இந்தியா 75: பழைய பாதையில் சில புதிய மாற்றங்கள்

இந்தியா 75: பழைய பாதையில் சில புதிய மாற்றங்கள்

Published on

நாட்டுப்பற்று, போர் என்ற கருதுகோள்களை எடுத்தாண்டுகொண்டிருந்த தமிழ் சினிமா சமூகக் கரிசனங்களுடன் தன் பார்வையை உள்நோக்கிச் செலுத்த ஆரம்பித்தது விடுதலைப் போராட்டத்துக்குப் பிறகுதான்.

கோவை அய்யாமுத்து இயக்கிய 'கஞ்சன்' (1947) படத்தில் இடம்பெற்ற அவரே எழுதிய 'இந்த உலகினில் இருக்கும் மாந்தருள்/ எழிலுடையோன் எங்கள் தமிழன்” என்ற பாடல், சுதந்திரத்திற்குப் பின் தமிழ் சினிமாவில் ஏற்பட்ட ஒரு மாற்றத்தைப் பிரதிபலித்தது.

அண்ணாதுரை வசனம் எழுதிய ‘நல்லதம்பி’ (1949), பின்னர் ‘வேலைக்காரி’ படங்கள் மூலம் திராவிட இயக்கத்தின் தாக்கம் தமிழ்த்திரையில் தீர்க்கமாக வெளிப்பட்டது. மு.கருணாநிதி ‘பராசக்தி’யில் (1952) மனதைக் கவரும் கதாபாத்திரப் பேச்சில் முற்போக்குக் கருத்துகளைப் பொதிந்து, ஒரு பாணியை உருவாக்கினார். கலைஞர்கள் பலர் கழகத்தில் இணைந்தனர்.

கே.ஆர்.ராமசாமியும் என்.எஸ்.கிருஷ்ணனும் திமுகவிற்கு ஆதரவு கொடுத்தனர். எஸ்.எஸ்.ராஜேந்திரன், தேர்தலில் நின்று வெற்றிபெற்றார். தன் பிரபலத்தை திமுக பயன்படுத்திக் கொள்ள எம்.ஜி.ஆர். அனுமதித்தார். அரசியல்ரீதியாக ஒரே கருத்துகளைக் கொண்டிருந்த அவரது ரசிகர்கள் அனைவரும் அவர் தனிக்கட்சி ஆரம்பித்தபோது ஒருமுகமாக ஆதரித்தனர். சினிமா நடிகர்கள் அரசியலில் ஈடுபடுவதும் திரை-அரசியல் ஊடாட்டமும் இப்போதும் தொடர்கிறது.

தமிழ்த் திரையில் ஹாலிவுட் பாணி

அமெரிக்காவில் முறையாக சினிமாக் கலையைக் கற்றவர்கள் எல்லிஸ் ஆர்.டங்கன், மைக்கேல் ஒமலேவ், எம்.எல்.டாண்டன் ஆகியோர். இவர்கள் எடுத்த ‘சகுந்தலா’ (1940), ‘நவயுவன்’ (1937), ‘யயாதி’ (1939) ஆகிய படங்கள் அமெரிக்க பாணியை இங்கு அறிமுகப்படுத்தின. கம்பெனி நாடகப் பாணியில் உறைந்து கிடந்த தமிழ்த் திரையுலகில் உடைப்புகளை இவர்கள் ஏற்படுத்த முயன்றனர். சில உள்ளூர் இயக்குநர்களும் இந்தப் பாணியைப் பின்பற்றினர். கே. ராம்நாத்தின் ‘ஏழை படும் பாடு’ (1950) இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

ஆனால், இந்த ஹாலிவுட் பாணி நிலைக்கவில்லை. நாடகத் தன்மை மேலோங்கிய படங்களே தயாரிக்கப்பட்டன. நாடக மேடையி லிருந்து வந்த ஏ.பி.நாகராஜன், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் போன்ற இயக்குநர்களின் படங்கள், நாடக பாணி சினிமாவை வேரூன்றச் செய்தன. ‘தில்லானா மோகனாம்பாள்’ (1968) போன்ற படங்கள் இதற்குச் சிறந்த உதாரணம். அறுபதுகளில் சபா நாடக மேடையிலிருந்து கே.பாலசந்தர், விசு உள்ளிட்ட இயக்குநர்கள் பலர் திரையுலகிற்குப் புலம்பெயர்ந்து, இதே நாடகக் கூறுகளைத் தக்கவைத்துக் கொண்டனர்.

நடிகர்களின் ஆதிக்கம்

இந்தக் காலகட்டத்தில்தான் சிவாஜி கணேசன், எம்ஜிஆர் ஏறக்குறைய கால் நூற்றாண்டு காலம் புகழின் உச்சியில் இருந்தார்கள். அவர்கள் படங்களில் நட்சத்திரங்களின் கை மேலோங்கி இயக்குநர் பங்களிப்பின் முக்கியத்துவம் குறைந்திருந்தது அலுப்புத் தட்டும்படி ஒரே மாதிரியான பொழுதுபோக்குப் படங்கள் வெளியாகின.

சித்தாந்தம், கலை, அழகியல் பற்றி பேசுவாரில்லை. ரசிகர் மன்றங்கள் பெருகி, ‘நட்சத்திர அரசியல்வாதி' முழுவுரு எடுத்ததும் இக்காலகட்டத்தில்தான். நட்சத்திரங்கள் தேர்தல் மூலம் அரசியல் அதிகாரத்தைப் பெற்றனர்.

புதிய அலை இயக்குநர்கள்

பெரும் நட்சத்திரங்களின் மேலா திக்கம் தளர்ந்தபோதுதான் சில புதிய தலைமுறை படைப்பாளிகள், ஸ்டுடியோ அமைப்பை விட்டுத் தனியாக இயங்கித் தலையெடுக்க முடிந்தது. ஜான் ஆபிரகாமின் ‘அக்ரஹாரத்தில் கழுதை’ (1977) தேசிய விருது பெற்றது. பாபு நந்தன்கோடு (‘தாகம்’, 1972), பாரதி ராஜா (’16 வயதினிலே’, 1977) பாலு மகேந்திரா (‘அழியாத கோலங்கள்’, 1979) மகேந்திரன் (‘உதிரிப்பூக்கள்’, 1979) ஆகிய இயக்குநர்களின் படைப்புகளால் தமிழ் சினிமா பாதை மாறும் என்கிற நம்பிக்கை தோன்றியது.

1975இல் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை என்ற அரசியல் அனுபவத்தைச் சார்ந்த படங்கள் ஏதும் வரவில்லை. பின்னர் கோமல் சுவாமிநாதன் நாடகத்தை அடிப்படையாகக்கொண்டு கே.பாலசந்தர் இயக்கிய ‘தண்ணீர்தண்ணீர்’ (1981), ‘அச்சமில்லை அச்சமில்லை’ (1984) அரசியல் சீரழிவைக் காட்டும் சினிமாவாகத் தோன்றின.

2000இல் வெளியான ‘கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்’ ஜனரஞ்சகமான படத்தில் சினிமா இலக்கணத்தை ராஜிவ் மேனன் நன்கு கையாண்டிருந்தார். தமிழ் சினிமாவில் அத்திப் பூத்தாற்போல் வரும் வரலாற்றுப் படங்களில் ஒன்றான ‘ஹே ராம்’ வெளிவந்ததும் இந்த ஆண்டில்தான்.

இலக்கியமும் சினிமாவும்

20ஆம் நூற்றாண்டின் முதல் நான்கு ஆண்டுகளில் சில நம்பிக்கையூட்டும் நிகழ்வுகள் இருந்தன. தற்காலத் தமிழ் இலக்கியத்திற்கும் திரைக்கும் ஏற்படக்கூடிய ஊடாட்டத்திற்கு நல்ல எடுத்துக்காட்டுகளாகச் சில படங்கள் அமைந்திருந்தன. இதில் முக்கியமாகக் கருதுவது ‘நண்பா நண்பா’ (2002) படம். து.ராமமூர்த்தியின் சிறுகதையின் திரை வடிவத்தை இயக்குநர் ஜெயபாரதி உருவாக்கியிருந்தார்.

அம்ஷன் குமாரின் ‘ஒருத்தி’ (2003) கி.ராஜநாரயணின் ‘கிடை’ சிறுகதையை ஆதாரமாகக் கொண்டது. பிரித்தானிய அரசின் காலத்தைப் பின்னணியாகக் கொண்ட இப்படம் இந்தியன் பனோரமாவிற்குத் தெரிவு செய்யப்பட்டது. அசோகமித்திரனின் ‘விமோசனம்’, தி.ஜானகிராமனின் ‘பாயசம்’ ஆகிய சிறுகதைகளை சினிமாவாக்கி இந்த ஆண்டு வசந்த் சாய் விருது பெற்றிருக்கிறார்.

ஆனால், பெருவாரியான தமிழ்த் திரைப்படங்களில் உள்ளடக்கம் மாறவில்லை. கதைப்போக்கிற்குச் சம்பந்தமில்லாத பாட்டு, குத்தாட்டம், ஆட்டம்பாட்டம், சண்டை, துரத்தல், பெண்ணுடல் காட்டல், பார்வையின்பம் என்று 'நேரங்கொல்லி' படங்களாகவே அமைந்திருக் கின்றன. 2004இல் வெளியான பாலாஜி சக்திவேலின் ‘காதல்’, சேரனின் ‘ஆட்டோகிராப்’ ஆகிய படங்கள் சினிமா மொழியைக் கையாளுவதிலும் கதை சொல்லல் முறையிலும் ஒரு மேம்பாட்டைப் பதிவுசெய்தன.

குறியீடு உத்தியுள்ள படம்

கடந்த பத்து ஆண்டுகளாகச் சில புதிய தலைமுறைப் படைப்பாளிகள், பாரம்பரியத் திரைப்படத் தொழில் அமைப்புகளிலிருந்து விலகிப் பல கவனிக்கத்தக்கப் படங்களை உருவாக்கித் தமிழ் சினிமாவுக்கு வெளியிலிருப்போர் கவனிக்கச் செய்துள்ளனர்.

சாதிக்கொடுமை பற்றியும் விளிம்புநிலை மக்களைப் பற்றியும் பேசிய மாரி செல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’ (2018), எம். மணிகண்டனின் ‘கடைசி விவசாயி’ (2021) போன்ற படங்கள் வர ஆரம்பித்துள்ளன. கதா பாத்திரங்களுக்கேற்ற தோற்றம் கொண்டவர்களை நடிக்கவைத்தனர். இவர்கள் குறியீடு போன்ற உத்தி களையும் பயன்படுத்தி சினிமாவை செறிவுள்ளதாக்க ஆரம்பித்துள்ளனர்.

ஸ்டுடியோ செட்டுகளில் இல்லாமல், நட்சத்திரங்களைச் சாராமல், கிராமப்புறத்தைப் பின்புலமாகக் கொண்டு மண்ணில் வேர் ஊன்றிய படங்களை பா. இரஞ்சித், எம்.மணிகண்டன் உருவாக்கினர். சாதி பிரச்சினையை நேரிடையாகக் கையாளும் ‘ஜெய் பீம்’ (2021) வெளியானது ஒரு முக்கிய நிகழ்வு. தேர்தல் அரசியலைக் கிண்டல் செய்த ‘மண்டேலா’வும் (2021) இம்மாதிரிப் படைப்புகளுக்கு ஒரு நல்ல உதாரணம்’

ஆரோக்கியமான அறிகுறி

இன்று தமிழ்த் திரைப்படங்களின் அழகியலிலும் வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் ஒரு வளர்ச்சி தெரிகிறது. சில இயக்குநர்கள் சினிமா மொழியைக் கையாளுவதிலும் கதை சொல்லல் முறையிலும் ஒரு மேம் பாட்டைப் பதிவுசெய்துள்ளனர், ‘குதிரைவால்’ (2022) ஒரு எடுத்துக் காட்டு.

என்றாலும் சினிமா எனும் மகத்தான ஊடகத்தைப் பற்றிய அக்கறை யின்மையை எல்லாத் தளத்திலும் காணலாம். கல்விப்புலம் சினிமாவைக் கண்டுகொள்ளாததால் காட்சிப் பிம்பங்களை எதிர்கொள்ளும் திறன் மாணவர்களிடையே வளரவில்லை. பல்கலைக்கழகங்களில் இசை ஒரு துறையாக அறியப்படுகிறது. ஆனால், சினிமாவைக் கண்டுகொள்வாரில்லை. விமர்சன இலக்கியம் வளராமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

திரைப்படம் ஒரு வெகுமக்கள் பொழுதுபோக்குத்தானே? ஆகவே இப்பொருளைப் படிக்கத் தேவை யில்லை என்று வாதிடுபவர்களும் உண்டு. சினிமாவிற்கென்று ‘காட்சிப் பிழை’, ‘நிழல்’, ‘படச்சுருள்’ போன்ற தனி இதழ்கள் வர ஆரம்பித்திருப்பதும் ‘காலச்சுவடு’, ‘உயிர்மை’, ‘தீராநதி’ இதழ்களில் திரைப்படங்கள் பற்றித் தீர்க்கமான கட்டுரைகள் வருவதும் ஒரு நல்ல அறிகுறி.

கட்டுரையாளர் - திரைப்பட ஆய்வாளர், தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in