திரை (இசைக்) கடலோடி 7 | பாரதியின் அகண்ட கனவு!

திரை (இசைக்) கடலோடி 7 | பாரதியின் அகண்ட கனவு!
Updated on
3 min read

இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சுதந்திரத்துக்காக நம் முன்னோர் கொடுத்த விலை மிக அதிகம். தங்கள் சொத்து, சுகங்களை இழந்து, போராட்டக்களத்தில் உறவுகளைப் பறிகொடுத்து, தாங்களே ரத்தம் சிந்தி தங்கள் இன்னுயிரை இழந்து என அவர்கள் செய்த தியாகங்கள் பெரும் வரலாறு.

வரலாற்றைப் புரட்டி அவற்றையெல்லாம் நாம் நினைத்துப்பார்க்கவே நெஞ்சம் நெகிழ்கிறது.

எல்லோரும் ஓர் மதம். எல்லோரும் ஓர் குணம் என்று இருந்ததால் அல்லவா சுதந்திரம் என்ற அழியாத பொக்கிஷத்தை நமக்கு சமர்ப்பிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. அவர்கள் அனைவருக்கும் தலை வணங்கி ...

இனி நாம் திரை இசைக்கடலாடுவோம்.

ஒன்றுபட்டால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நமக்கு கிடைத்த வீர சுதந்திரம் மூலம் இதற்காக பாடுபட்ட ஒவ்வொரு விடுதலை வீரரும் காட்டிக்கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.

அந்தத் தேச ஒற்றுமை எப்படி இருக்கவேண்டும் என்று படம் பிடித்துக் காட்டும் பாடல் ஒன்றைத்தான் நாம் இன்றைய இடுகையில் பார்க்கப் போகிறோம்.

1964 ஆம் ஆண்டு வெளிவந்த இயக்குநர் திலகம் கே. எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் திரைக்கதை வசனம் இயக்கத்தில் வெளிவந்த 'கை கொடுத்த தெய்வம்' படத்துக்காக, மகாகவி பாரதியாரின் 'சிந்து நதியின் மிசை நிலவினிலே' என்ற பாடலைத் தேர்ந்தெடுத்த இயக்குநர் கே.எஸ்.ஜி, மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தியிடம் கொடுக்க.. அதற்கு தேசம் என்று பொருள்படும் ஹிந்துஸ்தானி ராகமான ‘தேஷ்' (DESH ) ராகத்தை தேர்ந்தெடுத்து பாடலாக்கியிருக்கும் மெல்லிசை மன்னர்களின் இசை ஆளுமை வியக்க வைக்கிறது.

பாரதியாரின் பாடலின் தொடக்க வரிகள் ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே’ என்று இந்திய அன்னையின் சிரத்திற்கு மகுடமாக இருக்கும் காஷ்மீரில் பாயும் ஜீவநதியைக் குறிப்பிட்டே தொடங்குகிறது.

பாரதியின் வார்த்தைகளுக்குள் மறைந்திருக்கும் இசையை எவ்வளவு லாவகமாக மெல்லிசை மன்னர் கண்டுபிடித்துப் பாடலாக உருமாற்றி - அந்தப் பாடல் காலத்தை வென்று இன்றும் நிலைத்திருக்கும் வண்ணம் கொடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கும் போது அவர்களுடைய திறமை பிரமிக்க வைக்கத்தான் செய்கிறது.

'சிந்து நதியின் மிசை நிலவினிலே' இந்த முதல் வரிக்கு எம்.எஸ்.வி. அமைத்திருக்கும் இசையில் அமைதியாக எந்தச் சலனமும் இல்லாமல் நிலவொளியில் மிதக்கும் தோணி அழகாகச் செல்வதற்கு ஏற்றமாதிரி சூழ்நிலை வந்து விடுகிறது. மத்யம ஸ்ருதியைக் கையாண்டு அமைத்திருக்கும் அழகு மனதை முதல் வரியிலேயே பாடலின் பக்கமாகத் திருப்பி விடுகிறது.

இனி பாரதிக்கு வருவோம்: ஒருமைப்பாட்டை எப்படி எல்லாம் இந்த முண்டாசுக் கவிஞன் ஏற்படுத்துகிறான் என்று நினைத்துப் பார்த்தால் ஒரு கணம் வியப்பு மேலிடுகிறது.

'அமைதியான சிந்து நதியில் நிலவொளியில், சேர நாட்டு - அதாவது தென்கோடியில் இருக்கும் கேரள தேசத்து இளம் பெண்களுடன் - சுந்தரத் தெலுங்கில் பாடலை இசைத்துக்கொண்டு தோணிகளை செலுத்திக்கொண்டு விளையாடி வருவோம்.’ என்று அழைக்கிறார்.

'சிந்துநதியின் மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்'

இந்த இடத்தில் பாடலுக்கு இசை அமைக்கும்போது ஏற்பட்ட ஒரு ருசியான, நகைச்சுவையான சம்பவம் நடந்தது.

இசை அமைத்துக்கொண்டிருந்த எம்.எஸ். வி. தயங்கி நிறுத்திவிட்டார்.

இயக்குநர் திலகம் கே.எஸ்.ஜி. சட்டென்று கேட்டார்:

“என்ன சிங்கம் (அவர் மெல்லிசை மன்னரை சிங்கம் என்றுதான் அழைப்பார்) என்ன ஆச்சு? ஏன் நிறுத்திடீங்க?” என்று கேட்டார் கே.எஸ்.ஜி.

“இல்லே. இந்தப் பாட்டு எழுதினவரை கொஞ்சம் வரச்சொல்லணும்?” என்றார் எம்.எஸ்.வி.

“ஏன் சிங்கம்? என்ன விஷயம்?” - இது கே.எஸ்.ஜி.

“இல்லே.. வார்த்தை மெட்டுக்குள்ளே வராம கொஞ்சம் இடிக்குது. பாட்டிசைத்து என்ற வரி வேகமா பாடுறப்ப 'பாட்டி செத்து'ன்னு வர்ற மாதிரி ஒலிக்குது. அவர் வந்து வார்த்தையை மாத்திக்கொடுத்தா நல்லா இருக்கும்” என்றாரே பார்க்கலாம்!

அதிர்ந்து போனார் கே.எஸ்.ஜி.

“சிங்கம் ? என்ன சொல்லுறீங்க? இந்தப் பாட்டை எழுதியவர் மகாகவி பாரதியார் சிங்கம்?”

“அதனாலே என்ன? அவர் வரமாட்டாரா?”

“எப்படி சிங்கம் வருவாரு. அவர் தான் உயிரோடவே இல்லையே?”

அப்போதுதான் மெல்லிசை மன்னருக்கு உறைத்தது.

“அட!ஆமாம். அவர் போயிட்டாரில்லே. அப்ப சரி" என்று மெட்டை தவறுதல் வராதபடி - வார்த்தை இடிக்காதபடி - கவனமாகக் கையாண்டார் எம்.எஸ்.வி.

அந்த அளவுக்கு இசை ஒன்றைத் தவிர உலகியல் விஷயங்கள் எதுவுமே அறியாமல் இருந்தவர் அவர்.

இனி.. பல்லவி முடிந்ததும் இணைப்பிசையாக பாடகியரின் கோரஸ் ..ஹம்மிங். இடையில் புல்லாங்குழல் பிட்கள் இடைவெளியை அழகாக இட்டு நிரப்புகின்றன. ஹம்மிங் முடிந்து டி.எம். சௌந்தரராஜன் தொடங்குவதற்கு முன்னால் நதி நீர் சுழித்து ஓடுவதை இசையால் உணர்விக்க புல்லாங்குழல் - சித்தார் இணைவில் ஒரு சிறிய துணுக்கிசை.

முதல் சரணத்துக்கு முன் கோரஸ் குரல்களையே இணைப்பிசையாக பயன்படுத்தி பிரமிக்க வைக்கிறார் மெல்லிசை மன்னர்.

இனி பாரதி கனவு கண்ட ஒற்றுமை எப்படி எல்லாம் வெளிப்படுகிறது என்று பார்ப்போம்:

'கங்கை நதிப்புறத்து கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்'

சரணத்தின் இந்த வரிகளை ‘கங்கை நதிப்புறத்து’ என்று தொடங்கும்போது டி.எம்.எஸ். அவர்களின் குரல் உச்சத்துக்கு ஏறி ஒலிக்கிறது.

கங்கை வடஇந்தியாவில் அல்லவா இருக்கிறது. அதன் தூரத்தை குறிக்க குரலும் மேலே எழும்புகிறது. அடுத்த வரிக்கு வரும் போது கீழிறங்கி விடுகிறது. காவிரி வெற்றிலைக்கு என்று வரும் போது காவிரி என்ற வார்த்தையை சற்று அதிகப்படியான சங்கதி சேர்த்து நீட்டி அமைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர். பரந்து விரிந்து பெருகி வரும் காவிரியை நினைவு படுத்துவது போல..

'சிங்க மராட்டியர் தன் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.'

இந்த வார்த்தைகளில் கம்பீரமும் பெருமிதமும் மராட்டியாரின் முகத்தில் தெரியும். அது என்ன சார்? சிங்க மராட்டியர் கவிதை.. ஏன் ..அது என்ன அத்தனை உசத்தி என்றால்.. மராட்டியத்தின் துக்காராம், ஞான தேவர் போன்ற அவதார புருஷர்கள் எளிய நடையில் பாடிக்கொடுத்த அபங்கங்கள் கட்டமைப்பிலும், கருத்தாழத்திலும் சிறந்தவை.

அவற்றை பெற்றுக்கொண்ட கேரள இந்தியர் தங்கள் பகுதியின் உயர்ந்த பொருளான யானைத் தந்தத்தை அவருக்கு பரிசாக அளிக்கின்றனர்.

இந்தக் கட்டத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் நடிப்பை சற்று கவனித்துப் பார்த்தோமானால் மராட்டியாராக வரும் போது ஒரு கம்பீரம் பெருமிதம் கலந்த லேசான கர்வம் முகத்தில் தெரியும். அதே கேரளத்து மனிதரை பிரதிபலிக்கும் போது - வாங்கும் போது முகத்தில் மகிழ்ச்சி, திருப்தி, நன்றி எல்லாம் கலந்த ஒரு உணர்வை பிரதிபலிப்பார் பாருங்கள்! அதே போல எடை அதிகமான தந்தத்தைத் தூக்கிக் கொடுக்கும் போது அவர் முகத்தில் பிரதிபலிக்கும் ஜாக்கிரதை உணர்வு..

வெறும் எட்டு நொடி நேரம் மட்டுமே இடம் பெறும் ஒரு சிறிய ஷாட்டிற்குள் கர்வம், பெருமிதம் கலந்த ஒரு கம்பீரம், மகிழ்ச்சி, நிறைவு, எச்சரிக்கை உணர்வு ஆகிய இத்தனை உணர்வுகளையும் பிரதிபலிக்கிறார் என்றால்.. கண்டிப்பாக இன்றைய நடிகர்களுக்கு நடிப்புக்கான ஒரு பல்கலைக்கழகம் அவர்தான்!

தொடரும் சரணம் தெலுங்கில் எல்.ஆர். ஈஸ்வரி - ஜெ.வி. ராகவலு ஆகியோரின் குரல்களில் ஒலிக்கிறது. இந்தச் சரணத்தின் இடையிலும் இறுதியிலும் கோரஸ் பாடகியரின் ஹம்மிங்கையே இடைவெளிகளை இட்டு நிரப்ப இசைக்கருவியாக மெல்லிசை மன்னர் பயன்படுத்தி இருக்கிறார்.

தொடர்ந்து சித்தாரில் இசைப் பிரயோகங்கள், முத்தாய்ப்பாக குழலிசை என்று வரும்போது.. மேலே பாடலை எப்படித் தொடரலாம் என்று பாரதியின் யோசனையையும் கற்பனைப்பொறி தட்ட அவன் நிமிர்ந்து உட்கார்வதையும் கே.எஸ்.ஜி. காட்சிப்படுத்த தனது அபார ஞானத்தால் காட்சிக்கு உயிரோட்டம் சேர்க்கிறார் மெல்லிசை மன்னர்.

தொடர்ந்து பாரதி....

'சிங்களத்தீவினிற்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்'

என்று சேது சமுத்திர திட்டம், நதி நீர் இணைப்புத் திட்டம் ஆகியவற்றை அன்றே கனவு கண்டு பாடி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்.
அந்த தேசிய கவியின் கனவு நூறாண்டை நோக்கி பயணிக்கும் நமது சுதந்திர இந்தியாவில் விரைவிலேயே நனவாக பாரத மாதாவின் மலரடிகளை வேண்டிக்கொள்வோம்..

மெல்லிசை மன்னர்கள் - டி. எம். சௌந்தரராஜன் - எல். ஆர். ஈஸ்வரி - நடிகர் திலகம் - கேமரா மேதை கர்ணன் - இயக்குநர் திலகம் கே.எஸ். ஜி. - என்று அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து உருவாக்கித் தந்த இந்த பாடல் முத்து, திரை இசைக்கடலில் தேச ஒற்றுமைக்கு உருவகமாக விளங்கும் ஒரு தலை சிறந்த முத்தாக காலத்தை வென்று பிரகாசித்துக் கொண்டிருக்கிறது என்பது நிஜம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in