

‘கலை வளர்ந்ததும் இங்கேதான், காதல் சொன்னதும் இங்கேதான், கட்சி வளர்த்ததும் ஆட்சி புடிச்சதும் இந்த சினிமாதான்’ - ‘ஆண்பாவம்’ படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகள் வரலாற்றின் உண்மை தோய்ந்தவை.
முதல் பெண் திரைப்படக் கலைஞராக கே.பி. சுந்தராம்பாளை சட்டமன்ற மேலவை உறுப்பினராக ஆக்கியதில் தொடங்கி, இரண்டு திரை வசனகர்த்தாக்கள், இரண்டு பெரும் நட்சத்திரங்களை முதல்வர்களாக ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியதுவரை தமிழ்த் திரையுலகுக்குப் பெரும் பங்குண்டு. இது இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலும் நிகழ்ந்திராத வரலாறு.
‘பராசக்தி’யின் சமூக விமர்சனக் கதாபாத்திரமான குணசேகரனின் வார்த்தைகளில் சொல்வதானால், கடந்த 75 ஆண்டுகளில் ‘தமிழ் சினிமா தென்றலைத் தீண்டியதில்லை.. ஆனால் தீயைத் தாண்டியிருந்தது’. சுதந்திரத்திற்கு முன்னர் சுதந்திர உணர்வை ஊட்டவும், பக்தியைப் பரப்பவும் தவறவில்லை தமிழ் சினிமா.
இதன் கூடவே நாட்டார் மரபில் வந்த சாகசக் கதைகளும் இதிகாச புராணப் படங்களும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. தொடக்கத்தில் திரைப்படங்கள் மேல் வைக்கப்பட்ட ஒரு மலினமான கேளிக்கை பிம்பம், ஆங்கிலேயரின் தணிக்கை, தடை போன்ற அடக்குமுறைகள், இரண்டாம் உலகப் போரால் ஏற்பட்ட படச்சுருள் பற்றாக்குறை (போர் படங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது), மலிவான விலையில் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டுத் திரைப்படங்கள், சினிமாத் தொழிலாளர் பிரச்சினை எனப் பலவாறாகச் சிக்கல்களை எதிர்கொண்டது. பின்னர் அவற்றையெல்லாம் கடந்து, ‘திராவிட அரசியலை’ மக்களிடம் கொண்டு செல்லும் சக்திமிக்க பிரச்சார வாகனமாக வடிவெடுத்தது.
அந்த வரிசையில் 1952இல் வெளிவந்த ‘பராசக்தி’யும் 1954இல் வெளிவந்த ‘ரத்தக் கண்ணீர்' படமும் சமூக நீதியையும் பகுத்தறிவையும் பேசின. மூடநம்பிக்கைகளையும் சனாதனத்தையும் எதிர்த்தன. இவற்றில் கலகக் குரலாய் ஒலித்த எழுத்தின் வீச்சும் பேச்சின் சுதந்திரமும் அதுவரையிலான தமிழ் சினிமாவை புதிய திசையில் செலுத்த முயன்றன.
புது ரத்தம் பாய்ந்தது!
திராவிட இயக்கம் ஆட்சியில் அமர்ந்த பிறகு பிரச்சார சினிமாவுக்கான தேவை முடிந்துபோனது. சினிமாவாக எடுக்கப்பட்ட சபா நாடகங்களும் வணிக கட்டமைப்புக்குள் பின்னப்பட்ட கதைகளும் எனப் பொத்தாம் பொதுவாகவே நகர்ந்து கொண்டிருந்தது. ‘பராசக்தி’ ஓடிய அதே காலத்திலேயே ‘ஔவையார்’ படமும் ஓடியிருக்கிறது! ‘ரத்தக் கண்ணீ’ருக்கு கிடைத்த வரவேற்பு ‘கணவனே கண் கண்ட தெய்வ’த்துக்கும் கிடைத்திருக்கிறது. மக்களின் இந்த கலவையான ரசனையின் சூட்சுமம் பிடிபடாமலேயே சில காலம் பயணித்து வந்திருக்கிறது தமிழ்த் திரை.
எல்லாத் துறைகளிலும் தன்னிறைவையும் வளர்ச்சியையும் நோக்கிய ஓட்டத்தில் திரையுலகமும் பல மாற்றங்களையும் தாக்கங்களையும் உள்வாங்கியபோது அதற்குப் புது ரத்தம் பாய்ச்சியவர்கள் அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளாகவே இருந்தார்கள்.
பாலசந்தர், மகேந்திரன், பாரதிராஜா, பாலுமகேந்திரா உள்ளிட்ட பல படைப்பாளிகளின் பங்களிப்பு தமிழ் சினிமாவை வாழ்க்கைக்கு நெருக்கமாகக் கொண்டு வந்தது. தமிழ்ப் படங்களின் தரத்தை உள்ளடக்க ரீதியாக, படைப்பாக்க ரீதியாக உயர்த்த, இவர்கள் முயன்று பார்த்த யதார்த்த அலைக்கு, சிறந்த இசைக் கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத் தொகுப்பாளர்கள் என தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பும் பெரிதும் கைகொடுத்தன.
அதேபோல், சர்வதேச திரைப்பட விழாக்கள், அரசு திரைப்படக் கல்லூரிகள், தேசிய விருதுகள், தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் என அரசுகள் முன்னெடுத்த சினிமா வளர்ச்சிக்கான முன்னெடுப்புகளும் திரையுலகை அடுத்தக் கட்டம் நோக்கி வளர்த்தெடுப்பதில் ஊக்கியாக அமைந்தன.
தொடரும் பயணம்
1960 கெய்ரோ படவிழாவில் ‘வீரபாண்டிய கட்டப்பொம்மன்’ படத்தில் கட்டப்பொம்மனாக வாழ்ந்திருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜி.ராமநாதனுக்கும் கொடுக்கப்பட்டதில் தொடங்கி புத்தாயிரத்துக்குப் பிறகு ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் விருதுகளை வென்றது வரையில், தற்காலத்தின் தமிழ் சினிமா உலக அரங்கில், தொழில்நுட்பத் தேர்ச்சி, படைப்பாக்கம், சந்தையிடல், வசூல் ஆகியவற்றில் புதிய எல்லைகளைத் தொட்டு நிற்கிறது.
கடந்த 75 ஆண்டுகளில் கதை, வசனம், திரைக்கதை, இசை, பாடல், ஒலி, ஒளி, வண்ணம், 70 எம்எம் அகலத் திரை, 3டி , டால்பி ஒலிச்சூழல், டிடி எக்ஸ், டிஜிட்டல் சினிமா, அனிமேஷன், கிராஃபிக்ஸ், விஷுவல் எஃபெக்ட்ஸ் என தொழில்நுட்ப வளர்ச்சியை காலந்தோறும் உள்வாங்கி வளர்ந்துகொண்டிருக்கிறது.
சினிமாவை ஓர் உயர்ந்த கலையாக நேசிக்கும் புதிய தயாரிப்பாளர்கள், புதிய அலை இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், நட்சத்திர நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் காலத்துக்கேற்ற பரிமாணங்களோடு தமிழ்த் திரையுலகம் மிளிர்ந்திருக்கிறது.
அடக்குமுறையும் அடங்காத கலையும்
‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தியின் ‘தியாக பூமி’ 1937இல் திரையிடப்பட்டபோது ஆங்கில அடக்குமுறை காரணமாக அப்போதைய பிரிட்டிஷ் காவல் துறை திரையரங்கில் தடியடி நடத்தி தேசபக்திகொண்ட ரசிகர்களைத் துரத்தியடித்தது. அங்கிருந்து பயணித்த கலையானது, நாயக பிம்பத்துக்கு காக்கிச் சீருடை அணிவிக்கும் சாகசக் காவல் அதிகாரிகளாக கதாநாயகர்களை வணிக நோக்கில் ஒரு பக்கம் முன்னிறுத்திவருகிறது.
அதேநேரம், இன்று காவல்துறையின் அத்துமீறலை, லாக்கப் மரணங்களை விசாரணைக்கு உட்படுத்தி, புதிய விவாதத்தைத் தொடங்கி வைக்கும்விதமாக ‘விசாரணை’, ‘ஜெய்பீம்’, ‘ரைட்டர்’, ‘டாணாக்காரன்’ எனப் பல துணிச்சலான படைப்புகளைக் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.
எண்ணிக்கை என்கிற அளவில் இத்தகைய காத்திரமான படைப்புகள் குறைந்திருந்தாலும் இவற்றுக்கு மக்களிடம் கிடைத்துவரும் ஆதரவும் அவற்றுக்குக் கிடைக்கும் வணிக வெற்றியும் தமிழ் சினிமாவின் வளர்ச்சியிலும் ரசனையிலும் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் காட்டுகிறது எனலாம்.
இதனிடையே 1975இல் தொலைக்காட்சியின் வருகை ஒரு கிளை நதிபோல் தொடங்கியிருந்தாலும், பின்னர் அதுவே செயற்கைக்கோள் அலைவரிசைகளின் யுகமாக மாறியது. இன்று இணையத்தின் வளர்ச்சி, டிஜிட்டல் வளர்ச்சி ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள ஓடிடி (OTT) முற்றம், சினிமா பார்க்கும் அனுபவத்தை முற்றாக மாற்றியிருக்கிறது.
சினிமா சாத்தியப்படுத்தாத பல விஷயங்களை ஓடிடி படைப்புகள் முயன்று வருகின்றன. அதேநேரம், திரையரங்கு நோக்கி மக்கள் வருவதைக் கணிசமாகக் குறைத்திருக்கிறது ஓடிடியின் காலம்.
ஒரு சின்ன சதுரத்தில் தொடங்கி, மலை வழி நடந்து, ஆடுகூட தாண்டும் அளவுக்கு சுருங்கி, பின்னர் யாரும் தாண்ட முடியாத அளவுக்கு அகலமாகி பிரவாகமாக ஓடிக்கொண்டிருப்பதுதான் ஒரு பெரும் ஜீவநதியின் இயல்பு. அதுபோல், பல சிக்கல்களையும் தடைகளையும் கடந்து நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது தமிழ் சினிமாவின் தீராப் பயணம் !
தொடர்புக்கு: tottokv@gmail.com