திரை (இசைக்) கடலோடி 6 | கோபுர தீபமாக உயர்த்து நிற்கும் பாடல்!

திரை (இசைக்) கடலோடி 6 | கோபுர தீபமாக உயர்த்து நிற்கும் பாடல்!
Updated on
3 min read

'அம்மா' என்கிற ஒற்றை வார்த்தையின் சிறப்பு இருக்கிறதே… அம்மம்மா! சொல்லில் அடங்காதது.

"ஒவ்வொரு உயிரினத்தையும் தானே அருகில் இருந்து காப்பாற்ற முடியாது என்பதால் தான் இறைவன் தாயைப் படைத்தான்" என்று சொல்வதுண்டு. அப்படிப்பட்ட தாயையும் தாய்மை உணர்வையும் போற்றும் பாடல்கள் திரை இசைக்கடலில் அதிகம் உண்டு.

அன்னையின் அன்பைப் பாடாத கவிஞரே இருக்க முடியாது என்ற அளவிற்கு ஒவ்வொருவரும் பாடல் புனைந்திருக்கின்றனர்.

ஆனால்.. கவியரசர் ஒரே பாடலில் ஒரே வார்த்தையில் அன்னையின் பெருமையை கோபுர தீபமாக உயர்த்தி வைத்து விடுகிறார்.

1968ஆம் ஆண்டு எஸ்.ஆர். புட்டண்ணாவின் இயக்கத்தில் ஜெய்சங்கர், முத்துராமன், விஜயகுமாரி, வாணிஸ்ரீ ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த படம் ‘டீச்சரம்மா’. அதில் இசைப்பேரறிஞர் டி.ஆர். பாப்பாவின் தேர்ந்த இசையில் கவியரசு கண்ணதாசன் எழுதிய ‘அம்மா என்பது தமிழ் வார்த்தை’என்கிற பாடல் தான் அது. இந்தப் பாடலுக்கு ஹரிகாம்போதி ராகத்தைக் கையாண்டு மென்மையாக,வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சங்கதிகளை அளவாகச் சேர்த்து இசைக்கோர்வைகளை அமைத்திருக்கிறார் டி. ஆர். பாப்பா. இசை அரசி பி. சுசீலாவின் தேன்குரல் அவரது இசையோடு ஒன்றும்போது கவியரசரின் வரிகள் செந்தேனாக இனிக்கிறது.

கதைப்படி ஒரு கருணை இல்லத்தின் ஆண்டுவிழாவில் அங்கு ஆசிரியையாகப் பணியாற்றும் கதாநாயகி பாடுவதாக அமைந்த பாடல்.

‘அம்மா’என்கிற ஒற்றைச்சொல் எந்தப் பக்கவாத்தியமும் இல்லாமல் பி. சுசீலாவின் குரலில் ஆலாபனையாக அமைய பாடல் தொடங்குகிறது. பி. சுசீலாவின் குரல் இப்படி தனியாக ஒலிக்கும்போது அதன் அழகும் இனிமையும் தனிதான். ஹரிகாம்போதி அந்தச் சிலநொடிகளில் நம் மனதை அப்படியே கொள்ளைகொண்டு பாடலின் பக்கம் நம் மனதை திருப்பி விடுகிறது. டி.ஆர். பாப்பாவின் பாணியே அதுதான். ராகத்தை மெல்லிசையாக்கும்போது அதன் தனித்தன்மை மாறாமல் ஆரம்பத்திலேயே செவிகளை நிறைத்துவிடுவார் அவர்.

இனி பாடலுக்குள் நுழைவோம்..

‘அம்மா என்பது தமிழ் வார்த்தை - அதுதான்
குழந்தையின் முதல் வார்த்தை’
என்று தொடங்குகிறார் கவியரசர்.

உண்மைதானே.. பிறக்கும் குழந்தை முதல் முதலாக பேச ஆரம்பிக்கும் போது உச்சரிக்கும் முதல் வார்த்தையே அம்மா என்பதுதானே..

மற்ற மொழிகளில் அந்த வார்த்தை இல்லையா? உலகில் எல்லா மொழிகளிலும் அம்மாவை அழைக்கத்தானே செய்கிறார்கள்! அப்படி இருக்கும்போது கவியரசர் தமிழ் வார்த்தை என்று மொழிக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.?

தமிழ் என்றாலே இனிமை. அந்த இனிமையான மொழியில் குழந்தை முதல் முதலாக உச்சரிக்கும் "அம்மா" என்கிற வார்த்தை இனிமைக்கு இனிமை சேர்ப்பதாக அமைந்து விடுகிறதே. அதனால் தான். அந்த "அம்மா" என்கிற வார்த்தை தாயன்பை அனுபவிக்கும் குழந்தைகளுக்கு மட்டும் தானா? இல்லை.. தாயே இல்லாத குழந்தைகளுக்கு கூட ஆண்டவன் வழங்கியிருக்கும் அருட்கொடை அது என்கிறார் கவிஞர்.

‘அம்மா இல்லாத குழந்தைகட்கும் ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை’

அது எப்படி.? தொடரும் சரண வரிகளில் பட்டியலே கொடுக்கிறார் கவிஞர். அம்மா என்கிற ஒற்றைச் சொல்லை ஒவ்வொரு வரியின் இறுதி வார்த்தையாகச் சொற்பொருட்பின்வரு நிலை அணி நயத்துடன் கவிஞர் கொடுத்திருக்கிறார்.

ஒரு கவலை வரும்போது வேதனையின் தாக்கத்தால் தன்னை மறந்து வருவது, கனிவாகத் தேற்றும்போது ஆறுதல் வார்த்தையாக வருவது, தவறை உணர்ந்து மன்னிப்புக்காக நீதி தேவதையை யாசிப்பது என்று அனைத்துக்குமே "அம்மா" தான் என்கிறார் கவியரசர்.

‘கவலையில் வருவது அம்மா அம்மா.
கருணையில் வருவது அம்மா அம்மா
தவறு செய்தாலும் மன்னிப்புக்காக
தர்மத்தை அழைப்பதும் அம்மா அம்மா’

அடுத்து வரும் சரணத்தில் அன்னையாக நாம் பார்க்கும் விஷயங்களை எல்லாம் பட்டியல் போட்டு காட்டுகிறார் கவியரசர்.

நம்மைச் சுமக்கும் பூமி, பாவங்களைக் கழுவும் புண்ணிய நதி, தாய் மொழி, தாய் நாடு என்று அனைத்துமே அன்னையின் வடிவங்கள் தான் ..ஆகவே உங்களுக்கு அம்மா இல்லை என்கிற குறையே வேண்டாம் என்று அம்மா இல்லாத குழந்தைகளுக்கு மறைமுகமாக உணர்த்துகிறார் கவியரசர்.

‘பூமியின் பெயரும் அம்மா அம்மா
புண்ணிய நதியும் அம்மா அம்மா
தாய்மொழி என்றும் தாயகம் என்றும்
தாரணி அழைப்பதும் அம்மா அம்மா’

இறுதியாக வரும் கடைசிச் சரணத்தை ஒரு பெருமித உணர்வுடன் தொடங்குகிறார் அவர்.

‘அம்மா இருந்தால் பால் தருவாள் அவளது அன்பை யார் தருவார்?’ என்று ஆணித்தரமான கேள்வியாக இந்தச் சரணத்தின் முதல் பகுதியை முடிக்கிறார். தாயன்பிற்கு இணை வேறு எதுவுமே இல்லை என்பது உண்மைதானே?

இனிமேல் தான் வருகிறது முக்கியமான இந்தச் சரணத்தின் இறுதி வரி. அன்னையின் முகமே பார்த்தறியாத நிராதரவான குழந்தைகளும் இருக்கிறார்களே .. அவர்களுக்கு அந்த தாயன்பு எப்படி கிடைக்குமாம்? பொதுவாக இறைவன் பலவிதமாக வடிவங்கள் எடுத்து பூமியில் அவதரிக்கிறார் என்று அவதாரங்களை சிறப்பித்துச் சொல்வது உண்டு. ஆனால் தாயன்பையே அறியாத கொடுமையைத் தீர்க்க இறைவனாக வருபவளே அம்மா தான் என்று ஒரே போட்டுப் பாடலை முடிக்கிறார் கவியரசர்.

‘அநாதை என்னும் கொடுமையைத் தீர்க்க
ஆண்டவன் வடிவில் அவள் வருவாள்’

அதாவது கடவுளுக்கும் மேலானவள், கடவுளாகவே வடிவம் எடுப்பவள் அம்மா தானாம்.

இந்த ஈற்றடிதான் பாடலில் சிகரமான சிறப்பே. அதனால் தான் அந்த ஈற்றடியை மட்டும் ஒரு முறைக்கு இரு முறையாக பி. சுசீலா அவர்களைப் பாடவைத்திருக்கிறார் டி.ஆர். பாப்பா.

பாடலின் சாரமான சிறப்பு என்ன? அதை கடைக்கோடி ரசிகனுக்கும் எப்படிக் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும்? என்பதை உணர்ந்து டி.ஆர். பாப்பா அவர்கள் இசை அமைத்திருக்கும் விதம் இன்றைய இசையமைப்பாளர்களுக்கு ஒரு பாடம்.

இப்படி உயர்வு நவிற்சி அணிக்கும் மேலான உயர்வை ஈன்றெடுத்த அன்னைக்கு அளித்து தாயன்பை ஒரு கோபுர தீபமாக உயர்த்தி வைக்கும் இந்தப் பாடல் முத்தை விட ஒரு உயர்ந்த முத்தை திரை இசைக்கடலில் தேடி எடுக்க முடியுமா என்ன?

(தொடர்ந்து முத்தெடுப்போம்)

டி.ஆர்.பாப்பா

பிறந்த இடம் : திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம்.

பிறந்த நாள் : ஜூலை 3 - 1922

தந்தை பெயர் : ராதாகிருஷ்ணன் (வயலின் இசைக்கலைஞர்).

இயற்பெயர் : சிவசங்கரன்.

கல்வித்தகுதி : ஆரம்பப்பாடம் தந்தையிடம். பிறகு வயலின் இசைக்கலைஞரான கும்பகோணம் சிவவடிவேலுப் பிள்ளையிடம் குருகுல வாசம்.

இசை அமைத்த முதல் படம் : ஆத்ம சாந்தி (மலையாளம்)

தமிழில் முதல் படம் : அன்பு.

பிரபலமான பிற படங்கள் : ரம்பையின் காதல், ராஜா ராணி, தாய் மகளுக்கு கட்டிய தாலி, நல்லவன் வாழ்வான், , இரவும் பகலும், பந்தயம், அருணகிரிநாதர், மறுபிறவி, வைரம்.

சிறப்புச் சாதனை : சீர்காழி கோவிந்தராஜன் குரலில் "அபிராமி அந்தாதி" இசை வடிவில் அமைத்தது.

சிறப்பு விருதுகள் : தேவார திவ்வியப்பிரபந்தங்களுக்கு அமைத்த பண் வடிவங்களுக்காக சென்னை தமிழிசைச் சங்கம் வழங்கிய "இசைப் பேரறிஞர்" விருது.

மறைந்த தினம்: 15 அக்டோபர் 2004

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in