

தன்னம்பிக்கை - வாழ்வில் நம் அனைவருக்குமே முக்கியத்தேவை.
அதிலும் குறிப்பாக - ஏதாவது உடற்குறையோடு வாழ்வை எதிர்கொண்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மாற்றுத் திறனாளி நண்பர்களுக்கு இது மிக மிக முக்கியத் தேவை. ஆரம்பத்தில் தங்களுடைய உடற்குறைபாட்டை ஜீரணித்துக்கொண்டு தங்களை ஒரு சமநிலைக்கு கொண்டு வருவதற்கே அவர்களுக்கு மனம் முரண்டு செய்யும். அதையும் தாண்டி அதிலிருந்து மீண்டு வருவது என்பது எளிதான விஷயம் அல்ல. இந்த விஷயத்தில் அவர்களை விட அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கே பொறுப்புணர்ச்சியும், பொறுமையும் மிகவும் தேவை. அந்த வகையில் மாற்றுத் திறனாளி நண்பர்களுக்கு மனவலிமையையும் புதுத்தெம்பையும் ஊட்டக்கூடிய விதத்தில் கவியரசு கண்ணதாசன் வடிவமைத்த பாடலைத்தான் இந்த வாரம் பார்க்க - மன்னிக்கவும் - கேட்கப் போகிறோம்.
ஒரு கைகால் செயலிழந்துபோன மாற்றுத் திறனாளியை அவனது வெள்ளை உள்ளத்தைப் பார்த்து மனமுவந்து மணந்து கொண்டாள் அவள். முதலிரவு - தனது குறையை எண்ணி மனம் புழுங்கித் தவிக்கும் அவனுக்கு தெம்பையும், உற்சாகத்தையும் அளித்து அவனது தாழ்வு மனப்பான்மையை களைந்தெறிகிறாள் அவள். பக்கம் பக்கமாக வசனங்கள் பேசி ஏற்படுத்த வேண்டிய தாக்கத்தை ஒரு மூன்று நிமிடப் பாடல் மூலமாக ஏற்படுத்தி விடுகிறார் கவியரசர்.
அனைவராலும் பெரிதும் விரும்பப்படக்கூடிய ஒருவரது செல்வச்செழிப்புக்கு அளவுகோலாக இருப்பது தங்கம். அந்த தங்கத்தில் ஓரளவுக்கு செம்பு சேர்வதால் அதன் மாற்று சற்று குறைந்தாலும் தங்கம் என்றுமே தங்கம் தான். உங்கள் உடலில் ஏற்பட்ட குறைபாடும் அப்படிப்பட்டதுதான். உங்கள் தரத்தையும், உயர்ந்த குணத்தையும் அது குறைத்துவிட முடியாது. உங்கள் மீது நான் கொண்ட அன்பையும் அதனால் மாற்றிவிடமுடியாது.
எடுத்த எடுப்பிலேயே மிக உயர்ந்த ஒரு பொருளை உவமைப்படுத்தி பாடலை ஆரம்பிக்கிறார் கவியரசர்.
‘தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தில் குறைவதுண்டோ - உங்கள்
அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அன்பு குறைவதுண்டோ..’
எடுத்துக்காட்டு உவமை அணி வகையைக் கையாண்டு - அதாவது 'போல' என்ற உவமை உருபு வெளிப்படையாகத் தெரியாமல் மறைந்து நிற்கும் அணிநயத்துடன் பாடலை ஆரம்பிக்கிறார் கவியரசர்.
பொதுவாக ஆண்களை சிறப்பிக்கும்போது சிங்கத்துடன் ஒப்பிட்டுச் சொல்வதுதான் வழக்கம். 'ஆண்பிள்ளைச் சிங்கம்'- என்று சொல்லம்போது தோய்ந்துபோன ஆண்மகனும் கம்பீரமாகத் தலையை நிமிர்த்திக்கொள்வான் அல்லவா!. அந்த வார்த்தையை வைத்தே தன கணவனுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுகிறாள் அவள்.
கம்பீரத்திற்கும், வீரத்திற்கும் பெயர் பெற்ற சிங்கத்தின் கால்கள் பாதிக்கப்பட்டு அதனால் நடக்க முடியாமல் போனாலும் அதன் கம்பீரமும் சீற்றமும் சற்றும் குறையாதல்லவா? அதுபோல எண்ணமும் செயலும் ஒன்றாக இருந்துவிட்டால் நீங்களும் எல்லோரையும் போலத்தான். எதுவும் உங்களை பாதித்து விட முடியாது.
‘சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ
சிந்தையும் செயலும் ஒன்று பட்டாலும் மாற்றம் காண்பதுண்டோ..’
எந்த ஒரு மனிதனுக்கும் தன்னைப் போலவே குறைபாட்டுடன் இருக்கும் இன்னொருவர் அதனை ஒரு குறையாகவே கருதாமல் சாதனைச் சிகரத்தை அடைந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டினால் தளர்ந்த அவரது மனத்திற்கும் ஒரு புது உற்சாகம் பிறக்கும். ‘அவராலே முடிந்தது என்னாலே முடியாதா?’ என்று எழுந்து நிற்க வைக்கும்.
அப்படி யாரைச்சொல்வது என்ற யோசனையுடன் அண்ணாந்து பார்த்த அவள் கண்களில் முழு நிலவு தென்படுகிறது. அந்த நிலவையே உதாரணமாகக் காட்டிக் கணவனுக்குச் சொல்கிறாள் அவள்:
‘அந்த நிலவைப் பாருங்கள். அதுவும் உங்களை போலத்தான். உங்களுக்காவது ஒரு கையும் காலும் தான் பாதிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் அந்த நிலவுக்கு இரண்டு கால்களும், கைகளுமே கிடையாது. கால்களே இல்லாமல் அது வானில் தவழ்ந்து வரவில்லையா?. கைகள் இல்லாதபோதும் கூட மலர்களை அரவணைத்து தனது காதலை வெளிப்படுத்தி மலரச் செய்யவில்லையா என்ன?’ என்று கேட்கிறாள் அவள்.
‘கால்கள் இல்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா - இரு
கைகளில்லாமல் மலர்களை அணைத்துக் காதல் தரவில்லையா...’
இந்தச் சரணத்தில் உவமையாக நிலவை மட்டும் காட்டி அதனுடன் நிறுத்திக் கொண்டு விடுகிறார் கவிஞர்.
'தவழ்ந்து வரவில்லையா?' என்று கேட்கும்போது .. உங்களால் ஒரு மாதிரி நடக்கவாவது முடிகிறதே. நிலவுக்கு அது கூட முடியவில்லையே.கால்களும் கைகளும் இல்லாத நிலவை விடவா உங்கள் குறை பெரிது?' என்று சொல்லாமல் சொல்லி நிறுத்துகிறாள் அவள். ஏனென்றால் அவனிடம் இருக்கும் குறைபாட்டை வெளிப்படையாகச் சொல்லக்கூட அவள் விரும்பவில்லை. ஆகவே இந்த இடத்தில் பிறிது மொழிதல் அணியை லாவகமாகக் கையாள்கிறார் கவியரசர்.
ஒருவழியாக அவனை மனத்தளர்ச்சியில் இருந்து மீட்டு விட்டாகி விட்டது. இனி அவனுக்குப் பக்கபலமாக ஒரு உற்ற துணையாகத் தான் இருப்பதை மட்டும் புரியவைத்துவிட்டால் போதும். அதைத்தான் அவள் தொடர்ந்து செய்கிறாள்.
‘எதையும் மாற்றக்கூடிய வல்லமை காலத்துக்கு உண்டு. காலப்போக்கில் எல்லாவற்றிலுமே மாறுதல் ஏற்படும். ஆனால் உங்கள் மீது நான் கொண்டிருக்கும் உண்மையான காதலை எந்தக் காலத்தாலும் மாற்ற முடியாது. தன்மானத்தையே பெரிதாகக் கருதி வாழ்ந்த நற்குண மங்கையரை மணந்த கணவர்கள் அடைந்த பெருமிதத்தை கண்டிப்பாக உங்களுக்கும் கொடுப்பேன்’என்று உறுதி கூறி பாடலை முடிக்கிறாள் அவள்.
‘காலம் பகைத்தாலும் கணவர் பணிசெய்து காதல் உறவாடுவேன் - உயர் மானம் பெரிதென்று வாழ்ந்த குலமாதர் வாழ்வின் சுவை கூறுவேன்..’
1959ஆம் ஆண்டு சரவணா பிலிம்ஸ் ஜி.என். வேலுமணி அவர்களின் தயாரிப்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சரோஜாதேவி இணைந்து நடித்து வெளியான 'பாகப்பிரிவினை' படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலின் சிறப்பம்சமே அதன் இனிய இசைதான்.
சங்கராபரண ராகத்தின் பிரயோகங்களைக் கையாண்டு மெல்லிசை மன்னர்கள் அருமையாக இசையமைத்து இசையரசி பி. சுசீலா அவர்களை அற்புதமாகப் பாடவைத்திருக்கிறார்கள்.
தனது உடற்குறையை எண்ணிப் புழுங்கும் மாற்றுத் திறனாளி நண்பர்களை அவர்களை சுற்றி இருக்கும் நெருக்கமான உறவினர்கள் எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கு இந்தப் பாடல் ஒரு சிறந்த உதாரணம். காட்சி அமைப்பைப் பார்க்கக்கூட வேண்டாம். பாடலைக் கேட்டாலே போதும். மயிலிறகால் மனதை வருடும் கனிவும், இனிமையும் பி. சுசீலா அவர்களின் குரலில் தெரியும்.
அந்தவகையில் தனது உடற்குறையை எண்ணி மனம் புழுங்கிக்கொண்டிருக்கும் மாற்றுத் திறனாளி நண்பர்களுக்கு ஒரு அருமையான 'கவுன்சிலிங்' இந்தப் பாடல்.
(தொடர்ந்து முத்தெடுப்போம்...)