

பிரபுதேவா - நயன்தாரா இருவரும் தங்கள் காதலை மறக்க நினைத்தாலும் கூகுள் மறக்கிற மாதிரி இல்லை. நயன்தாரா - டாட்டூ என இரண்டு வார்த்தைகளை உள்ளீடு செய்தால் போதும். தன் காதலின் வலிமையை நிரூபணம் செய்யும் விதமாகத் தனது கையில் பிரபு என்ற பெயரைப் பச்சை குத்திக் கொண்ட நயன்தாராவின் படங்கள் சரமாரியாக வந்து விழும். கால ஓட்டத்தில் இவர்களின் காதல் காணாமல் போய்விட்டாலும், கையில் குத்திக்கொண்ட டாட்டூவுக்கு நயன்தாராவால் டாட்டா காட்ட முடியவில்லை. படங்களின் நடிக்கும்போது இதை ஒப்பனையால் மறைத்தும், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது இந்த டாட்டூவை மறைக்கும் விதமாக உடையணிந்தும் சமாளித்துவருகிறார் நயன்தாரா.
ஒரு கட்டத்தில் இந்த டாட்டூவால் மன உளைச்சல் ஏற்பட, நயன் தாராவின் நலம் விரும்பிகள் அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிடுங்களேன் என்று அறிவுரை வழங்கியிருக்கிறார்கள். இதை ஏற்றுக்கொண்ட நயன் தனது காதலின் மிச்சமாக இருக்கும் இந்த டாட்டூ மீது கத்தி வைப்பதில் தப்பில்லை என்று முடிவு செய்துவிட்டாராம். ஆனால் நிரந்தர டாட்டூக்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது ஆபத்து என்று குடும்ப மருத்துவர் சொல்லவே சட்டென்று பின்வாங்கியிருக்கிறார்.
ஆனால் தற்போது நயன்தாராவுக்கு நம்பிக்கை கொடுத்துவிட்டார் கோச்சடையான் நாயகி தீபிகா. இவர் தனது கழுத்தோரம் பொறிந்திருந்த ஆர்.கே. என்ற இரண்டெழுத்து டாட்டூவை அறுவை மூலம் வெற்றிகரமாக அகற்றிய தோடில்லாமல், சுவடே தெரியாத வண்ணம் அதற்கு ‘ஸ்டெம் செல்’ சிகிச்சையும் எடுத்துக் கொண்டாராம். அதே சிகிச்சையைப் பின்பற்ற முடிவு செய்துவிட்டாராம் நயன்.