

தமிழ் மொழியில் மட்டுமின்றி இந்திப் படவுலகத்திலும் ஒரு சிறந்த இயக்குநராக போற்றப்பட்ட ஸ்ரீதர் என்ற சாதனையாளருக்கு அறிமுகமும் அங்கீகாரமும் அளித்த ‘ரத்தபாசம்’(1954) என்ற படம் பின்னர் இந்தியில் ‘பாய் பாய்’(1956) என்ற தலைப்பில் வெளிவந்ததது.
மேடை நாடகமாக வெற்றிபெற்று, தமிழ்த் திரைப்படமாகவும் பெற்ற வெற்றியை இந்தித் திரைப்படத்திலும் எட்டிய இந்தப் படத்துக்கு மேலும் ஒரு சிறப்பு உள்ளது. ஜாவர் சீதாராமன் திரைக்கதை எழுதி ஏ.வி.எம். பேனரில் எம்.வி. ராமன் இயக்கிய (தமிழில் திரைக்கதை, வசனம், இயக்கம்: ஸ்ரீதர்) இந்த இந்திப் படத்தின் ஒரு பாடல் மிக வித்தியாசமான ஒன்றாகப் பெரிதும் பாராட்டப்பட்டது. கதையில் நிகழும் சம்பவத்தின் அற்புதமான விளக்கமாகத் திகழும்படி அந்தப் பாடலை எழுதினார் ராஜேந்திர கிஷன்.
மதன்மோகன் என்ற மாபெரும் இசை அமைப்பாளரின் வெற்றியின் தொடக்கமாக அமைந்த அப்பாடலைப் பாடியவர் கீதா தத் என்ற ஒப்பற்ற பின்னணிப் பாடகி. திரையில் இப்பாடலை பாடி ஆடி நடித்த சியாமளா என்ற எழிலும் ஒயிலும் முகத்தை இயல்பாக நிறைத்த துணை நடிகை ஆகியோரே இப்பாடலை என்றும் மறக்காத இனிய அனுபவமாக ஆக்கினர்.
இளவயது மரணம்
முதலில் கீதா தத். காதல், விரக்தி,சோகம், மகிழ்ச்சி ஆகிய பல தரப்பட்ட உணர்வுகளை அனாசமாகவும் இயல்பாகவும் வெளிப்படுத்தும் திறன் கொண்டவர். ஜமீன் வீட்டுப் பெண்ணாகிய இவருக்கு உரிய இடத்தையும் அறிமுகத்தையும் பெற முடியாமல் மிகுந்த துன்பங்களுக்கு இடையில் 41 ஆவது வயதில் மரணம் அடைய நேரிட்டது பெரிய சோகம். உலகம் இன்று உயரத்தில் வைத்துக் கொண்டாடும் இயக்குநர் குரு தத் இவரது கணவர்.
‘யே, தில் முஜே பத்தா தே’ பாடல் காட்சியில் ஷ்யாமளா
கதையின்படி, ஒழுக்கமான நாயகன் பணி நிமித்தம் பம்பாய்க்கு வருகிறான். அந்த சமயத்தில், தன் மேளாளர் மனைவியின் அழகில் மயங்கி மதியிழக்கிறான். இப்படிப்பட்ட சூழலின் பாடலாக இது அமைந்துள்ளது.
‘யே, தில் முஜே பத்தா தே, து கிஸ் பே ஆ கயா ஹை, வோ கௌன் ஹை ஜொ காபோன் மே சா கயா ஹை,’ என்று தொடங்கும் அந்தப் பாடல் ‘ஹைடோன்’ என்று கூறப்படும் உச்சகட்டக் கவர்ச்சிக் குரலில் கீதா தத் பாடி, அந்தக் காட்சியில் நடித்த சியாமளாவின் வெற்றிக்கு அடிகோலியது பாடல்.
ஏ, உள்ளமே எனக்குச் சொல்
நீ எவர் வசம் ஆகிவிட்டாய்?
அது யார் கனவில் வந்து அமர்ந்துகொண்டது?
இந்த இரவு ஏன் பாடுகிறது இன்ப ராகத்தை?
கண்களில் துக்கம் வந்து பிறகு
ஏன் தொலைவில் சென்றுவிடுகிறது?
சிந்தையில் எதோ லயிப்பு இடம் பெற்றுவிட்டது.
ஏ உள்ளமே கவனமாயிரு
அவர் வந்துவிட்டார் போலிருக்கிறது.
காற்று குளிர்ந்துவிட்டது, சூழலும் பூத்துவிட்டது.
மயக்கும் நிலவு, மயக்கும் விண்மீன்...
ஆஹா மெதுவாக யாரோ பாடும் பாடல் கேட்கிறது.
இப்படிப்பட்ட பொருளில் எழுதப்பட்ட இந்தப் பாடலுக்கு திரையில் நடித்த சியாமளாவின் இயற்பெயர் குர்ஷித் அக்தர். மீனாகுமாரி, மதுபாலா நர்கீஸ், நூதன் போன்ற சிறந்த நடிகைகள் ஆட்சி செய்த அக்கால இந்தித் திரையில், கட்டுடலும் கவர்ச்சி மிக்க குறும்புப் பார்வையும் உடைய இந்த அழகி, ‘ஆர்பார்’ போன்ற படங்களின் கதாநாயகியாகவும் நடித்துப் புகழ்பெற்றுத் திகழ இப்பாடல் வழி வகுத்தது.
- கீதா தத்
மன்மோகன் இசை அமைத்த வெற்றிப் படங்களில் ஒன்றாகத் திகழ்ந்த இப்படத்தில் உள்ள 12 பாடல்களில் கீதா தத் பாடியது இந்தப் பாடல் மட்டுமே. மேற்கத்திய மெட்டின் சாயலில் இசை அமைக்காதவர் என்ற அறியப்பட்ட மன்மோகன் ‘Morning in Portugal’ என்ற மேற்கத்திய மெட்டில் அமைத்த பாடல் இது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.