

தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக வலம் வந்துகொண்டிருந்த சுவாதிஷ்டா கிருஷ்ணணுக்குக் கதாநாயகியாகப் பதவி உயர்வு கிடைத்திருக்கிறது. இயக்குநர்கள் ராம், மிஷ்கின் நடித்திருக்கும் ‘சவரக்கத்தி’ படத்தில் சுவாதிஷ்டாவுக்கு முக்கியக் கதாபாத்திரம். அறிமுகப்படம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில் அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்து முடித்துவிட்டார். அவரைச் சந்தித்தபோது…
தொலைக்காட்சி வழியாக சினிமாவுக்கு வந்தது ஈஸியாக நடந்ததா?
நான் தொலைக்காட்சிக்கு வந்தததே பெரிய கனவுதான். இன்ஜினீயரிங் முடிக்கிற நேரத்துல, அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சப்ப, செய்தித் துறைக்குப் போகலாம்னு ஆசை வந்துச்சு. உடனே சென்னை பல்கலைக்கழகத்துல ஆன்லைன் ஜர்னலிசம் மீடியா படிப்புல சேர்ந்தேன். படிச்சுக்கிட்டு இருக்குறப்பவே, பொதிகை டி.வி., ஜெயா டி.வி, நியூஸ்7ன்னு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க வாய்ப்புகள் கிடைச்சது. நியூஸ்7-ல ‘ஹவுஸ்ஃபுல்’ன்னு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். அப்போ நிறைய திரைப் பிரபலங்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சது. அந்த நிகழ்ச்சிதான் சினிமால எனக்கு வாய்ப்பு கிடைக்க காரணமாக இருந்தது.
முதல் சினிமா வாய்ப்பு எப்படி அமைஞ்சது?
இயக்குநர் லிங்குசாமியை ஒரு நிகழ்ச்சிக்காக சந்திக்கப்போனப்பா, அவருதான் சினிமாவுல நடிக்கிறியான்னு கேட்டார். சினிமாவுல நடிக்க விருப்பம் இல்லைன்னு அவருகிட்ட சொல்லிட்டேன். இயக்குநர் மிஷ்கினைச் சந்திச்சப்போ, அவருடைய ‘சவரக்கத்தி’ படத்துல நாயகியாக நடிக்க அழைத்தார். அப்பவும் படத்துல நடிக்க அபிப்ராயம் இல்லைன்னு மறுத்தேன். அப்புறம் மீண்டும் ஓரிறு மாதங்கள் கழித்து மிஷ்கின் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. ‘சவரக்கத்தி’ படத்துல ஒரு ரோல் இருக்கு. அதையாவது பண்ணச் சொல்லி’ மிஷ்கின் சார் கேட்டாருன்னு சொன்னாங்க. இதுக்குமேல பிகு பண்ணக்கூடாதுன்னு உடனே ஒப்புக்கிட்டேன். அந்தப் படத்துல ‘கயல்விழி’ என்ற கேரக்டர் பண்ணியிருக்கேன்.
அறிமுகப் படமே வெளிவராத நிலையில அடுத்தடுத்த வாய்ப்புகள் எப்படி கிடைச்சது?
அதுதான் எனக்கே ஆச்சரியமா இருக்கு. ‘சவரக்கத்தி’ முடிச்சவுடனே ‘மதம்’ன்னு ஒரு படத்துல நடிக்க வாய்ப்பு வந்துச்சு. இந்தப் படத்தை புதுமுக இயக்குநர் ரஜினி இயக்குறாரு. நான் நாயகியாக நடிச்சுருக்கேன். படத்துல பாடல்கள் எதுவும் கிடையாது. ஹீரோவோட ஒரு சீன்லதான் என்னை பார்க்க முடியும். வித்தியாசமான ஒரு படம். அடுத்ததா, ஜீவா நடிக்கும் ‘கீ’படத்தில் நடிக்கிறேன். இந்தப் படத்துல நிக்கி கல்ராணி, அனைக்கா சோட்டி நடிக்கிறாங்க. இந்தப் படத்துல முக்கியமான கேரக்டர்ல நடிக்கிறேன். இந்தப் படங்கள் இல்லாம அசோக் செல்வன் நடிக்கும் புதுப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கப் போறேன்.
இன்ஜினீயரிங் படிச்சிட்டு சினிமால நடிக்க வீட்டுல ஒத்துக்கிட்டாங்கலா?
சின்ன வயசுல நிறைய விளம்பர படங்களில் நடிச்சுருக்கேன். அப்போ அம்மாதான் ஷூட்டிங் கூட்டிட்டுப்போவாங்க. ஷூட்டிங் பத்தி அம்மாவுக்கு நல்லாவே தெரியும். ஆனா அப்பாவுக்குதான் கொஞ்சம் விருப்பமில்லை. இருந்தாலும் நான் நடிக்கக் கூடாதுன்னு தடையெல்லாம் போடலை. நான் நடிச்சிருக்குற படங்கள் வெளியான பிறகு, என்னோட திறமையப் பார்த்து அப்பாவும் முழுசா சப்போர்ட் பண்ணுவாருன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.
சினிமாவில் கிளாமர் இருக்குமே...?
கிளாமராக நடிக்க கொஞ்சமும் விருப்பம் கிடையாது. இதைப் படத்துல நடிக்க ஒப்பந்தம் போடும்போதே சொல்லிவிடுகிறேன். ஆனா, மாரட்ன் டிரஸ் போட்டு நடிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ரோல் மாடல் என்று யாரையும் வைத்திருக்கிறீர்களா?
சினிமாவில் என்னுடைய ரோல் மாடல்ன்னா அது நடிகை ஷாலினி. சின்ன வயசுலேயே நடிக்க ஆரம்பிச்சு அப்பறம் நாயகியாக வந்தாங்க. சில ஆண்டுகள் நடித்துவிட்டு திருமணம் பண்ணிட்டு செட்டிலாகிட்டாங்க. அவங்க மாதிரி குறைந்தது ஐந்தாறு ஆண்டுகள் நடிக்க வேண்டும், நடிக்கும் படங்கள் எல்லாம் வித்தியாசமா இருக்கணும் என்ற ஆசை இருக்கிறது. நல்ல படங்களில் நடித்துப் பெயரெடுக்க வேண்டும். அதன்பிறகு திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட வேண்டும். நாம் நடிச்ச படங்கள் இனிய நினைவுகளா மாறிடணும் இதுதான் என்னோட ஆசை.