

முதல் முறையாகத் தமிழ் சினிமாவில் பிரதான கதாபாத்திரம் (Protagonist) ஒன்று, வலிமையான அம்பேத்கரியவாதியாகப் (Ambedkarite) படைக்கப்பட்டிருக்கிறது. மிக முக்கியமாக அது ஒரு பெண் கதாபாத்திரம் என்பதுடன், அவள் அரசியல், சமூக தெளிவுகளுடன் அத்தனை இன்னல்களிலிருந்தும் தன்னைத்தானே மீட்டெடுத்துச் செதுக்கிக் கொண்டே தன் பயணத்தைத் தொடரும் சுயாதீனப் பெண்ணாக வலம் வரச்செய்தது இயக்குநர் பா.இரஞ்சித்
ரெனே: அவள் அனைவருடனும் கலந்துரையாட எப்பொழுதும் தயாராக இருக்கின்றாள். எல்லாவற்றையும் கலந்துரையாடுவதன் வழி சரி செய்ய முடியும் என நம்புகிறாள். அப்படி ஒரு கலந்துரையாடலின் வழியேதான் அவள் நமக்கு அறிமுகம் செய்யப்படுகிறாள். அது இசை தொடர்பான ஒரு வாதம். அமெரிக்கப் பாடகர், செயற்பாட்டாளர் நினா சிமோனின் ரசிகராக இருக்கும் அவளுடைய காதலன் இனியனுக்கும், இளையராஜாவின் ரசிகையாக ரெனேவுக்கும் அந்த உரையாடல் விளக்கொளி போல் சுடர்விட்டு, நீண்ட காட்டுத்தீயாக வளர்கிறது. இரண்டு ஆதர்சங்களும் தத்தமது துறைகளில் சளைத்தவர்கள் அல்ல என்பதே விவாதம். அது மையப்புள்ளியிலிருந்து விலகி பல எல்லை மீறல்களையும் அடைகிறது. ஆனபோதும் அதைப் புன்னகையுடன் எதிர்கொண்டு சமராடும் ரெனே, இனியன் சொல்லும் பிறப்பு சார்ந்த தாக்குதல் ஒன்றுக்கு மட்டும் நொறுங்குகிறாள். நொறுங்கிய அடுத்த சில நொடிகளில் தன்னைத்தானே மீட்டெடுத்து தன் அடுத்தகட்டப் பாதையைத் தீர்மானிக்கின்றாள். அந்தப் பயணத்தில் அவள் நகரும் நட்சத்திரத்தைக் கண்டு பரவசம் கொள்கிறாள். திரையில் 'நட்சத்திரம் நகர்கிறது' என்கிற டைட்டில் அப்போது ஒளிர்கிறது. ‘மெட்ராஸ்’, ‘சார்பட்டா பரம்பரை’ போல் கதாபாத்திரங்களின் வலிமையை உணரச்செய்த பின் டைட்டில் போடும் பா.இரஞ்சித்தின் இந்த பெஞ்ச் மார்க் டச், நம்மை கதாபாத்திரங்கள் கூர்ந்து நோக்கவும் பின் தொடரவும் வைக்கிறது.
ரெனேவின் உணவு, உடை, காதல், சமூகம், அரசியல் என அவளின் அத்தனை உணர்வுகளும் சிந்தனைகளும் அம்பேத்கரியமும் புத்தமும் கலந்த ஒரு வார்ப்பு. அவளுக்குத் தீங்கு விளைவித்த பிற்போக்குக்காரன் ஒருவன் மன்னிப்பு கேட்டு நகருகிறான். அந்த நொடியில், அவள் அவனைக் குழுவில் தொடர்ந்து இருக்கச் சொல்கிறாள். அரசியல் மயமாக்கல் என்பது ஒரு செயல்முறை. அது ஒருநாளில் நிகழாது. பிற்போக்குத்தனத்தில் இயங்குகிறவர்களுக்கு அந்த செயல்முறை நிகழ்வதற்கான கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்கிற அம்பேத்கர் மொழியைப் பேசுகிறாள். அந்த நொடியில் அவள் புத்தரின் உடல்மொழியில் அமர்ந்து இருக்கிறாள். இந்தக்காட்சி படத்தின் ஆன்மாவாக அத்தனை நேர்த்தியாகக் கையாளப்பட்டிருக்கிறது.
நூற்றாண்டு தமிழ் சினிமா அதன் பல முற்போக்கு கதாநாயகிகளை முன்வைத்திருக்கிறது. அந்த பட்டியலில் அம்பேத்கரியம் பேசும் ரெனே,காலம் உருவாக்கிய ஓர் உன்னதம்.அவள் மாட்டுக்கறியைச் சாப்பிட்டுக்கொண்டே வழக்கமான இந்தியச் சராசரிக் கதாநாயகர்களை மொக்கை பண்ணிவிடும் காட்சி பேரற்புதமானது.
கட்டுரையாளர் தொடர்புக்கு:karnasakthi@gmail.com