

தொலைக்காட்சியில் ஏதாவது நிகழ்ச்சியில் பங்கு கொள்வது இன்று பெருமைக்குரிய விஷயமாக கருதப்படுவதைப்போல அறுபதுகளில் வானொலி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதென்பது பெருமைக்குரிய விஷயம்.
"சார். இன்னிக்கு ஆல் இந்தியா ரேடியோவில் நான் மத்தியானம் அரை மணி நேரம் பாடறேன் சார். கண்டிப்பா கேளுங்கோ." என்பார் ஒரு பாடகர். அந்த நண்பரோ மட்ட மத்தியான நேரத்தில் அலுவலகத்தில் இருப்பார்! அதிலும் இந்த நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் இது ஒரு போபியாவாகவே இருந்தது.
"எங்க பப்பிக்குட்டி இன்னிக்கு ‘பாப்பா மலர்’ நிகழ்ச்சியில் பாடப்போறா?" ..
ஒரு இரண்டு நிமிட ரைம்ஸ் ஒப்பிக்கும். அதிலும் ஒன்றரை நிமிடம் மலங்க மலங்க விழித்துக்கொண்டு நிற்கும்.. தொகுப்பாளினிதான் ஒன்றாம் வகுப்பில் படித்த ‘ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்’ ரைம்ஸை அட்சரம் பிசகாமல் ஒன்றரை நிமிடம் பாட ‘லிட்டில் ஸ்கை’ என்று கடைசி வரியை மட்டும் கூடச் சேர்ந்து சொல்லி முடிக்கும் அந்தக் குழந்தை. ‘வெரி குட்’ ரொம்ப நல்லா பாடிட்டே.’ என்று விதியை நொந்து கொண்டு சொல்லி தொகுப்பாளினி நிகழ்ச்சியை முடித்து வைப்பார்!
இந்த போபியாவை தனது கதையில் புகுத்திய பெருமை அப்போதைய நடுத்தர வர்க்கத்தை படம் பிடித்துக் காட்டுவதில் வல்லவரான இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரைத்தான் சேரும்.
1966ஆம் ஆண்டு கே. பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த ஏ.வி.எம் நிறுவனத் தயாரிப்பான 'மேஜர் சந்திரகாந்த்' படத்தில் இப்படி ஒரு காட்சியை நகைச்சுவையாக - அதே நேரத்தில் - கதாநாயகியின் - மனப்போராட்டத்தை சித்தரிக்கும் காட்சியாக அமைத்திருக்கிறார் அவர்.
பாலச்சந்தரின் படங்கள் என்றால் பாடலாசிரியருக்கு சவாலாக காட்சி அமைப்பு இருக்கும். இந்தக் காட்சி அப்படிப்பட்டதுதான்.
மோகன் (நகைச்சுவை சக்கரவர்த்தி நாகேஷ்) ஒரு தையற்கலைஞன். அவனது தங்கை (கலைச்செல்வி ஜெயலலிதா) ரேடியோவில் பாடப்போவதாக அக்கம் பக்கத்தில் சொல்லி பெருமை அடித்துக்கொள்கிறான் அவன். அக்கம் பக்கத்தினர் அனைவரையும் தனது வீட்டுக்கு அழைக்கும் மோகன், விட்டில் பழுதாகிவிட்ட வானொலிப் பெட்டியின் முன்னால் அமர வைத்துவிட்டு, உள்ளே தங்கையை பாட வைத்து நாடகமாடி சமாளிக்கிறான். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு மறைமுகமாக அண்ணனிடம் தனது காதலை தங்கை வெளிப்படுத்தவேண்டும்.
இப்படி ஒரு காட்சி அமைப்பு கவிஞர் வாலியின் முன் வைக்கப்பட அவரும் பாடலின் அங்கங்களை மையமாக வைத்தே பல்லவியை அற்புதமாக அமைத்துக்கொடுக்க மெல்லிசை மாமணி வி. குமாரின் சிறப்பான இசையமைப்பில் இசை அரசி பி. சுசீலாவின் மென்குரல் காதல் வயப்பட்ட பெண்ணின் ஆழமான உணர்வுகளை அருமையாகப் பிரதிபலிக்கும் பாடலாக அது உருவாகி விட்டது.
அந்தப் பாடல் தான் ‘ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ’ என்று துவங்கும் பாடல்.
அவள் காதல் வயப்படுவதற்கு முன்னால் அவன் யார் என்றே தெரியாது? இனம் என்ன குலம் என்ன? ஏழையா பணக்காரனா என்று எதுவுமே தெரியாது. எந்த வித சொந்தபந்தமும் உள்ளவனும் அல்ல. கண்டு காதல் வயப்பட்ட அந்த நிமிடம் வரை அவன் அந்நியன் தானே! அதனால் அண்ணனிடம் தனது அவனைப் பற்றி ஒரு தோழியிடம் பகிர்ந்து கொள்வது போல ‘அவன் யாரோ எனக்கு தெரியாது. ஒரு நாள் வந்தான் ஒரு பாடல் சொல்லித்தந்தான்.அதுவும் என்ன பாடல் என்றே எனக்கு தெரியாது. அவ்வளவு அப்பாவியாக வெகுளியாக நான் இருந்திருக்கிறேன்.’- என்கிறாள் அவள்.
சரி பாடல் என்றால் அதற்கு ராகம், தாளம் எல்லாம் இருக்கவேண்டுமல்லவா..- அதெல்லாம் இருக்கிறதா? - இது அவளது மானசீக தோழி. ‘ஓ. இருக்கிறதே அவை என் கண்ணுக்குள்ளும் மனதிற்குள்ளும் இருக்கின்றன: ஆனால் அவை என்ன ராகம் தாளம் என்று தான் தெரியவில்லை. உனக்கு தெரிந்தால் சொல்லேன்’என்கிறாள் அவள்.
இதோ முழு பல்லவி.
'ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ
கண்ணுக்குள் ராகம் நெஞ்சுக்குள் தாளம் என்னென்று சொல் தோழி'
ராகம் என்பது எந்த வாத்தியக்கருவியும் இல்லாமல் இருப்பது. தாளமோ தட்டும் வகையைச் சேர்ந்தது. இங்கு கண்கள் சிமிட்டும் போதோ , பார்க்கும் போதோ எந்த ஒலியும் எழுப்புவதில்லை. ஆனால் இதயத்துடிப்பு மட்டும் சீரான தாள லயத்துடன் ஒலிக்கும். அதிலும் யாருக்கும் தெரியாமல் காதலிக்கும் போதோ ஒரு வித படபடப்பில் அதிகம் துடிக்கும். அதனால் நெஞ்சுக்குள் தாளம் - இனம் புரியாத தவிப்பில் எழும் படபடப்பை இப்படி உருவகப் படுத்துகிறார் உருவக அணி மேதை வாலி.
சரி.. அப்படி அவன் சொல்லித்தந்த (காதல்) பாடத்தின் விளைவு என்ன? தொடரும் சரணத்தில் பட்டியலிடுகிறார் கவிஞர் வாலி. 'என் உள்ளம் மெதுவாக விழித்துக்கொண்டு விட்டது. அந்தப் பாடல் காட்டிய பாதையில் செல்ல ஆரம்பித்துவிட்டது. (அவன் அழைத்துக்கொண்டு போனான் என்று தலைவனை குற்றம் சொல்லவில்லை அவள். ஏனென்றால் அவளது அன்புக்குரியவன் அல்லவா. அதனால் தவறு நடந்த போதும் அதற்க்கு காரணம் தன் உள்ளம் தான் என்று சொல்கிறாள் அவள்.) அப்படி சென்றபோது கண்ணுக்கு தெரியாத கதவு ஒன்று திறந்து கொண்டது. அந்தக் கதவுக்கு பின்னால் நின்று கொண்டு உறவு என்னை வா வா என்று சொல்லி வரவேற்றது. (இதயக் கபடம் திறன்மினோ என்று கலிங்கத்துப் பரணியில் செயங்கொண்டார் பாடியது போல..தான் அவன்தான் களவு முறையில் வரம்பு மீறியதை எத்தனை நயமாக எடுத்துரைக்கிறாள் அவள்). அந்த நேரத்தில் என்னை மரபு வழி வந்த நாணம் 'நில்லடி .. மேலே சென்று தவறு செய்துவிடாதே என்று தடுத்தது.' ஆனால் ஆசையோ, "நாணத்தை விட்டு துணிந்து மேலே சென்று விடு.' என்று சொன்னது ..என்கிறாள் அவள். அதற்கு மேல் குறிப்பிடவில்லை அவள். அதோடு நிறுத்திக்கொண்டு விடுகிறாள்.
'உள்ளம் விழித்தது மெல்ல - அந்தப்
பாடலின் பாதையில் செல்ல - மெல்லத்
திறந்தது கதவு என்னை வாவெனச் சொன்னது உறவு
நில்லடி என்றது நாணம் விட்டுச் செல்லடி என்றது ஆசை.'
நாணத்திற்கும் ஆசைக்கும் இடையில் நடந்த போராட்டத்தில் சிக்கித் தவிக்கும் பெண்ணின் மன உணர்வை இதற்கு மேல் சிறப்பாக யாரால் வெளிப்படுத்த முடியும் என்று வியக்க வைக்கிறார் கவிஞர் வாலி. தொடரும் சரணத்தில் கலிங்கத்து பரணியின் கருத்தை எளிமையாகப் புகுத்தி வியக்க வைக்கிறார் கவிஞர் வாலி.
இந்தப் பாடல் முழுவதுமே கலிங்கத்துப் பரணியின் கருத்தை மையமாக கொண்டு அமைந்தது தான். ஆரம்பத்தில் இதயக் கபாடம் திறன்மினோ என்பதை உள்ளம் விழித்ததற்கு உருவகப் படுத்தியவர் இந்தச் சரணத்தில் கலிங்கத்துப் பரணியின் அறுபத்தோராவது செய்யுளில் ஜெயங்கொண்டார் கூறும் 'வாயின் சிவப்பை விழி வாங்க மலர் கண் வெளுப்பை வாய் வாங்க' என்று சொல்லும் வார்த்தைகளோடு ஆரம்பிக்கிறார் கவிஞர் வாலி:
இப்போது அவள் சொல்கிறாள் :
எல்லாமே தலைகீழாகி விட்டதாம்.
'பெண்களின் உதடுகளுக்கு நிறமாக சிவப்பைத்தான் சொல்வார்கள். ஆனால் எனது விழிகளுக்கு உதட்டின் சிவப்பும் இதழ்களுக்கு விழிகளின் வெண்மையும் இடம் மாறி அமைந்துவிட்டன. இமைகள் மூடிய நிலையைத்தான் உறக்கம் என்பார்கள். இங்கோ இமைகள் பிரிந்த நிலையில் தான் தூக்கமே. மனத்திலோ இனம் புரியாத மயக்கங்கள் . நினைவுகள் தாறுமாறாக பாய்கின்றன.'
இதுவரை தோழிக்கு சொல்வதாக பாடி வந்தவள் கடைசி இரண்டு வரிகளை சகோதரனுக்கு குறிப்பால் உணர்த்துவதுபோல பாடுகிறாள் (ஆனால் அவன் புரிந்துகொள்ளவில்லை என்பது வேறு விஷயம்!) உன்னிடம் நடந்த அனைத்தையும் சொல்லிடத்தான் நினைக்கிறேன். ஆனால் என் மனமோ உண்மையை மூடி மறைக்கிறது.' என்று முடிக்கிறாள் அவள்.
'செக்கச் சிவந்தன விழிகள் - கொஞ்சம்
வெளுத்தன செந்நிற இதழ்கள்.
இமை பிரிந்தபின் உறக்கம் - நெஞ்சில்
எத்தனை எத்தனை மயக்கம்.
உன்னிடம் சொல்லிட நினைக்கும் - மனம்
உண்மையை மூடி மறைக்கும்'
காட்சி என்னவோ நகைச்சுவை இழையோடும் காட்சி தான். அதிலும் யாருக்கும் தெரியாமல் காதல் வயப்பட்ட - தவறு இழைத்துவிட்ட - பெண்ணின் மனதின் உறுத்தலையும் உள்ளீடாகப் புகுத்தி இருக்கும் கே.பாலச்சந்தர் அவர்களின் சிறந்த காட்சி அமைப்புக்கு - அந்த திறமைக்கு அருமையான - எளிமையான வார்த்தைகளால் பாடலை இயற்றிய கவிஞர் வாலி அவர்களின் புலமைத் திறனுக்கு ஈடுகொடுத்து - தனது அருமையான இசையால் காட்சிக்கே உயிர் கொடுத்த ‘மெல்லிசை மாமணி’ வி. குமார் அவர்களின் இசைப்புலமைக்கு ஒரு சான்றாக - இசை அரசி பி. சுசீலா அவர்களின் உணர்வு பூர்வமான குரல் வளத்துடன் - திரை இசைக்கடலில் அருமையான ஒரு நல்முத்தாக பிரகாசிக்கும் பாடல் இது.
| வரதராஜுலு குமார் என்கிற வி. குமார். |
பிறந்த தினம் : 28 . 07 . 1934 . |