

‘ஈரம்’, ‘வல்லினம்’ ‘ஆறாது சினம்’ படங்களைத் தொடந்து ‘குற்றம் 23’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார் அறிவழகன். குடும்பக் கதை அல்லது குற்றக்கதை எதுவாக இருந்தாலும் அதை த்ரில்லர் திரைக்கதைகளில் திறமையாக பேக் செய்து தருவதில் தன்னைத் தனித்துக் காட்டிக்கொள்பவர் இயக்குநர் அறிவழகன். ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக களமிறங்கி கலங்கடித்த அருண் விஜயை சுடச் சுட அதிரடி காவல் அதிகாரியாக நடிக்க வைத்திருக்கிறார் இந்தப் படத்தில்… அவரிடம் பேசியதிலிருந்து…
குற்றம் 23 ட்ரெய்லரைப் பார்த்தால் த்ரில்லர் களம்தான் உங்கள் ஃபேவரைட்டுன்னு தோணுது?
ஓர் இயக்குநரா என்னைப் பொறுத்தவரை கதையளவிலும், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியிருக்கும் விதத்திலயும் ஸ்பெஷலாக இருக்கனும்னு நினைப்பேன், மற்ற கதைகளை காட்டிலும் த்ரில்லர் கதைகளுக்கு வித்தியாசமான சவுண்ட்ஸ், எடிட்டிங் (க்ரோமோ கட்டிங்) இவற்றைப் பயன்படுத்தி பார்க்கலாம். இது போல தொழில்நுட்பங்களை முழுமையான அளவுல காதல் கதையில் பயன்படுத்த முடியாது.
நாம தேர்ந்தெடுக்கிற கதைக்கு த்ரில்லர் ட்ரீட்மெண்ட் கொடுக்கும்போதுதான் அது முழு என்டர்டைன்மென்டாக மாறுதுங்கறது என்னோட கருத்து. த்ரில்லர் படங்கள் தர்ற அனுபவமே தனி. இதெல்லாம் போக சின்ன வயதிலிருந்தே சுஜாதா, பாலகுமாரன், ராஜேஷ்குமார் போன்ற எழுத்தாளர்களின் நாவல்களை அதிகம் படிப்பேன். நான் த்ரில்லர் கதைகளை அதிகம் தேர்தெடுக்க அதுவும் ஒரு காரணமா இருக்கும்ண்ணு நினைக்கிறேன்.
படத்தோடத் தலைப்பே என்ன படம்ன்னு சொல்லுது,
அருண் விஜய்யை ஏன் தேர்வு செஞ்சீங்க?
இந்தப் படம் ஒரு மெடிக்கல் க்ரைம் த்ரில்லர். ஒரு நல்ல டான்சராகவும் நடிகராகவும் இருக்கும் அருண் விஜய்க்கு ஏன் நல்ல பட வாய்ப்புகள் கிடைக்கலன்னு ரசிகர்கள் நினைச்சுகிட்டிருந்த சமயத்துலதான் ‘தடையறத் தாக்க’, ‘என்னை அறிந்தால்’ படங்கள் வந்து அவரோட முழுமையான திறமை வெளிப்படக் காரணமாக இருந்தன. ஒர் இயக்குநராக நான் நினைத்தது அருண் விஜய் ஒரு முழு நீள ஆக் ஷன் படத்தில் நடித்திருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தேன். இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரிக்கென ஒரு உடல் அமைப்பு, மிக யதார்த்தமான மிடுக்கு குறையாத உடல்மொழி, முகபாவனைகள் எல்லாற்றையும் அலட்டல் இல்லாமல் ஸ்கிரின்ல கொண்டுவந்து காட்டியிருக்கிறார்.
மஹிமா, நாடோடிகள் அபிநயா என்று இரண்டு ஹீரோயின்கள்?
இரண்டு பேரையுமே கதாபாத்திரங்களுக்கான ஃபர்பெக்ட் காஸ்டிங்கா ஆடிஷன் வச்சுத்தான் தேர்வு செஞ்சிருக்கேன். அபிநயா பத்தி சொல்லவே வேண்டாம் எந்த கதாபாத்திரமா இருந்தாலும் அதை உள்வாங்கி நடிக்கிறதுல செம ஷார்ப். இவருக்குத் தமிழ் எழுதப் படிக்க தெரியாது. ஆனால், ஆங்கிலம் நன்றாகத் தெரியும். அபிநயா கதையை நகர்த்திக்கொண்டுபோற முக்கியமான கதாபாத்திரத்தில் வர்றார். .
மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் என்றீர்கள். அந்த வகைப் படமாக உருவாக்க எவ்வளவு மெனக்கெட்டு இருக்கீங்க?
பல த்ரில்லர் படங்களைப் பார்த்தால் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். த்ரில்லர் படம் என்றாலும் அதிலும் குறிப்பாக ஏதாவது இருக்க வேண்டும் என்று நினைப்பேன். ஈரம் படம் இயக்கும்போது மற்ற பேய்ப் படங்கள் போன்று இருக்கக் கூடாது என்பதில் கவனமாய் இருந்தேன். ஈரம் படத்தை உருவாக்கக் காரணமாக இருந்த படம் மனோஜ் நைட் சியாமளனின் ‘சிக்ஸ்த் சென்ஸ்’ திரைப்படம். ஆனால் இரண்டு படங்களும் வேறு கண்ணோட்டத்தில் இருக்கும்.
மேலும் த்ரில்லர் பிரதானமாக இருந்தாலும் ஒரே மாதிரியான படங்கள் இயக்குவதில் எந்தப் பயனும் இல்லை. அதனால் எனது ஒவ்வொரு படத்தையும் புதிய சாயலில் எடுக்க விரும்பினேன். நீண்ட நாட்களாகவே ஒரு மெடிகல் க்ரைம் சார்ந்த படம் இயக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது, எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் நாவல்கள் பல இது சார்ந்து இருந்தன. இதனால் அவரிடம் சென்று மெடிகல் சார்ந்த கதை கொண்ட 10 புத்தகங்கள் வாங்கினேன்.
ஒரு புத்தகத்தில் இருந்த சின்ன விஷயம் பிடித்துப்போனது. அது சார்ந்து செய்தித்தாள்களை ஆராய்ந்தபோது பல உண்மையான சம்பவங்கள் கிடைத்தன. அதுவும் என்னை அதிகம் ஈர்த்தது. இப்படித்தான் ‘குற்றம் 23’ படத்துக்கான கதை உருவானது. மெடிகல் ஜானர் என்பதால் தவறான அல்லது பொய்யான தகவல்கள் இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.
சமூகத்துக்கு ஒரு நல்ல கருத்தையும் வைத்துக்கொண்டு, அதேசமயம் முழுமையான பொழுதுபோக்குப் படமாகவும் இருக்க வேண்டும் என்பதில் ஒரு அழகான காதலையும் உள்ளே கொண்டுவந்திருக்கிறேன். அருண் விஜயிடம் அதிரடி ஆக்ஷனை எதிர்பார்த்து வரும் ரசிர்களுக்கு அது விருந்தாக இருக்கும்.