

உம்ராவ் ஜான் 35 ஆண்டுகள் |
'உண்மையான அன்புக்கு ஏங்குபவர்களைத்தான் காதல் மரணக் குழியில் தள்ளுகிறது' என்றாள் உம்ராவ் ஜான். யார் அந்த உம்ராவ் ஜான்?
உம்ராவ் ஜானை நீங்களோ, நானோ கண்டிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், அவள் வரலாற்றுக்குள் புதைந்துவிட்ட தேவதை. கற்பனை உலகில் துயில்கொண்டிருக்கும் பட்டாம்பூச்சி. ஓவியங்களில் உறைந்துவிட்ட ஒரு கஜல்.
கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவுக்கு வருவதற்குச் சற்று முந்தைய காலம். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உம்ராவ் ஜான் எனும் பெயரில் ஒரு நடன மங்கை வாழ்ந்துவந்தாள். நம் ஊர் தேவதாசிகள் போன்று அன்றைய நாட்களில் அங்கே நடன மங்கைகள்! அவர்களின் பணி இசைப்பது, கவிதை பாடுவது, ஆடுவது, தங்களை நாடி வருபவர்களுக்கு இன்பமளிப்பது.
உம்ராவ் ஜான், அத்தகைய இன்பத்தை வாரி வழங்குபவளாக இருந்தாள். நவாப்கள், நவாப்களின் மகன்கள், வியாபாரிகள், கள்வர்கள், கடன்காரர்கள், வயோதிகர்கள் எனப் பலர் அவளின் வாடிக்கையாளர்களாக இருந்தனர். ‘அதா' என்ற பெயரில் அவள் எழுதிய கஜல் பாடல்களும், அவள் கீதத்தில் ஒளிந்திருந்த மென்சோகமும், அவள் நடனத்தின் நளினமும் அவர்களைக் கட்டிப்போட்டிருந்தன.
இன்பமே அவளது வாழ்வு என்று நினைக்கும் பலருக்கு அவளது சோகம் தெரியாது. ஃபைசாபாத்தில் பிறந்த அமீரான், சிறுவயதில் ஒரு ஏமாற்றுக்காரனால் லக்னோவிற்குக் கடத்தப்பட்டு, அங்குள்ள நடன மங்கை ஒருவருக்கு 125 ரூபாய்க்கு விற்கப்பட்டாள். உம்ராவ் ஜான் இப்படித்தான் உருவாக்கப்பட்டாள். அதன் பிறகு தன் வாழ்க்கையை விதியின் போக்குக்கு விட்டுவிட்டாள்.
நம்ப வைக்கும் நாவல்
1857ம் ஆண்டு பிறந்த மிர்ஸா முகமது ஹாதி ருஸ்வா, உருது மொழி படைப்பாளர்களின் முன்னோடி. அவர் உம்ராவ் ஜானைச் சந்தித்து அவளின் வாழ்க்கையை ‘உம்ராவ் ஜான் அதா' என்ற புத்தகத்தை எழுதினார் என்ற ஒரு தகவல் உண்டு. ‘அப்படி ஒரு பெண், உண்மையில் இருந்தாள் என்று நம்பும் அளவுக்கு இந்த நாவல் உயிர்ப்புடன் இருப்பதால், இதனை ‘மெட்டாஃபிக் ஷன்' என்றும் சொல்லலாம்' என்கிற கருத்தும் பல இலக்கியவாதிகளிடையே உண்டு. 1899-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம் உருது இலக்கியத்தின் முதல் நாவல் என்ற பெருமைக்குரியது. இதனை குஷ்வந்த் சிங், எம்.ஏ.ஹுசைனி ஆகியோர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர்.
இந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதுதான் ‘உம்ராவ் ஜான்' எனும் இந்தித் திரைப்படம். 1981-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு இந்த ஆண்டு 35 வயது. இந்த மாதம் 10-ம் தேதி தனது 62-வது பிறந்தநாளைக் கொண்டாடும் நடிகை ரேகா, இந்தப் படத்திற்காகத்தான் தேசிய விருது பெற்றார்.
ரேகா எனும் கலைஞர்
முசாஃபர் அலி இயக்கிய இந்தத் திரைப்படம், ரேகாவின் திரைத்துறை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படம். அதுவரை அவரது நடனத் திறமைக்காகக் கொண்டாடிய திரையுலகம், முதல் முறையாக அவரது நடிப்புத் திறமையைப் பார்த்து அசந்துபோனது.
நாவலை அச்சுப் பிசகாமல் அப்படியே படமாக்கி இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. நாவலில் வரும் சம்பவங்கள் சிலவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு அதனைப் படமாக்கியுள்ளனர். அதுவும் நாவலில் வருவது போன்று வரிசைக் கிரமமாக இல்லை. நாவலைப் படித்த ஒருவர், இந்தப் படத்தைப் பார்த்தால் நாவலில் சொல்லப்பட்ட சம்பவங்கள் திரைப்படத்தில் முன்னுக்குப் பின்னாகக் காட்சியாக்கப்பட்டிருப்பது தெரியும்.
இந்தப் படத்தை இன்று பார்க்கும்போது மிகவும் பக்குவமற்ற ஆக்கமாகத் தெரியலாம். ஆனால், இந்துஸ்தானி இசை, கஜல் பாடல்கள், மாலை நேரக் கவிதை வாசிப்புக் கூட்டங்கள் என்று சொல்லப்படும் ‘முஷைரா' காட்சிகள், முகலாய பாணி மாளிகைகள், உடை அலங்காரம் என மேம்பட்ட ரசனை உடைய கலாச்சாரம் என்று சொல்லப்படும் ‘லக்னாவி' கலாச்சாரத்தை கேமராவுக்குள் அடக்கிய விதத்தில், இந்தப் படம் லக்னாவி கலாசாரத்தை அறிவதற்கான வாசல்.
சிறந்த நடிகைக்கான விருதைத் தவிர, சிறந்த பின்னணிப் பாடகி (ஆஷா போஸ்லே), சிறந்த இசையமைப்பாளர் (கய்யாம்) மற்றும் சிறந்த கலை வடிவமைப்பு (மன்சூர்) ஆகிய பிரிவுகளிலும் தேசிய விருது பெற்றுத் தந்தது இந்தப் படம்.
சமீபத்தில் பத்திரிகையாளர் யாசர் உஸ்மான் எழுதிய ‘ரேகா: தி அன்டோல்ட் ஸ்டோரி' எனும் புத்தகத்தில் ‘இந்தப் படத்தில் நாயகியாக நடிப்பதற்கு நீங்கள் ரேகாவைத் தேர்வு செய்தது ஏன்?' என்ற கேள்விக்கு முசாஃபர் அலி சொன்ன பதில் இது: “சோகத்தையும் தனிமையையும் வெளிப்படுத்திய அவரின் கண்கள்தான் காரணம். அந்தக் குணங்களைத் தன் நிஜ வாழ்க்கையின் கசப்புகளிலிருந்து அவர் பெற்றிருந்தார்”.
ஆம், இன்று ரேகாவையும் காதல் மீளாத் தனிமையில் தள்ளிவிட்டது. ஒரு விதத்தில் உம்ராவ் ஜானின் நகலாக அவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும்!
தொடர்புக்கு: vinothkumar.n@thehindutamil.co.in