

திரை இசைக்கடலில் அபூர்வமான முத்துக்களும் பவழங்களும் அள்ள அள்ளக் குறையாத அளவுக்கு இருக்கின்றன. அவற்றில் அனைத்து இசை அமைப்பாளர்களுக்கும் சம பங்கு உண்டு. என்றாலும் ஐம்பதுகளின் இறுதியில் தொடங்கி தமிழ்த் திரையிசை உலகை ஆக்கிரமித்த மெல்லிசை மன்னர்கள், திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவன் ஆகியவர்களின் மீது விழுந்த புகழ் வெளிச்சத்தில் மற்ற இசை அமைப்பாளர்கள் சற்று மங்கிப் போனார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
இன்னார் தான் இசை அமைத்த பாடல் என்று சொல்ல முடியாத ஒரு பாடலை புதிதாக ஒருவரைக் கேட்கவைத்து "இந்தப் பாட்டுக்கு இசை அமைத்தவர் யார் என்று சொல்ல முடியுமா?" என்று கேட்டால் அவர் கண்டிப்பாக எம்.எஸ்.வியின் பெயரையோ, கே.வி.மகாதேவனின் பெயரையோ தான் சொல்வார். அந்த அளவுக்கு தங்கள் இசையால் அனைவரையும் வசப்படுத்தி வைத்திருந்தார்கள் இந்த இருவரும்.
இந்த விதிக்கு விலக்காக அமைந்த இசை அமைப்பாளர் ஒருவர் இருந்திருக்கிறார் என்றால் அவர் தாதநேனி சலபதிராவ் எனப்படும் டி. சலபதிராவ் தான். இவரது இசை அமைப்பில் வெளிவந்த பாடல்களைக் கேட்டோமென்றால் அதை வேறு எந்த இசையமைப்பாளருடனும் தொடர்புபடுத்திப் பார்க்க முடியாது.
பாடல்களைக் கேட்க வைத்துவிட்டு, 'இசை அமைத்தவர் யார்?' என்று கேட்டோமானால் 'தெரியாது' என்ற பதில் தான் வந்தாலும் வருமே தவிர அந்தப் பெருமையை வேறு எந்த இசை அமைப்பாளருக்கும் கொடுத்துவிட முடியாது. அந்த அளவிற்கு தனித்துவமான இசை அவருடையது.
தமிழில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு இசை அமைத்திருந்தாலும் நெஞ்சை விட்டு அகலாத இசையை - அதிலும் குறிப்பாக மண்மணம் மாறாத இசையை கொடுத்தவர். பொதுவாக தெலுங்கு தேசத்திலிருந்து வந்த இசை அமைப்பாளர்கள் என்றால் பாடலில் ‘கோங்குரா’ வாசம் சற்றுத் தூக்கலாகத்தான் இருக்கும். ஆனால் சலபதிராவ் அவர்கள் இசை அமைத்த தமிழ்த் திரைப்படப் பாடல்களைக் கேட்டோமானால் கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்தால் கூட அவை ஆந்திர தேசத்து இசை அமைப்பாளரின் பாடல் என்று நம்பவே முடியாது. அந்த அளவுக்குத் தமிழ் மண்ணின் மணம் குன்றாத பாடல்கள் அவை.அந்த இசை முத்துக்களில் சிலவற்றை தொடர்ந்து ரசிப்போமா?
1956ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘அமர தீபம்’ படம். பின்னாளைய புதுமை இயக்குநர் ஸ்ரீதர் அவர்களின் கைவண்ணத்தில் வெளிவந்த ஒரு முக்கோணக் காதல் கதை.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகையர் திலகம் பத்மினி, நாட்டியப் பேரொளி பத்மினி, எம்.என். நம்பியார் ஆகியோரின் அற்புதமான நடிப்பில் டி.பிரகாஷ் ராவின் தேர்ந்த இயக்கத்தில் வெளிவந்த வெற்றிப்படம். அதில் முதல் முதலாக காதல் அரும்பிய நாயகனும் நாயகியும் இணைந்து பாடும் ஒரு இப்பாடல்.
கவிஞர் கே.பி.காமாட்சி சுந்தரம் (பராசக்தி படத்தில் பூசாரியாக வருவாரே..அவரேதான்!) எழுதிய பாடல் வரிகளுக்கு மனதுக்கு ரம்மியமான சுருதியில் மோகன ராகத்தில் அற்புதமாக தனது இசையால் உயிர் கொடுத்திருக்கிறார் டி. சலபதிராவ்.
இனி பாடலின் நயங்களை பார்ப்போம்:
இந்தப் பாடல் முழுவதும் பிறிது மொழிதல் அணி நயத்திலேயே அமைந்திருக்கிறது.
நாயகியின் மனம் ஆனந்தத்தால் நிரம்பி இருக்கிறது. உற்சாகமும் துள்ளலும் தான். காரணம். அவள் மனம் கவர்ந்த அவன் அவள் அருகில் இருக்கிறான் அல்லவா? அதுதான் காரணம். ஆனால் அந்தக் காரணம் அவளுக்கு தெரியவில்லை போலும்.
மலரில் தேனை உண்ணும் வண்டுக்கு மலரைக் கண்டதும் ஒரு ஆனந்தம் பிறக்குமல்லவா? அந்த மலரை நெருங்குவதும் ஒரு கணம் அமர்வதும் விலகுவதும் என்று சந்தோஷத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் ரீங்காரம் இசைத்து அலைகிறதே.. அதன் காரணம் என்னவென்று யாரைக் கேட்பது? மலரைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு இருக்கிறதே பூங்கொடி அதனைக் கேட்கிறாள் அவள்.
'தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு
திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு
பூங்கொடியே நீ சொல்லுவாய்.'
என்று பூங்கொடியை கேட்கிறாள் அவள். இது பாடலின் பல்லவி.
பல்லவி முடிந்ததும் வரும் இணைப்பிசையில் மாண்டலின், வயலின், புல்லாங்குழல் ஆகிய இசைக்கருவிகளை மனதுக்கு ரம்மியமாக இணைத்திருக்கிறார் சலபதி ராவ். தொடரும் சரணத்தில் அவளது மனதை கொள்ளை கொண்ட நாயகன் பதில் அளிக்கிறான். அதையும் கேள்வியோடு முடிக்கிறான்.
தென்றல் காற்றில் பூங்கொடியானது சலசலக்கிறதே அதுபோல என் அருகாமையில் உற்சாகத்தில் மிதக்கும் பூங்கொடியைப் போன்றவளே. இதில் புதிதாக ஒன்றுமே இல்லையே.வீணையில் உறங்கிக்கிடக்கும் நாதமானது அதை மீட்டுபவரின் கைவிரலில் தான் இருக்கிறது. அதுபோல உனது மனதின் மகிழ்ச்சி அதை மீட்டும் என்னிடம் தான் இருக்கிறது. என்று உவமானத்தை மட்டும் சொல்லி குறிப்பால் உணர்த்துகிறான் அவன்.
'வீணை இன்ப நாதம் மீட்டிடும் வினோதம்
விரலாடும் விதம் போலவே..
காற்றினிலே தென்றல் காற்றினிலே
காற்றினிலே சலசலக்கும் மெல்லிய பூங்காற்றே.
புதுமை இதில் தான் என்னவோ...
என்று சொன்னவன் இப்போது அவளுக்கு மறுகேள்வியை வைக்கிறான்
'விண்மீன்கள் நிலவும் வானில் தோன்றும் வெண்ணிலாவைப் பார்த்ததும் புதிதாக எழும்பும் கடலை அலைகள் சந்தோஷத்தில் மிதக்கின்றனவே. இதற்கு என்ன காரணம்?' என்று மென்மையாக வீசும் காற்றைக்கேட்கிறான் அவன்.
'மீன் நிலவும் வானின் வெண்மதியைக் கண்டு ஏன் அலைகள் ஆடுவதும் ஆனந்தம் கொண்டு.. பூங்காற்றே நீயே இதற்கு பதில் சொல்' என்கிறான் நாயகன்.
அவள் சளைக்காமல் சொல்கிறாள்.
காட்டில் இருக்கும் மயிலானது வானில் வரும் வெண்முகிலைக் கண்டதும் களித்தாடுகிறதே.. ஆனால் நீயோ நம் இருவரின் கண்கள் கலந்த பிறகு ஏற்படும் காதல் எனும் இன்பத்தை அறிந்துகொள்ளாமல் இருப்பது ஏனோ என்று இருவரும் பாடுகின்றனர்.
'கானமயில் நின்று வான் முகிலைக் கண்டு
களித்தாடும் விதம் போலவே..
கலை இதுவே வாழ்வின் கலை இதுவே
கலை இதுவே கலகலென்னும் மெல்லிய
பூங்காற்றே காணாததும் ஏன் வாழ்விலே.
கண்ணோடு கண்கள் பேசிய பின்னாலே
காதலின்பம் அறியாமல் வாழ்வதும் ஏனோ
கலைமதியே நீ சொல்லுவாய் .. ஓ.. ஓ.. ஓ..’
மாண்டலின், வயலின், புல்லாங்குழல், தபேலா ஆகிய நான்கே நான்கு இசைக் கருவிகளை பயன்படுத்தி செவிகளுக்கு ரம்மியமாக அமைந்த உற்சாகம் பொங்கித்ததும்பும் இசை, வார்த்தைகளை சிதைக்காத நயம், இசை அரசி பி. சுசீலா - ஏ.எம். ராஜா இருவரின் இனிமையான குரல் வளம், அனைத்தும் ஒருங்கே சேர்ந்த இந்த வெற்றிப்பாடலைக் கேட்கும்போது நம் மனமும் தேன் உண்ணும் வண்டாக ஆட ஆரம்பிக்கிறதல்லாவா?
இதுவே சலபதிராவ் அவர்களின் வெற்றி.
(தொடர்ந்து முத்தெடுப்போம்)
| தாதநேனி சலபதிராவ் |
பிறந்த தினம் : டிசம்பர் 22 - 1920 |