கோலிவுட் ஜங்ஷன்: ஸ்டண்ட் சில்வா 15

கோலிவுட் ஜங்ஷன்: ஸ்டண்ட் சில்வா 15
Updated on
2 min read

சிம்பு தேவன் இயக்கத்தில், இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் வெளியான ‘அறை எண் 305இல் கடவுள்’ படத்தின் மூலம் சண்டை இயக்குநராக அறிமுகமானவர் ஸ்டண்ட் சில்வா.

இதுவரை பல மொழிகளில் 250 படங்களுக்குமேல் சண்டை இயக்குநராகப் பணியாற்றிருக்கும் இவர், வெற்றிகரமான வில்லன் நடிகராகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார்.

திரையுலகில் நுழைந்து 15 ஆண்டுகள் ஆனதை நினைவில் நிறுத்தும் வகையில், கடந்த ஆண்டு வெளியான ‘சித்திரைச் செவ்வானம்’ படத்தை இயக்கினார்.

விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற அப்படத்தை இயக்குநர் விஜய் தயாரித்திருந்தார். பிஸியான ‘ஸ்டண்ட் கோரியோகிராபி’ பணிகளுக்கு நடுவில் தனது இரண்டாவது படத்தை இயக்கத் தயாராகிவிட்டார். ‘அது பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்’ என்கிறார் சில்வா.

அடையாளம் தேடும் ‘ஆதார்’!

“கிராமத்திலிருந்து வரும் ஓர் ஏழைத் தம்பதி, நகரத்தில் தங்களுடைய அடையாளத்தைத் தேடும் கதைதான் ‘ஆதார்’. இது ஆதார் அடையாள அட்டையை விமர்சிக்கும் படமல்ல.” என்று கூறியிருக்கிறார் படத்தை எழுதி இயக்கியிருக்கும் ராம்நாத் பழனிக்குமார்.

ஒரு இடைவெளிக்குப் பின் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவரது மனைவியாக ரித்விகா நடித்துள்ளார். இவர்களைத் தவிர, அருண்பாண்டியன், ‘வத்திக்குச்சி’ புகழ் திலீபன், பிரபாகர், இனியா, உமா ரியாஸ்கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரகளை ஏற்றுள்ளனர். வெண்ணிலா கிரியேஷன்ஸ் சார்பில் பி.சசிகுமார் தயாரித்திருக்கும் படம் இது. இவர் 'அம்பாசமுத்திரம் அம்பானி', 'திருநாள்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.

பார்த்திபனுக்கு முன்பே..

மலையாள இயக்குநர் அஜு குளுமலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘டிராமா’. ஒரு காவல் நிலையத்தில் காலை தொடங்கி மாலை வரை நடக்கும் கதை. ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தை கேரள மாநிலம் காசர்கோடில் செட் அமைத்து, நூறு நாள் ஒத்திகைக்குப் பிறகு ஒரே ஷாட்டில் படமாக்கியிருக்கிறார்கள்.

‘இரவின் நிழல்’ படத்துக்கு முன்பே உருவாகிவிட்ட இப்படத்தை பார்த்திபனும் பார்த்துப் பாராட்டியிருக்கிறார். கிஷோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் மூலம் ஜெய் பாலா நாயகனாகவும் காவ்யா பெல்லு நாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். ஷைனோஸ் ஒளிப்பதிவு செய்ய, சசிகலா புரொடெக்‌ஷன் என்கிற புதிய பட நிறுவனம் படத்தை வெளியிடுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in