

பத்தாம் ஆண்டில் நுழைந்திருக்கிறது இந்து டாக்கீஸ். கடந்த 2011 இல் தொடங்கி 2021 வரையிலான பத்து ஆண்டுகளில் தமிழ்த் திரையுலகம் சந்தித்துள்ள பத்து முக்கிய போக்குகளைப் பார்க்கலாம்.
குறும்பட அடையாளம்
ஓர் இயக்குநரிடம் குறைந்தது ஐந்து படங்களிலாவது உதவி இயக்குநராகப் பணியாற்றிய பின்பு, தனியே சென்று முதல் படத்தை இயக்கும் ‘குருகுல’ பாணி ‘அவுட் ஆஃப் டேட்’ ஆனது. சுவாரசியமான குறும்படம் ஒன்றை எடுத்துவிட்டால், அதையே நுழைவுச் சீட்டாகப் பயன்படுத்தி திரையுலகில் முதல் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெறும் புதிய தலைமுறை இளைஞர்கள் அதிகரித்துள்ளனர்.
கார்த்திக் சுப்பராஜ், பாலாஜி மோகன் தொடங்கி, ‘அருவி’ புகழ் அருண் பிரபு, ‘டாக்டர்’ புகழ் நெல்சன் திலிப்குமார், ‘விக்ரம்’ புகழ் லோகேஷ் கனகராஜ் வரை பெரும் இளைஞர் கூட்டம் குறும்படங்களின் வழியாகவே திரையுலகில் தங்களுக்கான அடையாளத்தை தேடிப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
கேமராக்களின் படையெடுப்பு
டிஜிட்டல் யுகம் தொடங்கிய புத்தாயிரத்தின் தொடக்கத்தில் ‘ஹெச்டி’ (HD) வகை கேமராக்களின் வழியே ‘கம்ப்ரெஸ்’ முறையிலேயே காட்சிப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், கடந்த பத்து ஆண்டுகளில் ‘ரா ஃபுட்டேஜ்’ (Raw footage) படப்பதிவு வசதி கொண்ட டிஜிட்டல் சினிமா கேமராக்களும் ஸ்டில் கேமராக்களும் புதிய எல்லைகளைத் தொட்டு வெளிவரத் தொடங்கின.
ஆரி ரெட், அலெக்ஸா, சோனி, பேனசோனிக், கேனான், நிக்கான் உட்பட முன்னணி கேமரா நிறுவனங்கள் ‘ரா ஷூட்’ வசதிகொண்ட கேமராக்களின் அடுத்தடுத்த பதிப்புகளை அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கின்றன.
இலக்கிய ஊட்டம்
தமிழ் வாசகர் பரப்பில் கட்டுரைகள் வாசிக்கப்படும் அளவுக்கு சிறுகதைகளோ, நாவல்களோ வாசிக்கப்படுவதில்லை என்கிற மனக்குறை, இன்றைய நவீன எழுத்தாளர்களிடம் உண்டு. அதுவே ஒரு நாவலையோ சிறுகதையோ தழுவி உருவாக்கப்படும் ஒரு திரைப்படத்தை பார்வையாளர்கள் கொண்டாடி வந்துள்ளனர்.
இலக்கியத்துக்கும் சினிமாவுக்குமான இந்த உறவு, கடந்த பத்து ஆண்டுகளில் இலக்கிய வாசிப்புப் பழக்கம் கொண்ட இயக்குநர்களால் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. வசந்த பாலன், வெற்றி மாறன் தொடங்கி புத்தாயிரத்தில் வெற்றிபெற்ற புதிய இயக்குநர்கள் பலரும் நவீன இலக்கியத்தின் பக்கம் தங்களுக்கான கதைக் களங்களையும் கதை மாந்தர்களையும் தேடத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தப் புதிய போக்கு ஹீரோயிசப் படங்களுக்கு இணையாக மெல்ல வளர்ந்து வருகிறது.
ஒடுக்கப்பட்டவர்களின் சினிமா
முதலில் பேய் படங்களும் அவை நீர்த்துப் போனதும் அடித்துத் துவைக்கப்பட்ட ஹாரர் காமெடிப் படங்களும் ஒரு இணைப் போக்குபோல் வளர்ந்தாலும் அவை சட்டென்று காணாமல் போயின. அதைத் தொடர்ந்து, விவசாயம், மக்களின் அடிப்படையான வாழ்வாதாரம் உள்ளிட்டச் சமூகப் பிரச்சினைகளைப் பேசும் படங்கள் அதிகரித்தன.
பின்னர் அதுவும் ஒரு போக்காக நிலைபெறவில்லை. ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பிரச்சாரமின்றி பேசும் படைப்புகள், படைப்பாளிகளின் வருகை, ஒரு போக்காக உருவாகி தமிழில் அசலான தலித்திய சினிமாவை வளர்த்து வருகிறது.
நகைச்சுவையின் புதிய முகம்
வடிவேலு சுமார் பத்தாண்டுகள் வரை அதிக படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தது, சந்தானம் நாயகனாக நடிக்கத் தொடங்கியது போன்ற பல காரணங்களால் ‘டிராக் நகைச்சுவை’ என்பது தமிழ் சினிமாவிலிருந்து முற்றாக ஒழித்துவிட்டது. வடிவேலுவுக்குப் பிறகு புகழ்பெற்ற சூரி, சதீஷ், கருணாகரன், யோகிபாபு உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்கள், தற்போது, கதாபாத்திர நடிகர்களாக, கதையுடன் இணைந்த நகைச்சுவையில் பங்கேற்று வருகிறார்கள்.
நேரடித் தொடர்பு
கடந்த பத்தாண்டுகளில் சமூக ஊடகங்களின் செல்வாக்கு திரையுலகில் பல மடங்கு பெருகியிருக்கிறது. சமூக ஊடகங்கள், இணைய தளங்கள் வழியாகப் படங்களைப் பிரபலப்படுத்துவது அதிகரித்துள்ளது. சமூக ஊடகங்களில் அதிகம் பேரால் பின்தொடரப்படும் செல்வாக்கு மிகுந்த இளைஞர்கள், தங்களின் முழுநேர வாழ்க்கைப் பணியாக சமூக ஊடகங்களில் இயங்குவதை மாற்றிக்கொண்டனர்.
இன்னொரு பக்கம் திரையுலகப் பிரபலங்களும் நட்சத்திரங்களும் ரசிகர்களுடன் நேரடியாகவும் அவர்கள் காதோரம் சென்று பேசுவதுபோல் நெருக்கமாக உரையாடவும் தங்களுடைய சமூக ஊடகப் பக்கங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். சமூக ஊடகங்களில் குவிந்திருக்கும் முன்னணி நடிகர்களின் ரசிகர்கள், பல கோஷ்டிகளாகப் பிரிந்து ‘நீயா.. நானா?’ யுத்தம் நடத்தவும் அதைப் பயன்படுத்திவருகின்றனர்.
பெண் மைய சினிமா
ஒரு ஆண் நடிகர் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் கதாநாயகனாகவே நடித்துக்கொண்டிருக்கலாம். அதுவே பெண் நடிகர்கள் என்றால், சில படங்களுக்குப் பின் கதாநாயகி வாய்ப்பை இழப்பது அல்லது வேறு கதாபாத்திரங்களுக்கு மாறுவது என்கிற நிலை, கடந்த பத்தாண்டுகளில் மாறியுள்ளது.
நீண்ட காலம் நிலைத்து நின்று கதாநாயகிகளாக நடிக்கும் பெண் நடிகர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவிட்டது. அதன் பலனாக பெண் மைய சினிமாக்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
நம்பும் நட்சத்திரங்கள்
மாஸ் மசாலா வகை ஃபார்முலா கதைகளை இயக்கி வெற்றி கொடுத்த இயக்குநர்களையே பெரிதும் நம்பியிருந்தனர் முன்னணிக் கதாநாயக நடிகர்கள். ஆனால் தற்போது, நம்பிக்கையளிக்கும் படைப்புகளின் வழியாகத் தொடர் வெற்றிகள் கொடுத்து வரும் புதிய இயக்குநர்களுடன் மனத்தடைகளைக் கடந்து இணைந்து பணியாற்றத் தொடங்கியிருக்கின்றனர்.
ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் தொடங்கி சிவகார்த்திகேயன், தனுஷ் வரை பல முன்னணிக் கதாநாயகர்களை உதாரணமாகக் கூறலாம். இவர்கள் அனைவருமே தங்கள் படங்களில் ‘மல்டி ஸ்டாரர்’ தன்மையை விரும்புகிறார்கள்.
பான் இந்தியன்
கடந்த பத்தாண்டுகளில் வெற்றிபெற்ற படங்களின் அடுத்தடுத்த பாகங்களை ‘சீக்வல்’ திரைப்படங்களாக எடுக்கும் போக்கு, பிறமொழியில் வெற்றிபெறும் படங்களை ரீமேக் செய்யும் போக்கு ஆகியன ஒரே சீராக இருந்து வருகின்றன.
இந்தப் போக்குகளின் அடுத்தக்கட்டமாக, ‘பான் இந்தியா’ படம் என்கிற பெயரில் பல மாநில நடிகர்களையும் கலைஞர்களையும் பயன்படுத்தி ஒரு படத்தை எடுத்து, அதைப் பல மொழிகளில் வெளியிடும் போக்காக சந்தையை விரித்துள்ளனர். இருப்பினும் அனைத்து மொழிப் பார்வையாளர்களும் ஏற்கும் வண்ணம், பொதுவான கதையம்சம் கொண்ட படங்களே வெற்றிபெறுகின்றன.
ஆக்டோபஸ் ஓடிடி
கேபிள் டிவி, டிஷ் ஆன்டனா வழியே, ‘டி.டி.எச் சினிமா’வாக வீட்டின் வரவேற்பறைக்கு ஏற்கெனவே திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் வந்துகொண்டிருந்தன. ஆனால், இணையத்தின் வளர்ச்சியும் திறன்பேசிகளின் காலமும் ஓடிடி எனும் புதிய சினிமா அனுபவத்தைப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தின.
கரோனா ஊரடங்கு காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தபோது ஆக்டோபஸ் போல் ஓடிடி தளங்கள் ரசிகர்களை வளைத்துப் பிடித்துக்கொண்டன. பன்னாட்டுப் படங்களை உள்நாட்டின் மொழியில் பார்க்கும் வசதியை ஓடிடி வழங்கியதுடன் நேரடியாக படங்களை ரிலீஸ் செய்துவருவதும் ஓடிடியை பெரும் பொழுதுபோக்கு சாம்ராஜ்யமாக வளர்த்து எடுத்துள்ளது.
தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in