

கலைஞர் அவர்களின் பொன்விழா நிகழ்வில் அவருக்குப் பரிசு கொடுப்பதற்காக செய்திருந்த 3 அடி உயரமுள்ள தங்கப் பேனாவை அவரிடம் காட்டிவிட்டு நானும் விஜய்காந்தும் புறப்பட்டபோது ‘‘தங்கத் தில் பேனாவைக் கொடுக்க இருக்கிறீர் களே... இதை வைத்து நான் எழுத முடியாதே!’ என்று கேள்வி எழுப்பினார் கலைஞர். விஜயகாந்த் சிரித்தபடியே, ‘‘தங்கப் பேனாவோடு, நீங்கள் எழுத பேனாவையும் விழாவில் கொடுப் போம்!’’ என்று கூறினார். அதைக் கேட் டதும் அவர் முகத்தில் எழுத்தாளருக்கே உரிய பூரிப்பைக் கண்டோம்.
கலைஞருடையச் செயலாளர் சண்முகநாதன் அவர்களிடம், கலைஞர் எழுதும் தடிப்பான ‘குவாலிட்டி’ பேனாவைப் பற்றி விசாரித்து அதைப் போலவே வாங்கினோம். சென்னை கடற்கரை சீரணி அரங்கத்தில் சிறப்புடன் நடந்த விழாவில், கலைஞருக்கு பரிசாக தங்கப் பேனாவுடன், அவர் எழுத ‘குவாலிட்டி’ பேனாவையும் சேர்த்து விஜயகாந்த் வழங்கினார். கலைஞர் அவர்கள், ‘‘தங்கப் பேனாவை கலைஞர் கருவூலத்திலும், எழுதும் பேனாவை நானும் வைத்துக்கொள்கிறேன்’’ என்று பெருமையோடு கூறினார்.
சினிமா உலகில் பரபரப்பாகப் பேசப்பட்ட தயாரிப்பாளர்களில் ஒருவர் சாண்டோ சின்னப்ப தேவர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை வைத்து அதிக படங்களை எடுத்தவர். தேவர் கடுமையான உழைப் பாளி. வேலை சுறுசுறுப்பாக நடக்க வில்லையானால் அவரின் திட்டுகள் ‘ஏ’ சான்றிதழுக்கு உரியவை. சிறந்த எழுத் தாளர்களைக் கொண்ட ‘கதை இலாகா’-வை தேவர் ஃபிலிம்ஸில் வைத்திருந்தார் தேவர். குறுகிய காலத்தில் குறித்த தேதியில் படங்களை வெளியிடுவார். தமிழ் சினிமாவின் பெரும்பாலான நடிகர், நடிகைகள் அவர் கம்பெனியில் நடித்திருக்கிறார். ‘தேவர் ஃபிலிம்ஸ்’ கம்பெனியில் நடிக் கும் கலைஞர்களுக்கெல்லாம் தேவர் முன் பணமாகவே மொத்த பணத்தை யும் கொடுத்துவிடுவார். அதன் மூலமாக நிலமும், வீடும், காரும் வாங்கியவர்கள் அதிகம். குறிப்பாக கவியரசு கண்ண தாசன் அவர்களுக்கு தேவர்தான் பணம் கொட்டிய களஞ்சியம்! அவர் தயாரிக்கும் படங்களை விநியோகஸ்தர்களுக்கு எல்லோரையும் போல ஐந்து வருட ஒப்பந்தத்தில் கொடுக்க மாட்டார். மொத்த படத்தையும் ‘அவுட் ரைட்’முறையில் அனைத்து மாவட்டங்களுக்கும் விற்று விடுவார். அதில் வரும் வருமானத்தைத் தனக்கொரு பங்கு, முருகப் பெருமா னுக்கு ஒரு பங்கு, வருமான வரித் துறைக்கு ஒரு பங்கு என்று பிரித்துக் கொள்வார். அந்தந்தப் படத்தின் கணக்கை அவ்வப்போதே உடனுக்கு உடன் முடித்துவிடுவார். இழுவை என் பதே இருக்காது. எம்பெருமான் முருக னுக்கு ஒதுக்கிய பங்கை தமிழகத்தில் உள்ள எல்லா முருகன் கோயிலுக்கும் உபயம் செய்துவிடுவார். அப்போது ‘அவுட் ரைட்’ முறையில் படங்களை விற்காமல் வைத்திருந்தால் இன்றைக்கு தேவர்தான் பெரிய கோடீஸ்வரர். இன்றைக்கும் சின்னப்ப தேவர் மேல் சினிமா உலகில் ஒரு ‘மரியாதை’உண்டு!
நான் ஒருநாள் ஏவி.எம். ஸ்டுடியோ வில் இருந்து வாகிணி ஸ்டுடியோவுக்கு காரில் போய் கொண்டிருந்தேன். எதிரில் வந்த காரில் சின்னப்பத் தேவர் வந்தார். நான் அவரைப் பார்த்ததும் கை கூப்பி கும்பிட்டேன். அதை அவர் கவனிக்க வில்லை. நான் வாகிணி ஸ்டுடியோவுக் குள் சென்று படப்பிடிப்பை ஆரம்பித் தேன்.
அப்போது அங்கே தேவர் அவர்கள் வந்தார். அவரைப் பார்த்து வரவேற்று, ‘‘என்னய்யா?’’ என்று கேட் டேன். அதுக்கு அவர், ‘‘நீ என்னைப் பார்த்து வணக்கம் சொன்னியாம்ல. நான் அதை கவனிக்கலப்பா. கொஞ்ச தூரம் போனதும் என் கார் டிரைவர் சொன் னார். அதை சொல்லத்தான் உன்னைப் பார்க்க வந்தேன்!’’ என்றார். ‘‘நீங்க கவ னிக்கலேங்கிறது எனக்குத் தெரியும். அதுக்காக நீங்க வரணுமா!?’’ என்று அவரிடத்தில் கேட்டேன். அதுக்கு அவர், ‘‘நீ வணக்கம் செய்யும்போது நானும் வணக்கம் செஞ்சிருக்கணும்ல. அதுதான் முறை. உனக்கு வணக்கம் சொல்லத்தான் இங்கே வந்தேன்!’’ன்னு சொன்னார். அவரது பண்பை கண்டு பூரித்துப் போனேன்.
சின்னப்ப தேவர் அவர்கள் ஒரு காலகட்டத்தில் ஹிந்தி படமெடுத்தார். தேவருக்கு ஆங்கிலமும் தெரியாது ஹிந்தியும் தெரியாது. பம்பாய் போய் எல்லோரிடமும் ‘தமிங்கிலீஷ்’ பேசியே ஹிந்தியிலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார். ஒரு ஹிந்தி படத்தை எடுத்து முடித்து, வட நாடு முழுவதும் வெளியிட 400 பிரின்ட்களை எடுத்தார். முதலில் அதை பம்பாயில் வெளியிட்டார். அங்கே அந்த படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. அதனால், மற்ற மாநிலங்களிலும் படத்தை வெளியிட விநியோகஸ்தர்கள் முன் வரவில்லை. படம் எடுத்ததிலும், 400 பிரின்ட்கள் போட்டதிலும் மிகுந்த நஷ்டம். இந்த சூழ்நிலையில் மன அழுத் தத்தில் மாரடைப்பு ஏற்பட்டு சின்னப்ப தேவர் அவர்கள் மரணம் அடைந்தார்கள். திரை உலகமே அழுதது.
ஒருநாள் ரஜினிகாந்த் என்னிடம் வந்து, ‘‘தேவர் ஃபிலிம்ஸ் நஷ்டத் தில் இருக்கிறது. தேவர் மகன் தண்ட பாணி மிகவும் கஷ்டப்படுகிறார். அவர் களுக்கு உதவுவதற்காக படம் செய்து கொடுக்கிறேன் என்று சொல்லியிருக் கிறேன். இந்தப் படத்தை நீங்கள் இயக்க வேண்டும்!’’ என்று கேட்டுக் கொண்டார். தேவர் மீது ரஜினி வைத்திருந்த மரியாதைக்கு நன்றி செலுத்தும் விதமாக அது இருந்தது. ‘‘நிச்சயம் செய்வோம் ரஜினி!’’ என்று ஒப்புக்கொண்டேன். அந்தப் படம்தான் ‘தர்மத்தின் தலைவன்’.
அந்தப் படத்தில் ரஜினி, இளைய திலகம் பிரபு, வி.கே.ராமசாமி, நாசர், சுஹாசினி, குஷ்பு ஆகியோர் நடித் தனர். வித்தியாசமான கதை. பஞ்சு அருணாசலம் அவர்கள் திரைக்கதை, வசனம். இசை இளையராஜா, பாடல்கள் வாலி. இந்தப் படத்தின் பாடல்கள் மிகச் சிறப்பாக அமைந்தன. அதற்கு உதாரணம் ‘தென்மதுரை வைகை நதி; தினம் பாடும் தமிழ் பாட்டு’என்ற பாடல், இன்றும் எங்கும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
இந்தப் படத்தில் ரஜினி ஞாபக மறதி உள்ள பேராசிரியராக நடிப்பில் வெளுத்து வாங்குவார். சுஹாசினி ஒளிப்பதிவாளராக படித்து கேமராமேன் அசோக்குமாரிடம் உதவி யாளராக பணியாற்றியவர். நல்ல ஒளிப்பதிவாளராக வர வேண்டியவர் சிறந்த நடிகையாக புகழ்பெற்றார். நான் இயக்கிய பல படங்களில் நடித்திருக்கிறார். நாம் எதிர்பார்ப்பதற்கு மேல் நடித்து அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுப்பார். அதற்கு ஓர் உதாரணம் கே.பாலசந்தர் இயக்கிய ‘சிந்து பைரவி. அந்தப் படத்தில் சிந்துவாக நடித்து தேசிய விருது பெற்றார். தமிழகத்தில் கமல்ஹாசன் குடும்பமே அதிக தேசிய விருதுகள் வாங்கிய குடும்பம். பாராட்டி வாழ்த்துவோம்!
‘தர்மத்தின் தலைவன்’ படத்தில் ரஜினி, சுஹாசினி, வில்லன்கள் பங்குபெற்ற கிளைமாக்ஸ் காட்சியைப் படப்பை கிராமத்தில் எடுத்துக்கொண்டிருந்தேன். படப்பிடிப்பில் சுஹாசினி எப்போதும் சீக்கிரம் போக வேண்டும் என்று சொல்ல மாட்டார். அன்றைக்கு என்னிடம் வந்து, ‘‘மத்தியானம் 3 மணிக்கு நான் கொஞ்சம் போகணும் சார்!’’ என்றார். ‘ஏன்?’ என்று கேட்டேன். பதில் சொல்லவில்லை.
- இன்னும் படம் பார்ப்போம்... | படங்கள் உதவி: ஞானம்