திரை (இசைக்) கடலோடி 9 | 60 ஆண்டுகளாக கச்சேரி மேடைகளை கலக்கும் ஒரே பாடல்!

திரை (இசைக்) கடலோடி 9 | 60 ஆண்டுகளாக கச்சேரி மேடைகளை கலக்கும் ஒரே பாடல்!
Updated on
4 min read

பொதுவாகக் கர்நாடக இசைக் கச்சேரி மேடைகளில் பாடப்படும் கீர்த்தனைகள் திரைப்படங்களில் இடம்பெறும்போது, அவை மேடைகளில் எந்த ராகத்தில் இசைக்கப்படுகிறதோ அதே ராகத்தில் தான் படங்களிலும் கையாளப்படும்.

உதாரணமாக: சலங்கை ஒலி படத்தில் 'பால கனகமய','சிந்துபைரவி'யில் 'மஹா கணபதிம்', 'கவரிமான்' படத்தில் 'ப்ரோவபாரமா','சங்கராபரணம்' படத்தில் வரும் 'ப்ரோசேவாரெவருரா', 'மானச சஞ்சரரே' ஆகிய பாடல்களை கூறலாம்.இப்படி கர்னடக இசைமேடைகளில் இசைக்கப்படும் கீர்த்தனைகள் திரைப்படங்களில் இடம்பெறும்போது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ரசிக்கப்பட்டும் வருகின்றன.

ஆனால் ஒருபோதும் ஒரு திரைப்படப் பாடல் எவ்வளவுதான் சாஸ்திரீய சுத்தமாக இருந்தாலும் கச்சேரி மேடைகளில் பாடப்படுவது இல்லை.இதற்கு மாறாக,திரைப்படத்தில் அதுவும் நமது தமிழ் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல்,இன்று வரை, அனேகமாக எல்லாக் கச்சேரிகளிலும் அனைத்துப் பாடகர்களாலும் அதே மெட்டில் பாடப்பட்டு வருகிறது! அதுவும் நேயர் விருப்பமாக, சீட்டு எழுதி அனுப்பிக் கேட்கப்பட்டு வருகிறது. அந்தப் பாடல் பாடி முடித்தபிறகு அதனைப் பாடிய பாடகருக்கு / பாடகிக்கு, அவர் மிகவும் பிரபலமான நட்சத்திர அந்தஸ்து பெற்றவராக இருந்தாலும் சரி.. வளர்ந்து வரும் இசைக் கலைஞராக இருந்தாலும் சரி.. கைதட்டல்களை வாங்கிக்கொடுக்கிறது! அப்படிப்பட்ட அந்தப்பாடல் பிறவி மேதை சி.ஆர் .சுப்பராமன் மெட்டமைத்து, எம்.எல். வசந்தகுமாரியும் - பி.என்.சுந்தரமும் இணைந்து பாடிய -மகாகவி பாரதியாரின் ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’.



‘மணமகள்’ படத்தில் இடம்பெற்ற பாரதியின் காதலும் அன்பும் வாஞ்சையும் வழிந்தோடும் இப்பாடல், சி.ஆர். சுப்பராமனின் கற்பனையில் மேலும் கடவுள் மீதான மானுடப் பேரன்பின் உன்னதத்தை உயர்த்திக்காட்டும் ஒரு வடிவத்தைப் பெற்றது. இன்று இசை மேடைகளில் பவனி வந்துகொண்டிருக்கும் இந்த ராகமாலிகைப் பாடலுக்கு இசை அமைக்க சி.ஆர். சுப்பராமன் எடுத்துக்கொண்ட நேரம் வெறும் அரை மணி நேரம். அத்தனை சின்ன கால அளவில் காலமெல்லாம் நம் காதுகளில் இனியுடன் ஒலிக்கும் பாடலகாக நம் மனதுக்கு நெருக்கமான ரகசிய மொழியில் பேசுவதுபோல் மெட்டமைத்துவிட்டார் சி.ஆர். சுப்பராமன்.

‘சின்னஞ்சிறு கிளியே’பாடலைக் கவனித்துப் பார்த்தோமானால் சுப்பராமனின் தனித் திறமை பளிச்சிடும். இந்தப் பாடலுக்கு மரபு மீறாமல் நுணுக்கமாக இசை அமைத்திருக்கிறார். பாடல் ஐந்து கண்ணிகளாக பகுக்கப்பட்டு காபி, மாண்ட், வசந்தா, திலங், சிவரஞ்சனி ஆகிய ஐந்து ராகங்களில் ஒரு இனிய ராகமாலிகையாக அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ பாடலில் மிகக் குறைந்த வாத்திய இசைக்கருவிகளைப் பயன்படுத்தி இருக்கிறார் இசை அமைப்பாளர் சி.ஆர். சுப்பராமன். ஒரு வீணை, ஒரு ஹார்மோனியம், ஒரு தபலா - அவ்வளவு தான்!

இந்தப் பாடலுக்கு இசை அமைக்கும் போது மனதில் ‘ஒரு திரைப்படப் பாடலுக்கு இசை அமைக்கும் உணர்வு’ கடுகளவு கூட இல்லாமல் ‘மகாகவி’ பாரதியாரின் கண்ணம்மாவை ஒரு குழந்தையாக பாவித்து கொஞ்சும் பாவனையை தனது இசையில் பிரதிபலிக்கவேண்டும் என்கிற ஒரே உணர்வோடு ஆத்மார்த்தமாகச் சி.ஆர்.சுப்பராமன் இசை அமைத்திருக்கவேண்டும். அதனால்தான் படம் வெளிவந்து அறுபத்தொன்று வருடங்கள் கடந்து விட்ட இந்தக் கால கட்டத்திலும் அந்தப் பாடல் கர்னாடக இசைக் கச்சேரி மேடைகளில் புதுப்பொலிவோடு உலா வந்துகொண்டிருக்கிறது.

சி.ஆர்.சுப்பாராமன்<br />​​​​​
சி.ஆர்.சுப்பாராமன்
​​​​​

கண்ணனைத் தாயாக, காதலனாக, காதலியாக, நண்பனாக, குழந்தையாக மகாகவி பாரதி பல வகைகளில் அனுபவித்து எழுதி இருக்கிறார். அதில் இந்த ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ பாடலில் கண்ணனை ஒரு குழந்தையாக பாவித்து அழைக்கிறார்.

பறவைகளில் பார்ப்பதற்கு அழகாக வசீகரமாக மட்டும் அல்லாமல் நாம் வளர்ப்பதற்கு உகந்ததாக இருக்கக்கூடியது கிளி ஒன்று தான். கொஞ்சு மழலையில் நாம் சொல்வதை அப்படியே திருப்பி பேசும் தன்மை பறவை இனத்தில் கிளி ஒன்றுக்கு மட்டும் தான் உண்டு.

ஆகவே இந்தப் பாடலில் கன்னணனைச் ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ என்று அழைக்கிறான் அவன். கிளியோ சிறு பறவை. அதிலும் நம் கைக்குள் அடங்கக்கூடிய அளவுக்கு சின்னஞ்சிறு கிளியாம் இந்தக் கண்ணம்மா.

அடுத்தவரியில் அவளை ‘செல்வக் களஞ்சியமே’ என்று அழைக்கிறான்.

திருமகள் அகலாது உறையும் திருமார்பினன் அல்லவா நம் கண்ணன்.

ஆகவே அவன் செல்வக் களஞ்சியமாக இருப்பதில் வியப்பேது!

தொடர்கிறான் பாரதி.

‘என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்’ என்று பல்லவியை முடிக்கிறான் அவன்.

கண்ணம்மா என்ற அந்த மகள் பிறந்ததால் தாயான பாரதி பிறவிப் பயனை அடைந்து விட்டானாம்.

அடுத்து அந்த கண்ணம்மா என்ற பெண் குழந்தையைப் ‘பிள்ளைக் கனியமுது, பேசும் பொற்சித்திரம்’ என்றெல்லாம் கொஞ்சிவிட்டு, தான் அள்ளி அணைக்கவேண்டும் என்பதற்காக தேன் போன்று இனிக்கும் குழந்தை ஆடி வருகிறதாம்.ஆகவே .‘ஆடி வரும் தேனே’ என்று பாடுகிறான்.

காபி ராகத்தில் இந்த முதல் கண்ணியை எம். எல். வசந்தகுமாரியின் கம்பீரமும் இனிமையும் நிறைந்த குரல் அருமையாக பாவபூர்வமாக வெளிப்படுத்துகிறது.

இரண்டாவது கண்ணிக்கு ‘மாண்ட் ’ ராகத்தை பயன்படுத்தி இருக்கிறார் சி.ஆர்.சுப்பராமன்.

தத்தி தத்தி தளர் நடை இட்டு வரும் கண்ணம்மா பாரதித் தாயை பார்த்ததும் ஓடி வருகிறதாம். அப்படி ஒரு குழந்தை ஓடி வரும்போது பார்க்கும் அன்னையின் மனநிலை எப்படி இருக்கும்? பாரதி அழகாக சொல்கிறான்:

‘ஓடி வருகையிலே எந்தன் உள்ளம் குளிருதடி.
ஆடித் திரிதல் கண்டால் எந்தன் ஆவி தழுவுதடி’.

முதலில் குழந்தை அருகில் இருக்கிறது. இப்போது ஓடி வருகையிலே என்கிறபோது கொஞ்சம் தூரத்தில் இருந்தல்லவா வரவேண்டும்.

ஆகவே ‘ஓடி வருகையிலே' என்று தொடங்கும்போது எம்.எல்.வியின் குரல் கொஞ்சம் உயர்ந்து ஒலிக்கும் வண்ணம் இந்தக் கண்ணியை அமைத்திருக்கிறார் சுப்பராமன். அடுத்து அப்படி வந்த குழந்தையை வாரி எடுத்து உச்சி முகர்கிறாள் அன்னை. அப்போது அவள் மனதுக்குள் கர்வம் வளர்கிறதாம்.. சாதாரணக் குழந்தையா அது. தெய்வக் குழந்தை ஆயிற்றே. அதனால் கர்வம் ஓங்கி வளர்கிறதாம்.

அந்தக் குழந்தையை - அதன் அழகை, சூட்டிகையை மெச்சி ஊரார் புகழும் போது அந்தத் தாய் அடையும் இன்பத்தால் அவள் மேனி சிலிர்த்துப் போகிறதாம்.‘ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும்.’ என்ற திருக்குறளை எவ்வளவு அழகாக எளிமையாக பாமரரும் உணரும் வண்ணம் இந்த ஒருவரியில் பாடி இருக்கிறார் பாரதி.

‘உச்சி தனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி
மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி’

இந்த வரிகளை வசந்தா ராகத்தில் எம்.எல்.வி. பாடிக் கேட்கும் போது நமக்கே ஒரு சிலிர்ப்பு விரவி ஓடும் வகையில் சி.ஆர்.சுப்பாராமனின் இசை அமைந்திருக்கிறது.

அடுத்த இரு கண்ணிகள் ஆண்குரலில் - வி. என். சுந்தரத்தின் கம்பீரக்குரலில் ‘திலங்’ ராகத்தில் முதல் இரு வரிகளும், அடுத்த கடைசி இரு வரிகள் ‘சிவரஞ்சனி’ ராகத்திலும் வருகின்றன.

பிஞ்சு ஓட்டத்தில் வரும் குழந்தை கன்னத்தில் முத்தம் இடுகிறது. அப்போது மனம் கள்ளுண்ட போதை வயப்பட்டுப் போகிறதாம். அப்படியே அதனை ஆரத் தழுவும் போதோ மனம் பித்துப் பிடித்த நிலையில் தன்னையே மறக்கிறது.

‘கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள்வெறி கொள்ளுதடி.
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடி'

அந்தக் குழந்தையின் கண்ணில் கண்ணீர் வழிந்தாலோ தாயின் மனதில் ரத்தம் வடிகிறதாம். அதனால் அந்தக் கண்ணீரை மாற்ற 'என் கண்ணின் கருமணியே நீதானே அம்மா. என் உயிரே உன்னுடையதல்லவா.. (என்ன வேண்டும். அழாதே அம்மா.) என்றெல்லாம் சொல்லி குழந்தையை அமைதிப்படுத்துகிறான் மகாகவி.

‘உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி.
என் கண்ணின் பாவை அன்றோ கண்ணம்மா - என் உயிர் நின்னதன்றோ' - என்று முடிகிறது பாடல்.

சி.ஆர். சுப்பராமனின் புகழ் மகுடத்தில் பொறிக்கப்பட்ட ஒரு வைரக் கல்லாக திரை இசைக்கடலில் கண்டெடுத்த இந்தப் பாடல் முத்தினை கர்நாடக இசைக்கச்சேரி மேடைகள் தங்கள் வசப்படுத்திக்கொண்டு இசை வானில் சுடர்விட்டு ஒளிர வைத்துக் கொண்டிருக்கின்றன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in