

இயக்குநர் ப்ரியா.வி-யிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்தவர் ராகவ் மிர்தாத். அனுஷ்கா நடித்த ‘சைஸ் ஸீரோ’, தேசிய விருதுபெற்ற ‘பாரம்’ ஆகிய படங்களுக்குத் திரைக்கதை, வசனம் எழுதியவர், பிரசாத் ஸ்டுடியோவின் கிராஃபிக்ஸ் பிரிவில் ஐம்பதுக்கும் அதிகமான படங்களுக்கு ‘விஷுவல் எஃபெக்ட்ஸ் சூப்பர்வைச’ராக பணிபுரிந்தவர் எனக் கலவையான அனுபவங்களைக் கொண்டவர். ‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
படத்தின் போஸ்டர்களில் பட்டாம்பூச்சி சிறகடிக்கிறதே?
இப்படத்தின் நாயகன் யதார்த்தத்துக்கு மாறாக வானில் பறக்க நினைக்கும் ஒரு ஜாலி பேர்வழி. அவனைப் பட்டாம்பூச்சியாக உருவகப் படுத்தியிருக்கிறேன். எல்லாக் காதல் கதைகளும் வழக்கமாகக் கல்யாணத்தில் முடியும். ஆனால், இந்தக் கதை கல்யாணத்துக்குப் பிறகான காதலைப் பற்றிப் பேசுகிறது. இக்கதையின் நாயகன் ஷ்யாம், காதலை எப்படிப் பார்க்கிறான், தனது பார்வையிலிருந்து விலகி அவன் உணர்ந்துகொண்ட காதலின் உண்மையான பரிமாணம் என்ன என்பதுதான் திரைக்கதை. இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்வதென்றால், கூட்டுப்புழு பருவத்தில் ஒரு பட்டாம்பூச்சியைப் பார்ப்பதற்கும், கூட்டிலிருந்து வெளியே வந்து, சிறகுகள் முழுமையாக வளர்ந்து சிறகடிக்கும் ஒரு பட்டாம்பூச்சியைப் பார்ப்பதற்கும் வேறுபாடு உண்டு. அப்படிப்பட்ட ஒரு வளர்சிதை மாற்றத்தை எட்டும் நாயகனின் கதைதான் இந்தப் படம்.
இந்த மாற்றத்தை தருவதில் கதாநாயகியின் பங்கு என்ன?
‘காலங்களில் அவள் வசந்தம்’ என்கிற படத்தின் தலைப்பே அதைச் சொல்லும். நாயகனுக்கு இணையாக கதையில் நாயகிக்கும் பங்கு இருக்கிறது. ‘ஃபீமேல் செண்ட்ரிக்’ கதை என்றும் தைரியமாகச் சொல்ல முடியும். வாழ்க்கையின் எல்லா தருணங்களையும் தான் பார்க்கும் திரைப்படங்களுடன் பொருத்திப் பார்க்கும் ‘ஃபாண்டஸி’ மனது கொண்ட ‘ரீல்’ பையன் நாயகன் என்றால், ‘கிரவுண்ட் ரியாலிட்டி’ உணர்ந்த ‘ரியல்’ பொண்ணுதான் நாயகி.
நாயகன் - நாயகியாக நடித்திருப்பவர்களைப் பற்றிச் சொல்லுங்கள்..
‘ஷ்யாம்’ கேரக்டரில் சிறப்பாக நடித் திருப்பவர் கௌசிக் ராம். திறமையான அறிமுக நடிகர். கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றவர். நாயகியாக ‘ராதே’ என்கிற கேரக்டரில் ‘நெடுநெல்வாடை’, ‘டாணாக்காரன்’ படங்களில் சிறந்த நடிப்புக்காகப் புகழ்பெற்ற அஞ்சலி நாயர் நடித்திருக்கிறார்.
தொழில்நுட்பக் குழு...
கோபி ஜகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் மூலம் ஹரி இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். லியோ ஜான் பால் படத்தொகுப்பு செய்திருக்கிறார். அறம் எண்டர்டெயின்மெண்ட் - ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். அக்டோபர் 29ஆம் தேதி தமிழ்நாடெங்கும் வி ஸ்கொயர் எண்டர்டெயின்மென்ட் திரையரங்குகளில் படத்தை வெளி யிடுகிறது.