

சிவகார்த்திகேயன் நடித்த ‘எதிர் நீச்சல்’ படத்தில் டெய்லர் கடை நண்பனாகத் தோன்றிய சதீஷின் கால்ஷீட் டைரியில் இப்போது தேதிகள் இல்லை. இத்தனை பிஸியான காமெடி கம் குணச்சித்திர நடிகராக வலம்வருகிறார். அவருடன் இயல்பாக உரையாடியபோது அத்தனை சுலபமாக அவர் இந்த இடத்துக்கு வரவில்லை என்பதை உணர முடிந்தது. இனி அவரோடு...
விஜயோடு முதல் முறையாகக் ‘கத்தி’ படத்துல நடிக்கிறீங்க…
தீபாவளிக்குத் தியேட்டர் ஸ்கிரீனைக் கிழிக்கிற அளவிற்குக் கூர்மையா வந்திட்டு இருக்கு கத்தி. எல்லாருக்குமே முருகதாஸ் சார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது ஒரு கனவாக இருக்கும். விஜயுடன் காமெடி வேடத்தில் நடிப்பது என்பதும் ஒரு கனவுதான். எனக்கு ரெண்டு கனவும் ஒரே படத்தில் நடந்திருக்கிறது.
விஜய் மாதிரி ஒரு நடிகருடன் நடிக்கும் போது என் திறமை கூடுதலாக வெளிவரும். இந்தப் படம் முழுவதும் எனக்கு காமெடியன் பாத்திரம் மட்டுமல்ல. எல்லாம் சேர்ந்திருக்கும். முருகதாஸ் சார்கூட டிஸ்கஷன் போயிருந்தேன். அப்போதான் ஒரு காட்சியை எப்படி உருவாக்குகிறார் என்பது தெரிந்தது. நீங்க படம் பார்த்தாதான் தெரியும். வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
விஜய்யோடு நடிக்கும்போது என்ன சொன்னார்?
அவரோடு நடித்ததை எல்லாம் மறக்கவே முடியாது. மற்றவர்கள் நினைப்பது போல அமைதியாக இருப்பார், அதிகம் பேச மாட்டார் என்பதெல்லாம் இல்லை. ஜாலியா பேசுவார். சின்ன கர்வம்கூட இல்லாமல், எல்லாம் கற்றுத்தருவார்.
இப்படி பண்ணுங்க என்று சொல்லாமல், இதை இப்படி கொஞ்சம் செய்கிறீர்களா என்று கேட்பார். படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது சாதாரணமாகத்தான் பேசுவார், நடிக்க ஆரம்பித்தால் கலக்கிவிடுவார். சட்டென்று கதையின் பாதைக்கு அடாப்ட் செய்துகொள்வதில் விஜய்யை மிஞ்ச ஆள் கிடையாது.
சதீஷ் என்றாலே சிவகார்த்திகேயனோடதான் இருப்பார் என்ற பேச்சு நிலவுகிறதே?
அட்லி இயக்கிய ‘முகப் புத்தகம்’ குறும்படத்தில் நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து நடித்தோம். சிவாவை அதற்கு முன் நான் பார்த்ததில்லை. முதல் நாள் படப்பிடிப்பிலேயே இரண்டு பேரும் நண்பர்களாகி, மொத்தப் படக்குழுவையும் கலாய்த்தோம். சிவா எப்போதுமே எப்படியாவது சினிமாவில் காமெடியன் ஆகிவிட வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். நான்தான் நீங்க கண்டிப்பாகத் தமிழ் சினிமாவில் ஹீரோ ஆகிவிட வேண்டும் என்று சொன்னேன். அந்தப் பொதுநலத்தில் ஒரு சுயநலமும் உள்ளது.
அவர் நகைச்சுவை நடிகர் ஆனால் நான் என்ன ஆவது? அவர் ஹீரோ என்றால்தான் நான் காமெடியன் என்பதுதான் அந்தச் சுயநலம். ஒரு வழியாக ‘மெரினா’ திரைப்படத்தில் ஹீரோ ஆகிவிட்டார். என்னைப் பற்றியும் இயக்குநர் பாண்டியராஜிடம் கூறியிருந்தார். நல்ல வேளையாக இருவரும் ஒரே படத்தில் இணைந்தோம். அதன் பிறகு எதிர்நீச்சல், மான் கராத்தே போன்ற படங்களில் தொடர்ச்சியாக நடித்தோம். சினிமா துறையைத் தாண்டி சிவகார்த்திகேயனும் நானும் ஒரே குடும்பம் போல, நல்ல நண்பர்கள்.
கதை விவாதத்தில் கலந்துகொள்வீர்களாமே?
ஒரு படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறேன். ‘பொய் சொல்லப் போறோம்’ படத்தில் உதவி வசனகர்த்தாவாகப் பணியாற்றியிருக்கிறேன். ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தில் கிரேசி மோகனிடம் உதவி வசனகர்த்தாவாகப் பணியாற்றினேன்.
என் ஆர்வம் முழுவதும் வசனம் எழுதுவதில் தான் அதிகமாக உள்ளது. இயக்குநராக வேண்டும் என்றால் அதற்கு நிறையத் தெரிந்திருக்க வேண்டும், அதிக உழைப்பு வேண்டும், அதிக நேரம் தேவை. சினிமா துறைக்கே நான் புதிது என்பதால் முதலில் காமெடியில் மட்டும் கவனம் செலுத்தலாம் என்று நினைக்கிறேன். அனைத்து விஷயங்களும் கற்றுக்கொண்டேன் என்ற நம்பிக்கை வந்தால் திரைப்பட இயக்குநராகலாம். இப்போதைக்கு நடிப்பு மட்டும்தான்.
கிரேசி மோகனிடம் பணியாற்றியபோது கற்றுக்கொண்டது என்ன?
நான் நடிக்கும் இடத்தில் ஒரு காமெடி வசனம் பேசும்போது, ‘நீங்க கிரேசி மோகன் சார் கிட்டக் கத்துக்கிட்டீங்க இல்ல அதான்’ என்று சிவகார்த்திகேயன், விஜய் சார் எல்லாம் சொல்வார்கள். கெட்ட வார்த்தை இல்லாத நல்ல நகைச்சுவை அவரிடம் கற்றுக்கொண்டதுதான்.
ஒரு காமெடி நடிகராக உங்களோட எதிர்பார்ப்புகள் என்ன?
‘எதிர்நீச்சல்’ என்ற ஒரு படம் என் சினிமா வாழ்க்கையை எதிர்நீச்சலுக்கு முன் எதிர்நீச்சலுக்குப் பின் என்று மாற்றிப்போட்டுவிட்டது. ஆனால் இந்த இடத்திற்கு வருவதற்கு நான் 8 வருடங்கள் கஷ்டப்பட்டு உழைத்தேன். அதன் பிறகு 2 வருடங்களில் எல்லாம் அடுத்தடுத்து நடந்தது. சாப்பாட்டுக்கே கஷ்டம்தான். ஆனால் நாடகங்களில் நடித்தது கேர் ஆஃப் பிளாட் ஃபார்ம் ஆகாமல் என்னைக் காப்பாற்றியது.
உங்களுக்கு பிடித்த இயக்குநர் சுந்தர்.சியோட கூட்டணி பற்றி..
சுந்தர்.சி இயக்கி வரும் ‘ஆம்பளை' படத்தில் விஷாலுக்கு தம்பியா நடிக்கிறேன். ‘ஆம்பளை' சரவெடிதான். இப்போதான் படப்பிடிப்பு தொடங்கியிருக்கு.