

‘ரெமோ’ பட விளம்பர நிகழ்ச்சியாக சிவகார்த்திகேயனின் பேட்டி விஜய் டி.வி.யில் ஒளிபரப்பானது. “கொஞ்ச நேரம் பொம்பளையா வந்ததே இந்தப் பாடாக இருந்ததே. இந்தப் பொம்பளைங்க எப்படி ரொம்ப நேரம் பொம்பளையா இருக்காங்களோ?’’ என்று கருத்து உதிர்த்தார் சிவா. இதே சேனலின் வேறொரு நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியன் பழனியப்பன் “ சீரியல் பார்த்து அழும் பெண்களை விடக் கல்யாண சி.டி.க்களைப் பார்த்து அழும் ஆண்கள்தான் அதிகம்” என்றார். பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் இப்படித்தான் நகைச்சுவை என்ற பெயரில் சர்வசாதாரணமாக சேனல்களிலும் திரைப்படங்களிலும் கொட்டுகின்றன!
இதுவே பெரிய பஞ்ச்!
ஜீ டீ.வி.யில் ‘றெக்க’ பட நாயகன் விஜய் சேதுபதி அந்தப் படத்தில் இடம் பெற்ற வசனத்தைக் கூறினார். “பஞ்ச்சா? யாரு? நானா?’’. நிகழ்ச்சிக்கான ஆடியன்ஸ் ரசித்ததைப் பார்த்தால் இதுவே பெரிய பஞ்ச்சாகிவிடும் என்று தோன்றுகிறது. அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற நகைச்சுவை நடிகர் சதீஷ், “எப்பவும் சிவகார்த்திகேயன் படத்திலேயே நடிக்கும் நான் விஜய் சேதுபதி படத்திலும் நடிக்க ஆசைப்படுகிறேன்’’ என்று தன்னிடம் கேட்டு வாய்ப்பு பெற்றதாக இயக்குநர் கூற, சதீஷ் நெளிந்தபடியே ஒத்துக்கொண்டார்.
குடிகார குரு!
‘ட்ரங்கன் மாஸ்டர்’ என்ற ஜாக்கி சான் நடித்த திரைப்படம் மூவீஸ் நவ் சானலில் ஒளிபரப்பப்பானது. வித்தியாசமான இந்த குங் ஃபூ ஸ்டைலை முதலில் உருவாக்கியவர் க்விங் பரம்பரையைச் சேர்ந்த ஒரு மருத்துவர். இவர் அரசுக்கு எதிராகப் புரட்சி செய்தவரும்கூட. சீன நாடோடிக் கதைகளில் பரவலான இடம் பெற்றவர். உலகெங்கும் அவரைப் புகழ்பெறச் செய்துவிட்டார் ஜாக்கி சான்.
காப்பாற்றும் முயற்சி!
சாலைகளில் ஆர்ப்பாட்டம் செய்பவர்களின் மீது காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசுவதும் அவை தொலைக்காட்சி செய்திகளில் இடம்பெறுவதும் வெகு சகஜம். ஆனால், சமீபத்திய செய்திகளில் ஒரு வித்தியாசத்தைப் பார்க்க முடிகிறது. ஆர்ப்பாட்டம் செய்பவர்களில் கணிசமானவர்கள் தங்கள் சட்டைப் பையை ஒரு கையால் பிடித்தபடியே காவல் துறையைச் சேர்ந்தவர்களைத் தாக்குகிறார்கள் அல்லது பின்வாங்கி ஓடுகிறார்கள். வேறொன்றுமில்லை, கைபேசியைக் காப்பாற்றும் முயற்சி!