

பேயிடம் ஒப்பந்தம் போட்டு தன் மனைவியை மீட்க போராடும் ஒரு கணவனின் கதைதான் ‘தேவி’.
நாகரிகமான பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது மும்பையில் வேலை பார்க்கும் கிருஷ்ணகுமாரின் (பிரபுதேவா) லட்சியம். சிக்கலான சூழலில், மாடு மேய்க்கும் கிராமத்துப் பெண் தேவியை (தமன்னா) திருமணம் செய்துகொள்ள நேரிடுகிறது. வேண்டா வெறுப்போடு மணம் முடித்து தமன்னாவுடன் மும்பை செல்லும் பிரபுதேவா, ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்துக் குடியேறுகிறார். வீட்டில் நுழைந்ததும் தமன்னாவிடம் தலைகீழ் மாற்றங்கள் நடக்கின்றன. பிரபுதேவாவை அதிரவைக்கும் அந்த மாற்றங்களின் பின்னணியும், விளைவுகளும்தான் படம்.
பேய்ப் படங்களுக்கென்று ஆகிவந்த பதற்றம், திகில், இருள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தாமல் கலகலப்பா கவே திரைக்கதையை நகர்த்திச் செல்கிறார் இயக்குநர் ஏஎல்.விஜய். தான் எதிர்பார்த்த விதத்தில் பெண் கிடைக்காததால் பிரபுதேவாவுக்கு ஏற்படும் ஏமாற்றத்தையே சொல்லிக் கொண்டு போகும் கதை திடீரென்று வேறு வடிவம் எடுக்கிறது. அதன் பிறகு முழுக்க முழுக்க பேயுடனான போராட்டம் ஆக்கிரமித்துக்கொள்கிறது.
தமன்னாவுக்குள் ஏற்படும் மாற்றங்களும், அதை பிரபுதேவா எதிர்கொள்ளும் விதமும் நன்றாகக் காட்சிப்படுத் தப்பட்டுள்ளன. தமன்னாவின் புது அவதாரத்தை ஒட்டி வெளி உலகில் நடக்கும் நிகழ்வுகளும் அவற்றால் பிரபுதேவாவுக்கு ஏற்படும் அவஸ்தைகளும் கல கலப்பும் கவர்ச்சியுமாகச் சொல்லப்படு கின்றன. பேய் விஷயத்தை இயக்குநர் காமெடி ஆக்கியிருக்கிறார். காமெடியோ வலுவாக இல்லை. எனவே படத்தோடு ஒன்ற முடியவில்லை.
தேவி, ரூபியாக மாறும் இடங்கள் பெரும்பாலும் ஒரே மாதிரி காட்சிப்படுத் தப்பட்டுள்ளன. படப்பிடிப்புக் காட்சி களும் ஒரே மாதிரியாக அமைந்து அலுப்பூட்டுகின்றன. பேயிடம் இருந்து தன் மனைவியை மீட்கத் தவிக்கும் பிரபுதேவா, மனைவி மீது ஒரு இடத்தில்கூட ஆழமான அன்பையோ, காதலையோ வெளிப்படுத்தவில்லை.
பேயாகிவிட்ட ஒரு நடிகை வேறொருவர் உடலின் வழியே தன் நடிப்பைப் பார்க்க விரும்புவாரா என்ன? ரூபியின் தோற்றம், அவரது பின்னணி ஆகியவற்றிலும் கவனம் செலுத்தியிருந்தால் இந்த அம்சத்தை வலுவாக அமைத் திருக்கலாம்.
நடிப்பு, நடனம், காமெடி, பயம் ஆகிய இடங்களில் இயல்பு மீறாமல் நடித்துள்ளார் பிரபுதேவா. ‘சல்மார்’ பாடலில் அவரது நடனம் அட்டகாசம்!
அப்பாவி கிராமத்துப் பெண் - தன் குறிக்கோளில் உறுதியாக இருக்கும் பேய் ஆகிய 2 வேடங்களுக்கும் இடையே கணிசமான வித்தியாசத்தை உடைகளே காட்டிவிடுகின்றன. உடல்மொழி, முக பாவங்களில் அந்த வித்தியாசத்துக்கு மெருகு சேர்க்கிறார் தமன்னா. நடனத் திலும் அப்ளாஸ் அள்ளுகிறார்.
நடிகராகவே வரும் சோனு சூட் அந்தக் கதாபாத்திரத்தின் தேவையைப் பூர்த்தி செய்கிறார். மற்றபடி அவருக்குப் படத்தில் பெரிதாக வேலை இல்லை. ஆர்.ஜே.பாலாஜி வரும் இடங்களில் புன்னகைக்கு உத்தரவாதம். பேயை விரட்ட வரும் நாசர், சதீஷ் காட்சிகள் தேவையற்றவை. சோனு சூட் மேனேஜராக வரும் முரளி ஷர்மாவின் நடிப்பு பரவாயில்லை.
பின்னணி இசை பொருத்தம். பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தி யிருக்கலாம். ‘சல்மார்’ பாடல் மட்டும் காதுகளில் ரீங்கரிக்கிறது. மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு அழகு. கிராமத்தையும், நகரத்தையும் இயல்பு மாறாமல் பிரதிபலித்துள்ளார்.
பேயை வைத்து பயம் காட்டுவதற் குப் பதில், பேயையும் இயல்பான பாத்திரமாக்கியிருப்பது வித்தியாசமான முயற்சி. ஆனால், ஒரு கட்டத்துக்குப் பிறகு படம் தேங்கி நின்றுவிடுகிறது. சுவையான திருப்பங்களோ, புதுமை யான காட்சிகளோ இருந்திருந்தால் ‘தேவி’யின் மகிமை கூடியிருக்கும். படம் முழுவதும் வெளிப்படும் மெல்லிய நகைச்சுவை படத்தை ஓரளவு காப்பாற்றுகிறது.