

‘நித்திய கண்டம் பூரண ஆயுசு’ - இந்த வார்த்தைகள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, கடலோடியாக வாழும் மீனவ சகோதரர்களுக்கு சர்வ நிச்சயமாகப் பொருந்தும். ஆழ்கடலில் உயிரைப் பணயம் வைத்துப் பயணித்து வலைவீசி மீன்களைப் பிடித்துக்கொண்டு திரும்புவதற்கு இடையிலான வாழ்க்கையில் என்ன நடக்கும், ஏது நடக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது.,
கடல் சீற்றம், காற்றின் அலைக்கழிப்பு, எல்லை தாண்டியமைக்காக அந்நிய நாட்டுக் காவற்படையின் துப்பாக்கிச்சூடு, சிறைப்பிடிப்பு என- உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இத்தனைக்கும் தப்பிப் பிழைத்து திரும்புவதென்பது சாதாரண விஷயமா என்ன?
அந்தப் பரதவ இனத்து நண்பர்களின் வாழ்க்கையை வெகு அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கும் பாடல் தான் கவிஞர் வாலி அவர்கள் 1964ஆம் ஆண்டு தீபாவளி தினத்தன்று வெளியான ‘படகோட்டி’ படத்துக்காக எழுதிய ‘தரைமேல் பிறக்க வைத்தான்’ என்கிற பாடல். கவிஞர் வாலி எழுதிய மிகச் சிறந்த பாடல்களை பட்டியலிட்டால் அதில் முதல் இடம் பிடிக்கும் பாடல் இதுவாகத்தான் இருக்கும்.
பாடல் கூறும் கருத்துக்கள் வெகு ஆழமாகக் கேட்பவர் மனங்களில் பதியவேண்டும் என்ற நோக்கத்தோடு வார்த்தைகளைச் சற்றும் சிதைக்காமல் பிலாஸ்கானி தோடி என்ற ஹிந்துஸ்தானி ராகத்தின் அடிப்படையில் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்திருக்கும் லாவகம், சென்ற நூற்றாண்டின் தலை சிறந்த பாடகர் டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் கம்பீரக்குரல் - இரண்டும் சேர்ந்து பாடலை ஒரு மகத்தான மாபெரும் வெற்றிப்பாடலாக்கி விட்டிருக்கின்றன.
பெருமழையில் சிக்கிக் கடலுக்குப் பலியான ஒரு மீனவனின் குடும்பத்துச் சோகம் கண்டு மனவேதனையுடன் கதாநாயகன் (எம்.ஜி.ஆர்.) பாடுவதாக அமைந்த பாடல் இது.
‘உலகத்தின் தூக்கம் கலையாதோ
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ..
ஒரு நாள் பொழுதும் புலராதோ’.
இந்தத் தொகையறாவுக்குப் பிறகு விறுவிறுப்பான வயலின்களும், குழலிசையும், டேப் வாத்தியத்தின் லயமான தாளக்கட்டும் சேர்ந்த முகப்பிசை.
பல்லவி தொடர்கிறது...
உலகத்தில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான தொழில் அமைகிறது. அனைவருமே பூமியில் தான் பிறக்கின்றனர். வாழ்வதற்கான தொழிலையும் நிலத்தில் தான் செய்கிறார்கள். ஆனால் எங்கள் மீனவ இனத்து ஆண்களை மட்டும் தரைமேல் பிறக்க வைத்து தண்ணீரில் பிழைப்பு நடத்த வைத்திருக்கிறான்.
எங்கள் இனப் பெண்களுக்கும் சாதாரணமாக மற்ற பெண்களுக்கு அமைந்தது போல வாழ்க்கை அமையவில்லை.
பொதுவாக வீட்டிலிருக்கும் ஆண்கள் வேலைக்காக வெளியே சென்றால் அவர்கள் வீடு திரும்பும் நேரத்தை ஆவலுடனும் ஆசையுடனும் தான் அவர்கள் வீட்டுப் பெண்கள் எதிர்நோக்கிக் காத்திருப்பார்கள்.
ஆனால் எங்கள் மீனவப் பெண்களோ கடலுக்குச் சென்ற ஆண்கள் பத்திரமாக வீடு திரும்பும் வரை பயத்துடனும் பரிதவிப்புடனும் கரை மேல் இருந்துகொண்டு கண்ணீரில் குளித்துக்கொண்டு இருக்க வேண்டிய வாழ்க்கையை அவர்களுக்கு கொடுத்துவிட்டான்.
‘தரைமேல் பிறக்க வைத்தான் - எங்களைத்
தண்ணீரில் பிழைக்க வைத்தான்.
கரைமேல் இருக்க வைத்தான் - பெண்களைக்
கண்ணீரில் குளிக்க வைத்தான்.’
இந்த இடத்தில் முதல் சரணம் ஆரம்பமாவதற்கு முன்னால் வரும் இணைப்பிசையின் ஆரம்பத்தை சற்று கவனித்துக் கேளுங்கள். மெல்லிசை மன்னரின் மேதமை நமக்கு நன்கு புலப்படும். ஷெனாய் வாத்தியத்தில் ஒரு மெட்டு மேலோங்கி இசைக்க .. அதே நேரத்தில் அதற்கு பின்னணியில் வயலினில் இன்னொரு மெட்டு அதற்கு இணையாக பயணிப்பதை கேட்கமுடியும். 1.44 முதல் 1.54 வரை சரியாக பத்துநொடிகள் மட்டுமே இந்த இசை இணையாக பயணிக்கும். இதனை மேற்கத்திய இசையில் counter point என்பார்கள். ஒரே நேரத்தில் இரண்டு வேறுபட்ட இசை - அதே சமயம் - ஒன்றுடன் ஒன்று இணைந்து பாடலுக்கு தனி அழகைக் கொடுக்கும் இந்தப் பாணியை சத்தமே இல்லாமல் பயன்படுத்திவிட்டு ஒன்றுமே தெரியாதவர் போல இருந்திருக்கிறார் மெல்லிசை மன்னர் என்று வியப்பை ஏற்படுத்தும் இடம் இது.
கட்டிய மனைவியையும், தொட்டிலில் உறங்கும் பிள்ளையையும் கரைமேல் விட்டுவிட்டு அலைகடல் மேலே அலைக்கழிக்கப்படும் இன்னொரு அலையாக உயிரையும் பணயம் வைத்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் மீனவ நண்பர்களுக்கு வீடு, வாசல் எதுவும் இல்லையா என்ன?
இருக்கிறது. வாழ்வில் பெரும்பகுதியைக் கழிக்கும் கடல் தான் அவர்கள் வீடு. வீடு என்றால் விளக்கு இருக்கவேண்டுமல்லவா? அவர்களது கடல் வீட்டுக்கு வெள்ளி நிலாவே விளக்காக எரிகிறதாம். அந்த வீட்டில் அவர்கள் வாழ்க்கை தொடர்வதோ அல்லது முடிவது கண்டிப்பாக அவர்கள் கையில் இல்லை.
‘கட்டிய மனைவி தொட்டில் குழந்தை
உறவைக் கொடுத்தவர் அங்கே..
அலைகடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக் கொடுப்பவர் இங்கே.
வெள்ளிநிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு.
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இதுதான் எங்கள் வாழ்க்கை’
இந்தப் பாடலில் கவிஞர் வாலி உருவக அணியைப் பயன்படுத்தி இருக்கிறார். வாலி பெரும்பாலான பாடல்கள் உருவக அணிவகையிலேயே அமைந்திருக்கும். நிலாவைப் போல ஒளிவீசும் விளக்கு என்றால் அது உவமை அணி. நிலாவே விளக்காக இருக்கிறது என்றால் அது உருவக அணி. இந்த அணிவகையைக் கையாள்வதில் கவிஞர் வாலி அவர்கள் தனித்தன்மை வாய்ந்தவர். வாழ்வின் நிச்சயமற்ற தன்மையை இதை விட எளிதாக - சிறப்பாக - பொட்டிலறைந்தாற்போல சொல்ல முடியுமா என்ன?
‘முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்’ என்ற இரண்டே வார்த்தைகளில் பரதவ நண்பர்களின் வாழ்க்கையையே அடக்கி விடுகிறார் கவிஞர் வாலி. தொடரும் சரணத்தில் கவிஞரின் கற்பனை வளமும் சொல்லாடலும் பிரமிக்க வைக்கின்றன.
கடல் நீர் நடுவில் - அதாவது நடுக்கடலில் - பயணம் செய்து வலைவீசும் - அதுவும் உச்சிப்பொழுதில் மேலே கதிரவன் சுட்டெரிக்கும் நேரத்தில் தாகம் ஏற்பட்டால் ... கடலில் வலையை வீசிவிட்டு காத்திருக்கும் நேரத்தில் ஏதாவது ஒரு வலுத்த மீன் வலையை அறுத்துக்கொண்டு போய்விடுமோ என்று லாவகமாக வலையைப் பற்றிக்கொண்டு சிக்கிய மீன்களை வலையோடு இழுத்துப் பிடித்து படகில் சேர்க்கவேண்டிய நேரத்தில் பசி, தாகம் எல்லாவற்றையும் மறந்தல்லவா இருக்க வேண்டும்அவர்களுக்கு குடிநீர் கொடுக்க - கூட யாராவது இருக்கிறார்களா. ? அதுதான் வேண்டாம் - முழுக்க முழுக்க நிறைந்திருக்கும் கடல் நீரில் தான் ஒரு மடக்கு எடுத்து குடிக்க முடியுமா என்ன? முடியாதே..
தனியாக வந்திருக்கும் அவர்களுக்கு அவர்களது மனதைரியத்தை விட வேறு துணை யாரும் இல்லை. ஒரு நாள் போவார்கள். திரும்பி வரும் நாள் அவர்களுக்கே தெரியாது. இவ்வளவு தூரம் உயிரைப் பணயம் வைத்து ஒவ்வொரு நாளையும் துயரம் மிகுந்ததாக - அவர்களுக்கு மட்டும் அல்ல - அவர்களை நம்பி கரையில் காத்திருக்கும் குடும்பத்தினருக்கும் - துயரமானதாகக் கழித்து - எல்லாம் எதற்காக? ஊரில் இருப்பவர்களின் ஒரு சாண் வயிற்றை நிரப்புவதற்காக - இப்படி துன்பங்களை தான் சுமந்து கொண்டு கடல் சென்று திருப்புகிறார்களே.. அவர்கள் பட்ட கஷ்டங்களுக்கு பயன் என்ன என்று பார்த்தால் பூஜ்ஜியம் தான்.
பிடித்து வந்த மீன்களுக்கு சரியான விலை இல்லாமல் தரகர்கள், குத்தகைக்கார்கள் ஆகியோரிடம் அடிமாட்டு விலைக்கு கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம். அவர்களது உயிரை இவர்கள் - அதாவது உழைப்பை உறிஞ்சி வாழும் ஊர்ப் பெரியமனிதர்கள் - எவ்வளவு சுலபமாக - சிறியதாக எடைபோட்டு விடுகிறார்கள் என்று மனம் புழுங்குகிறார் கவிஞர் வாலி
இதோ அந்த சரண வரிகள்:
‘கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடிநீர் தருபவர் யாரோ..
தனியாய் வந்தோம் துணிவைத்தவிர
துணையாய் வருபவர் யாரோ
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு சாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்’
இப்போது ஆரம்பத்தில் வரும் தொகையறா வரிகளை திரும்பப் படியுங்கள் .. பாடலுக்கு ஒரு முழுமையான அர்த்தமே கிடைத்துவிடும். இவர்கள் உயிரை சுலபமாக எடைபோட்டு விடும் இந்த உலகத்தின் தூக்கம் என்று கலையும்? உழைப்பவர் வாழ்க்கைத்தரம் என்று உயரும்? என்று கேள்வியோடு பாடல் முடிவதாகத் தோன்றும். ‘படகோட்டி’ திரைப்படம் வெளிவந்து ஐம்பத்தெட்டு ஆண்டுகளைக் கடந்து விட்ட போதும். இன்று வரை ஆட்சிகள் பல மாறினாலும் விடை தெரியாத கேள்விகளாகவே இருக்கும் கேள்விகள் தானே? திரை இசைக்கடலில் நிதர்சன உண்மையை எடுத்துரைக்கும் ஒரு பாடலாக எக்காலத்துக்கும் பொருந்தும் வண்ணம் இருப்பதே இந்தப் பாடலின் மிகப்பெரிய வெற்றி.