

திரையுலகில் சிறு வெற்றியைக்கூடப் பிரம்மாண்டமாகக் கொண்டாடும் போக்கிற்கு மத்தியில் நேர்மையாகவும், உண்மையாகவும் செயல்படும் பலருண்டு. அவர்களில் ஒருவர் இயக்குநர் வசந்தபாலன்.
வெயில், அங்காடித் தெரு, அரவான் என வாழ்க்கைக்கும் திரைப்படத்துக்குமான இடைவெளியைக் குறைக்கும் விதமாகத் தொடர்ந்து படைப்புகளைக் கொடுத்துவரும் இவர் இப்போது ‘காவியத் தலைவ’னை உருவாக்கியிருக்கிறார்.
காவல்கோட்டம் நாவலிலிருந்து அரவான் படத்துக்கான கதையை எடுத்துக் கொண்டவர், மறுபடியும் வரலாற்றுக் களத்தில் புகுந்திருக்கிறார். 40களில் தமிழகத்தில் தழைத்தோங்கியிருந்த நாடகக் குழுக்களின் வாழ்க்கையையும் அதில் பங்கேற்றுப் பெயர்பெற்றுத் திரையுலகில் நுழையப் போராடிய சில சாமான்ய மனிதர்களையும் கதாபாத்திரங்களாக்கி ‘காவியத் தலைவன்’ படத்தை எடுத்து முடித்திருக்கிறார்.
இந்தப் படம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில் தனது முகப்புத்தகப் பக்கத்தில் தமிழ்த் திரையுலகம் குறித்த ஒரு மனம் திறந்த பதிவை எழுதியிருக்கிறார். அதில், கேபிள் டிவியில் திருட்டுத்தனமாகப் படங்கள் ஒளிபரப்பப்பட்ட விஷயத்தில் விஷால் எடுத்த நடவடிக்கைக்குப் பாராட்டுத் தெரிவித்திருந்தார்.
அதே சமயம், “டீஸர் டிரைலர்கள் போன்ற படத்தின் முன்னோட்டக் காணொளிகளுக்கு யுடியூப் தளத்தில் ஹிட்ஸ் அதிகமாகக் கிடைத்துவிட்டது என்பதற்கெல்லாம் சந்தோஷப்பட வேண்டியதில்லை” என்று அதிரடியாகக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
“பைரசி வீடியோ, திருட்டுக் கேபிள் ஆகியவற்றுக்கு எதிரான விஷாலின் இந்த முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். விஷாலைப் போன்று ஒவ்வொரு கதாநாயகனும் இயக்குநரும் ஏன் ஒவ்வொரு சினிமாக்காரனும் களத்தில் இறங்கினால்தான் இந்தத் திருட்டு வீடியோ பிரச்சினை ஒரு முடிவுக்கு வரும். ஆம்னி பேருந்துகளில், ஏன் அரசு நெடுந்தொலைவு பேருந்துகளிலும் பைரசி விசிடி ஒளிபரப்புகிறார்கள்.
சென்னை கோயமுத்துரர் தவிர அனைத்துச் சிறு நகரங்களிலும் சனிக்கிழமை மாலைக்காட்சி, இரவுக்காட்சி, ஞாயிறு மாலைக்காட்சியை தவிரத் திரையரங்குகளில் கூட்டமே இல்லை. இருபது பேர், நாற்பது பேர், எண்பது பேர் காட்சிக்குக் காட்சி பார்க்கிறார்கள்.
பெரிய ஹீரோக்களின் (ரஜினி, அஜீத், விஜய், சூர்யா) படங்களுக்குக் கூட்டம் வருகிறது. மற்ற அனைத்துக் கதாநாயகர்களின் நிலைமை மிக மோசம். படம் நல்லாயிருக்கிறது என்ற செய்தி பரவிக் கூட்டம் திரையரங்குக்கு வர நாள் ஆகிறது. பெருநகரங்களைத் தவிரச் சிறு நகரங்களில் திரையரங்குகளில் படம் ஓடிச் சம்பாதிப்பது சிறு படங்களுக்குப் பெரும் கனவுதான்.
சாட்டிலைட் விற்பனையையும் சென்னை நகரத்தில் படம் ஓடுவதையும் நம்பித்தான் சினிமா இருக்கிறது. ஆடியோ பிசினஸ் இல்லை. இதில் யூ/ஏ, ஏ படங்களுக்கு 30% வரி விதிப்பு வேறு சினிமாவை ஆட்டிப்படைக்கிறது.
யுடியூபில் நம் டிரைலரை 21 லட்சம் பேர் பார்த்துவிட்டார்கள் என்ற கொண்டாட்டம் ஒரு பக்கம் என்றால், இந்த 21 லட்சம் பேர் நம் படத்தின் பாடல்களை இலவசமாக டவுன்லோடு செய்து கேட்பார்கள் என்று அர்த்தம். படம் வெளிவந்தால் இந்த 21 லட்சம் பேரும் திரையரங்குக்கு வருபவர்கள் அல்ல. பாதிப் பேர் முடிந்தால் நம் படத்தையும் டவுன்லோடு செய்து பார்த்துவிடுவார்கள் என்றுதான் அர்த்தம் . யுடியூப் ஹிட்டிற்காக நாம் சந்தோஷப்பட ஒன்றுமில்லை நண்பர்களே!!
அடுத்து சினிமா போஸ்டர்களின் மூலம் விளம்பரத்தை நிறுவ முடியாத நிலை வேறு. ஏனெனில் போஸ்டர் ஒட்டுவதற்கான சுவர்கள் குறைந்துவிட்டன. கட்டுப்பாடுகள் பெருகிவிட்டன. ஒட்டப்பட்ட போஸ்டர்கள் ஒரு நாள்கூடச் சுவரில் இருப்பதில்லை அதைக் கிழித்துவிட்டு அதன் மீது அடுத்த போஸ்டர் ஒட்டப் படுகிறது. பிளக்ஸ் விளம்பர பேனர்கள் வைக்கக் கூடாது என்ற தடை வேறு .
தனியார் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்வதுதான் ஓரே வழி. அதன் விளம்பரச் செலவு மிக அதிகமாக இருக்கிறது. சில கோடிகளை விழுங்குகிறது. நாம் இலவசமாகக் கொடுக்கும் பாடல்களை, காமெடிக் காட்சிகளை, சண்டைக் காட்சிகளை விதவிதமாகப் பிரித்துப் பிரித்துப் பல்வேறு நிகழ்ச்சிகளில் போடுகிறார்கள்.
ஆனால் நாம் விளம்பரமுன்னு போய் நின்றால் பல லட்சங்களைக் கேட்கிறார்கள். ஒட்டுமொத்தமாக சினிமாக்காரர்கள் களத்தில் இறங்கி நம் வாழ்வாதாரத்திற்குப் போராட வேண்டிய நேரம் வந்துவிட்டது,” எனக் கோடை வெயிலாகக் கொதித்திருக்கிறார் வசந்தபாலன்.