

எண்ணங்களில் இரண்டு வகை உண்டு.ஒன்று நேர்மறை எண்ணங்கள் (POSITIVE THOUGHTS) மற்றது எதிர்மறை எண்ணங்கள் (NEGATIVE THOUGHTS).நேர்மறை எண்ணங்கள் என்றால் நமக்கெல்லாம் நன்றாகவே தெரியும்.எங்கும் எதிலும் நல்லதையே பார்ப்பது,நினைப்பது.
இவை நிறைந்த மனிதர்கள் தங்கள் வாழ்க்கைத்தரம் எப்படி இருந்தாலும் அவர்களைப் பொறுத்த அளவில் இன்பமாகவே வாழ்வார்கள்.தோல்விகளைக்கூட வெற்றிக்கான படிக்கட்டுக்களாகக் கருதி எளிதில் கடந்து செல்வார்கள்.
மற்றவர்கள் பார்வைக்குக் குறையாகத் தென்படுவதெல்லாம் அவர்களுக்கு நிறைவாகவே தெரியும். வாழ்வில் எல்லாமே இன்ப மயமாகவே இருக்கும். அப்படிப்பட்ட இன்பமயமான ஒரு பாடல் தான் இன்று நாம் திரை இசைக்கடலில் கண்டெடுத்திருக்கும் பாடல். இந்தப்பாடலை இயற்றியவர் உடுமலை நாராயண கவி.
1951ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று திரைக்கு வந்த ‘மணமகள்’ திரைப்படத்தில் பிறவி இசை மேதை சி.ஆர்.சுப்பராமன் இசையில் விளைந்த அற்புதமான பாடல் முத்து இது. இந்தப் பாடலைப் பற்றிச் சொல்வதற்கு முன்னால் மணமகள் படத்தைப் பற்றி இரண்டொரு விஷயங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இது ‘சுப்ரபா’ என்கிற மலையாள நாடகத்தை மையமாகக் கொண்டு கலைவாணர் தயாரித்த படம்.அதுவரை ஒரு பாடலுக்கு மட்டுமே நடனம் ஆடிக்கொண்டிருந்த ‘நாட்டியப்பேரொளி’ பத்மினி முதல் முதலாக கதாநாயகியாக அறிமுகமான படம். கலைவாணர் அவர்களே படத்தை இயக்கவும் செய்தார். அவரது இந்தப் படத்தால், காலத்தால் அழிக்கவே முடியாத இரண்டு காவியப் பாடல்கள் நமக்குக் கிடைத்து விட்டன.
ஒன்று..இன்றுவரை கர்நாடக இசைக்கச்சேரி மேடைகளில் கோலோச்சிக் கொண்டிருக்கும் 'சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா'.
அந்த இன்னொன்று இந்தப்பாடல்:'எல்லாம் இன்ப மயம்’
நேர்மறை எண்ணங்களின் பிரதிபலிப்பான இந்தப்பாடலில் எல்லாமே இன்ப மயமாகத்தான் இருக்கிறது என்பதை அற்புதமாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் உடுமலை நாராயண கவி அவர்கள்.
'எல்லாம் இன்ப மயம்’ என்று தொடங்கும் பாடலில் ஒரு விஷயம் கவனிக்கவேண்டும். கவிராயர் எல்லாம் இன்பம் தருகின்றன என்று சொல்லவில்லை. இந்த உலகத்தில் அழகு மிளிரும் அனைத்துமே இன்ப மயமாக - இன்பம் நிறைந்தவையாக இருக்கின்றன என்று சொல்கிறார்.
'எல்லாம் இன்ப மயம் - புவிமேல்
இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்
எல்லாம் இன்ப மயம்'
என்று பாடலின் தொடக்க பல்லவிலேயே சொல்லிவிடுகிறார் கவிஞர். சிம்மேந்த்ர மத்யம ராகத்தில் இசை வீராங்கனை எம்.எல்.வசந்தகுமாரியின் டிஜிட்டல் குரல் நம் மனதை பாடலின் வசம் திருப்பி விடுகிறது.
நல்லதை நம் மனம் உடனே ஏற்றுக்கொண்டு விடுமா என்ன? அதுதான் குதர்க்கம் நிறைந்ததாயிற்றே! ஆணவம், சுயநலம், சந்தேகம், பேராசை ஆகிய துர்க்குணங்களின் வசம் சிக்கி - அதன் விளைவாக எதிர்மறை சிந்தனைகளின் கூடாரமாக இருப்பதாயிற்றே!
ஆகவே அது எதிர்க்கேள்வி கேட்கிறது.
'அட!போங்க சார்.. எங்கே இருக்கு இன்பம்? இங்கே ஒண்ணுமே சரி இல்லே. அப்படி இருக்குறப்போ இன்ப மயமாமே இன்ப மயம்?'என்று எதிர்க்கேள்வி போடுகிறது.
உடுமலை நாராயண கவியிடமிருந்து பளிச்சென்று முகத்தில் அடித்தாற்போல பதில் வருகிறது.
'உனக்கெல்லாம் இப்படித்தான்.நான் உனக்குச் சொல்லவில்லை. தன்னாலே எது முடியும், எது முடியாது என்று தெளிவாகப் புரிந்துகொண்டு - அன்பு மயமான வெற்றிக்கான பாதையை - தேர்ந்தெடுத்து செயல்படும் நல்லவர்கள் முடிக்கும் செயல்கள் எல்லாமே இன்ப மயமாகவே இருக்கும். புரிந்ததா?' என்கிறார் அவர்.
'அல்லாதனவும் ஆவனவும் தெரிந்த
நல்லோர் மனதினில் நாடும் அன்பான
ஓர் வினை முடிவதெல்லாம் இன்ப மயம்'
அதோடு நிற்கவில்லை அவர். இன்பங்கள் ஊற்றாக எவை எல்லாம் இருக்கின்றன என்று பாடலின் சரணத்தில் ஒரு பட்டியலே தருகிறார்.
இந்த இடத்தில் பாடலை தன் வசம் திருப்பிக்கொள்கிறது பி.லீலாவின் கணீர்க்குரல்.
‘மலையில் அருவியிலே
வளர் மழலை மொழிதனிலே
மலரின் மணந்தனிலே
வயலின் பயிர்தனில்
மனையாள் பணிதனிலே
நிலவின் ஒளியாலும் குழலின் இசையாலும்
நீலக்கடல் வீசும் அலையாலுமே..
கலைஞன் சிலையிலும்
கவிதை பொருளிலும்
கான மாமயிலின் ஆடல் அறு சுவையில்
காதலோடு மனிதன் புலன் காண்பது’..
(எல்லாம் இன்ப மயம்)
மேலே அவர் கொடுத்திருக்கும் பட்டியல் அனைத்துமே என்ற நமது ஐந்து புலன்களால் அனுபவிக்கும் இன்பங்கள்தான்.
‘இந்த இன்பங்களை உணர்ந்து அனுபவிக்க நேர்மறை சிந்தனைகள் தான் தேவை. நீயாக எதிர் மறை சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு எதுவுமே சரி இல்லை என்று புலம்பினால் அதற்கு யார் பொறுப்பு?’ என்று அவர் அறைவது போல் நமக்குத் தோன்றினால்...மாற்றிக்கொள்ள வேண்டியது நம்மைத்தான் அல்லவா?
அருமையான இந்தப்பாடலை முழுக்க முழுக்க சிம்மேந்திர மத்யம ராகத்தில் அருமையான இசைக்கோர்வைகளோடு அமைத்திருக்கிறார் சி.ஆர்.சுப்பராமன். குறிப்பாக அனுபல்லவியின் முடிவிலும் சரணத்தின் முடிவிலும் அவர் அமைத்திருக்கும் துரிதகாலப் பிரயோகங்கள்! கைதேர்ந்த இசை வல்லுநர்களால் மட்டுமே பாடக்கூடியவை. அவற்றை அனாயாசமாகக் கையாண்டு எளிதில் கடந்து விட்டிருக்கிறார்கள் எம்.எல். வசந்தகுமாரி - பி. லீலா இருவரும்.
சரணம் முடிந்த பிறகு ஒரு அடுக்கு ஸ்வரக் கோர்வைகளின் ராஜாங்கம் தொடங்கியிருப்பார் பாருங்கள்.. அங்கே தான் நிற்கிறார் சி.ஆர். சுப்பராமன். பிரதான ராகமான சிம்மேந்திரமத்யமத்தில் ஒரு மூன்று அடுக்குகள்.
அதன் பிறகு முறையே மோகனம், ஹிந்தோளம், தர்பார் ஆகிய ராகங்களில் தெறித்து விழும் அடுக்கு ஸ்வரங்களின் அமைப்பு.மலைப்பூட்டும் ஸ்வரக் கோர்வைகளை ஆரம்பத்தில் அமைத்திருந்தார் சி.ஆர்.சுப்பராமன்.
தினமும் அவரது வீட்டில் சாதகம்.
என்னதான் கைதேர்ந்த வல்லுநர்கள் என்றாலும் ஒரு கட்டத்தில் திணறித்தான் போனார்கள் எம்.எல்.வி.யும், பி.லீலாவும்.
'இவ்வளவு கடினமான பிரயோகங்களா?' என்று பிரமித்துப்போன அவர்கள் அவரிடம் நேரிடையாகச் சொல்லாமல் சமயலறையில் இருந்த அவரது மனைவியிடம் சென்று 'ஒரு சினிமாப்பாட்டுக்கு இவ்வளவு கஷ்டமான பிரயோகங்களா? கொஞ்சம் லகுவா இருந்தால் எங்களுக்கு சுலபமா இருக்கும்’என்று தெரிவித்தனர்.
மறுநாள் இருவரும் சாதகம் செய்ய வந்தபோது 'என்ன மேலிடத்துலே ரெக்கமண்டேஷனுக்கு போயிருக்கீங்க போல இருக்கே?' என்று சிரித்துக்கொண்டே அவர்களை வரவேற்ற சி.ஆர்.சுப்பராமன் தனது பிரயோகங்களை சற்று சுலபமாக்கிக் கொடுத்தார்.
அவர் சுலபமாக்கிக் கொடுத்த பிரயோகங்களே கேட்கும் நம்மை மலைக்க வைக்கின்றன ஒரிஜினலாக போட்டவை எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கும்போது பிரமிக்க வைக்கிறது அவரது திறமை.
பாடல் பதிவானதும் கேட்ட கலைவாணர், “என்னப்பா இது? நான் லலிதா - பத்மினியை வச்சு ஒரு நாட்டிய காட்சி எடுக்கலாம்னு இருந்தேன். நீ என்னடான்னா இப்படி ஸ்வரம் அது இதுன்னு ப்ரமாதப்படுத்தி இருக்கியே.. இதை டான்ஸ் ஸீனா எடுத்தா பார்க்கறவங்க மனசுலே டான்ஸ் தான் நிக்குமே தவிர பாட்டோட சிறப்பு எடுபடாது. அதனாலே இதை பாட்டு கிளாஸ்லே ரெண்டு பேரும் பாடுகிற மாதிரியும் அதை சொல்லிக்கொடுக்குற வாத்தியாரும் பத்மினியோட அப்பாவும் ரசிக்கிற மாதிரியும் எடுத்துடுறேன்.அப்பத்தான் இந்தப் பாட்டோட மதிப்பு எல்லாருக்கும் தெரியும்” என்று சொல்லி அப்படியே காட்சியை அமைத்துப் படம் பிடித்தார்.
படம் வெளிவந்து எழுபத்தொரு வருடங்கள் ஆகிவிட்ட பிறகும் இன்றும் திரை இசைக்கடலில் சற்றும் குன்றாத வைரமாக இந்தப் பாடல் முத்து ஒளி வீசிக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு காரணம் உடுமலை நாராயண கவியா, சி.ஆர்.சுப்பராமனா, எம்.எல்.வி - பி.லீலாவின் இணைவா - கலைவாணரா என்று தனியாகப் பிரித்துச் சொல்ல முடியவில்லை.
ஒரு திரை இசைப்பாடல் காலத்தை வென்று நிற்க எப்படிப்பட்ட கூட்டு முயற்சியும், பரஸ்பரம் புரிதலோடு கூடிய ஒற்றுமை உணர்வும் தேவை என்பதற்கு இந்தப் பாடல் ஒரு நிதர்சனமான சாட்சி.
(தொடர்ந்து முத்தெடுப்போம்..)
படம் உதவி: ஞானம்
| பிறவி மேதை சி.ஆர்.சுப்பராமன் |
| தந்தை பெயர் : ராமசாமி அய்யர். பிறந்த தினம் : 18 மே 1916 பிறந்த ஊர் : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி கிராமம். இசை அமைத்த முதல் படம் : செஞ்சுலக்ஷ்மி (எஸ். ராஜேஸ்வரராவ் அவர்களுடன் இணைந்து அமைத்த படம்) தமிழில் முதல் படம் : ராஜ முக்தி பிரபலமான படங்கள் : லைலா மஜ்னு, நல்ல தம்பி, மணமகள், வேலைக்காரி, தேவதாஸ். இசை வாரிசுகள் : மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி, டி.ஜி. லிங்கப்பா, கண்டசாலா, எச். வேணு, ஜி.கே. வெங்கடேஷ். இவர்கள் அடியொற்றி வந்த இசைச் சகாப்தம் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இரட்டை இசை அமைப்பாளர்கள் சங்கர் - கணேஷ் இருவரில் கணேஷ் இவரது இளைய சகோதரர். மறைந்த தினம்: ஜூன் 27 1952 |