

மகிழ்ச்சியூட்டுவதுடன் நின்றுவிடாமல், மனித நேயம், தன்னம்பிக்கை, அறம் ஆகியவற்றை மறைமுகமாக ரசிக மனங்களுக்குள் கடத்தும் திரைப்படங்கள் எல்லாக் காலத்திலும் கொண்டாடப்பட்டிருக்கின்றன. அப்படிப்பட்ட படங்களில் அதிகமும் பங்கேற்க விரும்பும் சூர்யாவுக்கு, ‘சூரரைப் போற்று’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படத்தில் சூர்யா நடிப்பில் தொட்ட உச்சத்தை முந்திச் செல்லும் பல படங்களை காலம் அவருக்கு வழங்கலாம். ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு பட்டா, குடும்ப அட்டை உள்ளிட்ட உரிமைகள் கிடைக்க உந்துசக்தியாக இருந்த ‘ஜெய் பீம்’ போன்ற படங் களையும் அவர் தயாரித்து, நடிக்கலாம். ஏனென்றால், ஒரு வெற்றிகரமான நடிகராக, பணம், புகழ் ஆகியவற்றை ஈட்டியபின் அவற்றைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் போராடுவதிலேயே தேங்கிப் போய்விடுபவர்களுக்கு மத்தியில், சூர்யா சமூகத்தின் கலைஞனாக தன்னை உணர்ந்தவர்.
தனது அப்பா 39 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய சிவகுமார் கல்வி அறக்கட்டளையை தத்தெடுத்துகொண்டு, தன் பங்குக்கு அகரம் பவுண்டேஷன் என்கிற அறக்கட்டளையைத் தொடங்கி, கடந்த 18 ஆண்டுகளாக ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களைத் தேர்ந் தெடுத்து அவர்களது முழுமையான கல்விச் செலவை ஏற்று வருகிறார். கிராமப்புற மாணவர்களின் கல்வி நலன்களுக்கு எதிரான அரசுக் கொள்கை களையும் அவர் விமர்சனம் செய்யத் தயங்கியதில்லை. இன்னொரு பக்கம், சமூக விழிப்புணர்வுக்காக தன்னுடைய நட்சத்திரப் புகழைப் பயன்படுத்துவதில் ஒரு தன்னார்வலராக தொடக்கம் முதலே முன்னோடியாக நிற்கிறார்.
தந்தையின் வழியில் திரைத்துறைக்கு வந்தாலும் கல்வி, விழிப்புணர்வு, சமூக அக்கறை என வெற்றிகரமான ஆளுமையாக உருவாகி நிற்பதற்கு பின்னால் அவர் கடந்து வந்த இளமைக் காலத் துக்கும் அவருடைய தந்தை காட்டி வரும் முன்மாதிரிக்கும் முக்கிய மான பங்கிருக்கிறது.
பள்ளியில் சூர்யா: 1975 ஜூலை 23இல் பிறந்த சூர்யா கிண்டர் கார்டன் முடித்து பள்ளியில் சேர்க்கப்பட்டபோது, அங்கே ஆங்கிலப் பயிற்றுமொழியால் அவருக்குக் கற்பது கடினமாக இருந்தது. வகுப்பில் ஆசிரியர் கேள்வி கேட்கும்போது இரண்டாவது வரிசையிலிருந்து மெல்ல நழுவி ஐந்தாம் வரிசைக்குச் சென்று ஒளிந்துகொள்வார். பின்னர் ஐந்தாம் வரிசையிலிருந்து இரண்டாம் வரிசைக்குத் தாவி வந்து தப்பித்துக்கொள்வார். பத்தாம் வகுப்பு தொடங்கியபோது, “பன்னிரெண்டாம் வகுப்பில் நூறு சதவீத தேர்ச்சிதான் எங்கள் பள்ளியின் இலக்கு. உங்கள் மகனை வேறு பள்ளியில் சேர்த்துக்கொள்ளுங்கள்” என்று அனுப்பி வைத்தது அந்தப் பிரபலமான தனியார் பள்ளி. பதினோராம் வகுப்புச் சேர்க்கைக்காக சிறுபான்மையினர் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் பள்ளிக்குச் சென்றார். சேர்க்கை முடிந்து வீட்டுக்கு வந்ததும் ‘அந்தப் பள்ளிக்கு நான் போகமாட்டேன். வேகாத வெயிலில், அப்பாவை ‘க்யூ’வில் நிற்க வைத்துவிட்டார்கள்’ என்று கோபப்பட்டார். பின்னர், அதே பள்ளியில் படித்து ‘ஒரு கண் பார்வையிழந்த பைத்தியக்காரன்’ வேடம் போட்டு, முதன் முதலாக மேடையேறி நடித்துக் கைதட்டல்களைப் பெற்றார்.
அப்பாவே வில்லன்! - உறவினர்களும் நண்பர்களும் பார்க்கும்போதெல்லாம் “ஓ.. சிவகுமார் பையனா.. உங்க அப்பா மாதிரி வருமா? அவரை மாதிரி நடிப்பியா? அவரைப்போல் பெயிண்டிங் பண்ணுவியா?” என்று ஒப்பிட்டு வெறுப்பேற்றியபோது அப்பாவையே தனக்கு வில்லனாகக் கருதிக்கொண்டார் பதின்ம வயதின் சூர்யா. அந்த நிலையைக் கடந்து, பிகாம் முடித்து இளங்கலைப் பட்டம் பெற்றார். அப்போது, ‘முதுகலைப் படிப்பையும் கையோடு முடித்துவிடு’ என்று அப்பா சொல்ல, ‘இதற்கு மேலும் படி என்று வற்புறுத்தினால் வீட்டை விட்டு ஓடிவிடுவேன்” என்ற சூர்யா, தன்னுடைய சொந்த முயற்சியில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசர் வேலையைத் தேடிக்கொண்டார். அங்கே, அதிகம் பேசாமல், அசராமல் வேலை செய்துவந்த சூர்யாவைப் பார்த்து ‘யார் இந்தப் பையன்?’ என்று முதலாளி தோண்டித் துருவி, அவராகவே கண்டுபிடித்துக் கேட்டார். அப்போது ‘ஒரு நடிகனோட மகன் வேறொரு தொழில் செய்யக் கூடாதா சார்?’ என்று சூர்யா கேட்டபின் முதலாளி வாயே திறக்கவில்லை.
மறுக்கப்பட்ட குரல்: ஒருமுறை அப்பாவை அழைத்து வர சென்னை விமான நிலையம் வந்திருந்த 21 வயது சூர்யாவைப் பார்த்தார் இயக்குநர் வசந்த் சாய். ‘உங்க பையன் சினிமாவில் நடிப்பானா?’ என்று கேட்க, ‘அப்படியொரு எண்ணம் அவனுக்குக் கிடையாது. சினிமாவுக்காக நான் அவனை வளர்க்கவில்லை.’ என்று மறுத்தார் சிவகுமார். ஆனால், வசந்தும் ‘நேருக்கு நேர்’ படத்தைத் தயாரித்த மணி ரத்னமும் ‘உங்க பையனைப் போல் ஒரு ‘ரா ஹேண்ட்’தான் எங்களுக்கு வேணும்’ என்று மடக்கினார்கள். ‘அவனிடம் பேசிப் பாருங்கள். சம்மதித்தால் ஸ்கிரீன் டெஸ்ட் செய்யுங்கள். நடிப்பு வராது என்று தெரிந்துவிட்டால், தொடக்கத்திலேயே சொல்லிவிடுங்கள். தேர்ந்தெடுத்து சில நாள் படப்பிடிப்பு நடத்தியபிறகு ரிஜெக்ட் செய்யாதீர்கள்’ என்று வேண்டுகோள் வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட மணி ரத்னம் ‘ஐ ஹெவ் 200 பர்செண்ட் கான்பிடன்ஸ் இன் ஹிம்.. ஐ வில் டேக் கேர் ஆஃப் ஹிம்’ என்றார்.
‘நேருக்கு நேர்’ படப்பிடிப்பு முடிந்து ‘டப்பிங்’ வேலைகள் தொடங்கியிருந்த போது சூர்யா நடித்த கதாபாத்திரத்துக்கு இரவல் குரல் கொடுக்க ஏற்பாடு செய்துகொண்டிருக்கும் செய்தியைக் கேள்விப்பட்டு கொதித்துப்போனார் சிவகுமார். ‘நான் எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்து ஆள். திரையில் உருவமும் குரலும் இணைந்து வந்தால்தான் அவன் உடலும் உயிரும் கொண்ட நடிகன். இப்போது சூர்யாவின் உடலை மட்டும் காட்டிவிட்டு குரல் வேறொருவருடையது என்று சொல்வதை என்னால் ஏற்கமுடியாது’ என்று கூறி சண்டை போட்டார். அறிமுகப் படத்தின்போது ‘குரல் சரியில்லை’ என்று விமர்சித்த மணி ரத்னம், தனது ‘குரு’ படத்தை தமிழில் மொழிமாற்றி வெளியிட்டபோது, படத்தின் நாயகன் அபிஷேக் பச்சனுக்கு சூர்யாவையே குரல்கொடுக்கும்படி செய்தார். பின்னால், ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி'’ நிகழ்ச்சியின் வெற்றியில் சூர்யாவின் சொல் வீச்சுக்கு மிகப்பெரிய பங்கிருந்ததையும் இங்கே நினைவுகூரலாம். அறிமுகப்படம் வெற்றி பெற்றாலும் அடுத்தடுத்து சூர்யா நடித்த ஐந்து படங்கள் சுமார் என்பதற்கும் கீழே போய்விட, ‘இத்தனை வருஷமா சினிமால இருக்கீங்க.. நடிப்பு வரலைன்னா விட்டுட வேண்டியதுதானே..? எதுக்கு பையனை இப்படி கஷ்டப்படுத்துறீங்க..?’ என்று கேட்டு திரையுலகிலிருந்தே சிவகுமாரை பலர் வறுத்தெடுத்தார்கள். ஒரு பிரபல வார இதழ், ‘சூர்யா படங்களில் நடனமாடுவதை நிறுத்திக்கொள்வது நலம்’ என்று விமர்சனம் செய்தது.
கதாபாத்திர நடிப்பு: பின்னர் அதே பத்திரிகை, ‘கஜினி’ திரைப்படம் வரையிலான சூர்யாவின் வாழ்க்கைக் கதையைத் தொடராக வெளியிட்டுக் கொண்டாடும் அளவுக்கு, சூர்யாவை புரட்டிப் போட்டு புடம் போட்டது ‘நந்தா’ திரைப்படம். சூர்யாவுக்குள் திறமை இருப்பதை கண்டறிந்து அறிமுகப்படுத்தியவர் வசந்த் சாய் என்றால், சுய ஒளியில் மின்னும் கலைஞனாக சூர்யாவை அவருக்கே அடையாளம் காட்டியவர் ‘நந்தா’ படத்தை இயக்கிய பாலா. ‘அம்மா கையால் சாப்பிட ஆசைப்பட்டான்..! கொடுத்தாள்..! விஷம்!’ என்று கவிஞர் அறிவுமதி ‘நந்தா’ படம் குறித்து ஹைகூ கவிதை ஒன்றை எழுதியிருந்தார். அப்படத்தின் கிளைமாக்ஸில் அம்மா பிசைந்து கையில் வைத்திருக்கும் சோற்றில் ஒரு கவளத்தை உண்ணும் நந்தா, அதில் அவள் விஷம் கலந்துவிட்டாள் என்பதை உணர்ந்து ‘தெரியும்மா..’ என்று சொல்லிக்கொண்டே அடுத்தடுத்த கவளங்களைச் சாப்பிட்டு, தாயின் மடியில் விழுந்து மரணிக்கும் கிளைமாக்ஸ் காட்சியில் வெளிப்படுத்திய நடிப்பால், ‘இந்த சூர்யா இத்தனை நாள் எங்கேயிருந்தார்’ எனக் கேட்க வைத்தார். ‘நந்தா’ படத்தில் மௌனம் பேசி நடித்தவர், அதற்கு நேர்மாறாக ‘பிதாமக’னில் சக்தி என்கிற கதாபாத்திரத்தில் அதிகமாகப் பேசி நடித்து ஆச்சர்யப்படுத்தினார்.
மாஸ் கதாபாத்திரங்களிலும் தன்னைப் பொருத்திக்கொள்ள முடியும் என்று காட்டிட, ‘காக்க காக்க’கச்சிதமான வாய்ப்பாக வந்து அமைந்தது. அப்படத்தின் வெற்றியால் முன்னணி நட்சத்திரமாக உயர்த்த சூர்யா, அதன்பிறகு ‘பேரழகன்’, ‘கஜினி’, தொடங்கி ‘ஜெய் பீம்’ வரை, முன்னணி நட்சத்திரமாகவும் கதாபாத்திரத்துக்கான நடிப்பைத் தருவதில் உச்சம் தொடும் நடிகராகவும் தன்னைத் தகவமைத்துக் கொண்டிருக்கிறார். அவரது புகழுக்கும் பெயருக்கும் கவசமாக அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் மட்டுமல்ல, சமூகமும் அவர் பக்கம் நிற்கிறது என்றால் அது மிகையல்ல.