Published : 23 Sep 2022 08:30 AM
Last Updated : 23 Sep 2022 08:30 AM

கோலிவுட் ஜங்ஷன்: தலைப்புக்கு நேர்மாறாக..

படத்தின் தலைப்பு தரும் உணர்வை படம் தக்க வைத்திருக்க வேண்டும் என்பதுதான் வழக்கமான எதிர்பார்ப்பு. ஆனால், “‘பபூன்’என்கிற தலைப்பு காரணமாக நகைச்சுவையை எதிர்பார்த்து வந்துவிடாதீர்கள்! இது முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படம். கிராமிய மேடை நாடகங்களில் பபூன் வேடமிட்டு நடிப்பதைத் தொழிலாகக் கொண்ட எளிய மனிதன் ஒருவன் ஆடும் ஆக்‌ஷன் ஆட்டம்தான் படம்” என்று கூறியிருக்கிறார் படத்தின் இயக்குநர் அசோக் வீரப்பன். இவர் கார்த்திக் சுப்பராஜின் உதவியாளர். பபூனாக வைபவ் நடிக்க அவரது காதலியாக அனகா நடித்திருக்கிறார். மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

தமிழில் ஒரு ஹாலிவுட் ரீமேக்!

‘டாக்டர்’, ‘எதற்கும் துணிந்தவன்’ என மாஸ் ஹீரோ படங்களில் அதகள வில்லனாக தனது இரண்டாவது ‘இன்னிங்’ஸை தொடங்கியிருக்கிறார் வினய் ராய். அவரை முதன்மைக் கதாபாத்திரமாகக் கொண்டு உருவாகி வரும் படம் 'மர்டர் லைவ்'. எம்.ஏ. முருகேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் வினய் ராய் ஜோடியாக ஷர்மிளா மாந்திரேவும் ஹாலிவுட் நடிகை நவோமி வில்லோ முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள்.

டாட் காம் எண்டர்டெய்ன்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம், நிகோ மஸ்தொராகிஸ் இயக்கத்தில் வெளியான 'டாட் காம் ஃபார் மர்டர்' என்கிற ஹாலிவுட் படத்தின் அதிகாரபூர்வ மறுஆக்கம். ஒரு சைக்கோ கொலையாளிக்கும் நான்கு பெண்களுக்கும் இடையே நிகழும் சம்பவங்கள்தான் கதை. படம் முழுவதையும் இங்கிலாந்தில் படமாக்கியிருக் கிறார்கள். கிராஃபிக்ஸ் பணிகளை ஹாலிவுட்டில் மேற் கொண்டு வருகிறார்கள்.

கன்னடத்திலிருந்து ‘கப்ஜா’

கன்னடத்திலிருந்து 'கே ஜி எஃப்', '777 சார்லி' என அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகி இந்தியா முழுவதும் வசூலை அள்ளின. அந்தப் படங்களின் வரிசையில் சேரும் பிரகடனத்துடன் உருவாகியுள்ளது ‘கப்ஜா’. கன்னட சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான உபேந்திரா, கிச்சா சுதீப் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ள இது, பல காலகட்டங்களில் நடக்கும் ஒரு ‘கேங்ஸ்டர்’ படம். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருப்பதால் இந்தியாவின் ஏழு மொழிகளில் வெளியிடுகிறார்கள்.

ஆர்.சந்துரு இயக்கத்தில், ரவி பஸ்ரூர் இசையில், ஏ.ஜெ. ஷெட்டி ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இப்படத்தில் 1947, பிப்ரவரியில் கர்நாடகத்தில் நடந்த சுதந்திரப் போராட்டத்தில் கொல்லப்பட்ட தியாகி ஒருவரின் மகன் கேங்ஸ்டராக மாறிய கதையை விவரிக்கிறதாம். படத்தின் டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x