

சமூக வலைதளங்களில் சமீபத்தில் பெரிய அளவில் பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறது 'மாநகரம்' என்ற படத்தின் ட்ரெய்லர். பளிச்சென்ற, வளரும் நட்சத்திரங்களோடு உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் வெளியீட்டுப் பணிகளில் ஈடுபட்டிருந்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அவரிடம் பேசியபோது...
- லோகேஷ்
ட்ரெய்லரைப் பார்க்கும்போது த்ரில்லர் பாணியில் இருக்கிறது. படத்தின் கதையைப் பற்றிச் சொல்லுங்கள்?
கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் இருப்பவர்களுக்கு சென்னை என்பது வியப்பு கொடுக்கக்கூடிய ஒரு பெயர்தான். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மத்தியில் சென்னைக்கு வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற கனவு இருக்கும். வேலை என்றில்லாமல் மாறுபட்ட கனவுகளோடு மாறுபட்ட வயதுகளில் மனிதர்கள் இங்கே வந்துகொண்டேதான் இருக்கிறார்கள். அப்படிச் சென்னைக்கு வரும் நான்கு பேரைச் சுற்றிச் சுழலும் கதை இது. வந்தவர்களின் கனவுகள் பூர்த்தியாகின்றனவா, தகர்க்கப்படுகின்றனவா என்பதுதான் திரைக்கதை. படம், தொடக்கத்திலிருந்து முடியும் வரை விறுவிறுப்பாக இருக்கும்.
இது உங்கள் வாழ்விலோ நண்பர்களின் வாழ்விலோ நடந்த நிஜக் கதையா?
சில சம்பவங்கள் என்னுடைய வாழ்க்கையில் நடந்தவைதான். மற்ற சிறு சிறு சம்பவங்கள் என்னை பாதித்தவை. சில, உண்மைக்கு நெருக்கமான கற்பனையைப் பூசிக்கொண்டவை. இக்கதையை எழுதும்முன்பு சென்னையின் அனைத்து இடங்களுக்கும் பயணித்தேன். அப்போது சென்னையைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கேட்டுக் குறிப்பு எடுத்துக்கொண்டேன். அதிலிருந்து சில உணர்ச்சிபூர்வமான சம்பவங்கள் கிடைத்தன. அவற்றை முன்னிலைப்படுத்தித்தான் இக்கதையை எழுதினேன்.
முதல் பட வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?
வங்கியில் பணியாற்றிக்கொண்டு குறும்படங்கள் இயக்கிக்கொண்டிருந்தேன். வங்கியிலும் எனது ஆர்வத்தைப் பார்த்து, வங்கியைப் பற்றிய ஆவணப்படம் உள்ளிட்ட பணிகளை வெளியே கொடுக்காமல் என்னிடமே கொடுப்பார்கள். நானும் அதை விரும்பிப் பண்ணினேன்.
கார்த்திக் சுப்புராஜ், சி.வி.குமார் கலந்துகொண்ட ஒரு குறும்படப் போட்டியில் எனது குறும் படத்துக்குச் சிறந்த படம், சிறந்த இயக்குநர் விருது எல்லாம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து தனியே நாம் ஏன் ஒரு சிறு படம் பண்ணக் கூடாது என்று 45 நிமிடத்துக்கு ‘களம்' என்ற பெயரில் பண்ணினேன். அந்தப் படம்தான் ‘அவியல்' குறும்படத் தொகுப்பில் நீங்கள் இரண்டாவதாகப் பார்த்த குறும்படம். அதனைப் பார்த்து ‘ஸ்டூடியோ க்ரீன்’ நிறுவனம் கதை இருந்தால் சொல்லுங்கள் என்றார்கள். மூன்று மாதங்கள் அவகாசம் கொடுங்கள் என்று கேட்டு 'மாநகரம்' கதையை எழுதினேன்.
வங்கி ஊழியரான உங்களுக்கு எப்படி சினிமா மீது ஈடுபாடு?
பொதுவாகக் கதை சொல்லுவதும் வரைவதும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். புத்தகத்தின் நுனியில் ஒவ்வொரு பக்கமாக வரைந்து, அதனை மொத்தமாகப் புரட்டினால் காமிக்ஸ் போல அசையும் ஓவியமாகத் தெரியும். அதன் மூலமாக நான் மிகவும் பிரபலமானேன் என்று சொல்லலாம். படித்து ரேங்க் வாங்கிப் பெருமையடைவதை விட, இப்படி வரைந்து அதன் மூலமாக நண்பர்களிடம் கிடைத்த பாராட்டு பெரிதாக தெரிந்தது.
பேஷன் டெக்னாலஜி படித்துவிட்டு ஸ்டேஜ் ஷோ இயக்கிக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் எனக்கான விஷயம் இதுவல்ல என்று புரிந்தது. உடனே எம்.பி.ஏ. படித்து வங்கிக்கு வேலைக்குச் சென்றுவிட்டேன். அங்கேயும் எனக்கு வரைவதும், சினிமா பார்ப்பதும் விடாமல் துரத்தியது. என்னுடன் வேலை பார்த்தவர்கள் அனைவரையும் ஒவ்வொரு நாளாக அழைத்துக்கொண்டு போய் ‘ஆரண்ய காண்டம்' பார்க்க வைத்தேன். ஒரு நல்ல படத்துக்கு அனைவரையும் அழைத்துச் சென்ற சந்தோஷம் கிடைத்தது. ஒரு குறும்படம் எடுத்துப் பார்க்கலாமே என்றுதான் எடுத்தேன். முதல் குறும்படத்துக்கே பெரிய அங்கீகாரம் கிடைத்தது.
எந்த இயக்குநரிடமும் உதவி இயக்குநராக வேலை பார்க்காமலேயே படப்பிடிப்பு உள்ளிட்ட விஷயங்களை எப்படிக் கையாண்டீர்கள்?
சினிமாவில் நிறைய துறைகள் இருக்கின்றன. ஆனால் குறும்படம் பண்ணும்போது எந்தவொரு துறையும் கிடையாது. டீ வாங்கி வருவதிலிருந்து ஆக் ஷன் - கட் சொல்லுவது வரைக்கும் நாம்தான் பண்ண வேண்டும். எந்த ஒரு துறையும் துணைக்கு இருக்காது. சாலையில் அனுமதி வாங்கிப் படப்பிடிப்பு பண்ண முடியாது. அதனால் சினிமாவை விடக் குறும்படத்துக்கான படப்பிடிப்பின்போது 10 மடங்கு வேகமாகப் பணிபுரிய வேண்டும். அப்போதுதான் ஷெட்யூல் போடக் கற்றுக்கொண்டேன். இப்படத்தில் முழுக்க எனது குறும்படக் குழுவை அப்படியே பயன்படுத்தியிருக்கிறேன். அவர்களும் என்னைப் போல சினிமாவுக்குப் புதுசுதான்.
பெரிய திரைக்கு வந்துவிட்டீர்கள். மீண்டும் குறும்படம் இயக்குவீர்களா?
சினிமாவில் ஒருவர் பணம் போடுவதால் நிறைய விஷயங்கள் கட்டுக்கோப்பாக இருந்தாக வேண்டும். அவர்கள் முதலீடு செய்த பணம் திரும்ப வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் இருக்கிறது. ஆனால், குறும்படத்தில் அப்படியில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ பண்ணலாம். தணிக்கைகூடக் கிடையாது. உங்களுக்குச் சமூக அக்கறை இருந்தால் மட்டும் போதும். தனித்தன்மையுடன் இயங்கலாம். சினிமாவுக்கும் குறும்படத்துக்கு நேரம் மட்டும் வித்தியாசம். ஆனால், நாம் படும் கஷ்டத்தில் எந்தவொரு மாற்றமும் கிடையாது. அதனால் கண்டிப்பாகக் குறும்படம் இயக்குவேன்.