

‘வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒரு போதும் நிலைக்காது’ என்கிற கருத்தாக்கத்துடன் சர்வைவல் திரில்லராக உருவாகியிருக்கும் படம் ‘பருந்தாகுது ஊர்க்குருவி’. படத்தை இயக்கியிருக்கும் தனபாலன் கோவிந்தராஜ், இயக்குநர் ராம், ரஞ்சித் ஜெயக்கொடி ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். அவருடன் உரையாடியதிலிருந்து..
விவேக் பிரசன்னாவை இந்தப் படத்தின் மூலம் கதாநாயகன் ஆக்கியிருக்கிறீர்களா?
‘இறைவி’, ‘மேயாத மான்’ முதல் ‘சூரரைப் போற்று’ படம் வரை, பக்கத்து வீட்டு இளைஞர் போன்று மிக நெருக்கமாக ரசிகர்களிடம் போய் சேர்ந்திருக்கிறார் விவேக் பிரசன்னா. ‘ஆண்டனி’, ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்து கவனம் பெற்றவர் நிஷாந்த் ரூஷோ. இந்த இருவருக்கும் படத்தில் சரி சமமான கதாபாத்திரங்கள். டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என்று சொல்லலாம்.
தலைப்பு ‘மாஸ்’ தன்மையுடன் இருக்கிறதே?
‘ஊர்க்குருவி பருந்தாகாது’ என்கிற பழமொழி கிராமப் புறங்களில் ரொம்பவே பிரபலம். சிறு குற்றங்களில் ஈடுபட்டு, தினசரி காவல் நிலையம் சென்று கையெழுத்துப்போடும் ஒரு எளிய இளைஞன் தான் இதில் ஊர்க்குருவி. நிஷாந்த் ஏற்றுள்ள கேரக்டர் அதுதான். விவேக் பிரசன்னா ஒரு சிறிய நகரத்தில் வளர்ந்து வரும் தொழிலதிபர். தொழில் போட்டியில் சிக்கும் அவர், ஒரு பிரச்சினையிலிருந்து தலைமறைவாக இருக்க காட்டுக்குள் வந்து ஒளிந்துகொள்கிறார். அவருடன் காட்டுக்குள் வரும் நிஷாந்துக்கு நட்பு உருவாகிறது. ஒரு கேங்ஸ்டர் கூட்டம், சில அரசியல்வாதிகள், உள்ளூர் போலீஸ் என மூன்று குழுக்களால் இவர்கள் இருவரும் தேடப்படுகிறார்கள். இருவரும் தப்பித்தார்களா? காடும் அவர்களது நட்பும் கைகொடுத்ததா, இல்லையா என்பதை ஒரே நாளில் நடக்கும் நிகழ்வுகளாகச் சொல்லியிருக்கிறேன். ஊட்டி முதுமலைக் காடுகளில் படமாக்கியுள்ளோம்.
தொழில் நுட்பக் குழு பற்றி..
டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் இயங்கிவரும் லைட்ஸ் ஆன் மீடியாவின் முதல் தயாரிப்பு இது. ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலைப் பாடி அதன் வழியாகப் புகழ்பெற்ற ரெஞ்சித் உண்ணி இசையமைத்துள்ளார். இரண்டு பாடல்களும் இசையுடன் கூடிய ஒரு கவிதையும் இடம்பெற்றுள்ளன. அஷ்வின் நோயல் ஒளிப்பதிவு செய்ய, ‘டான்’ படப்புகழ் நாகூரான் ராமசந்திரன் - நெல்சன் அந்தோணி இருவரும் படத்தொகுப்பு செய்துள்ளனர்.