திருக்கிறார் ஹரிப்ரியா. வில்லன் வேடத்தை விக்ராந்த் ஏற்றுள்ளார். கதையோட்டத்தில் பாடல்களுக்கு இடமில்லை.
உங்களுடைய தொழில்நுட்பக் குழு..
ஒளிப்பதிவு செய்துள்ள ராஜா பட்டச்சார்ஜி, பின்னணி இசை தந்துள்ள ஜிப்ரான், படத்தொகுப்பு செய்துள்ள காந்த் என்.பி,சண்டைக் காட்சிகளை அமைத்துள்ள மகேஷ் மேத்யூ ஆகியோர் கதைக்குத் தேவையான சிறந்த பங்களிப்பை அளித்திருக்கிறார்கள். செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டி.டி. ராஜா, டி.ஆர். சஞ்சய் குமார் இணைந்து படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். நவம்பரில் திரையரங்குகளில் வெளியாகிறது.