

எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும் சாதிப்பதற்குச் சாதியும் பொருளாதாரச் சூழலும் மிகப் பெரிய தடைகளாக இருக்கின்றன. கிரிக்கெட் விளையாட்டில் இவற்றின் தாக்கம் மிக அதிகம்.
எந்தவொரு விளையாட்டிலும் சாதிக்க இவை தகுதிகள் அல்ல. அபாரமான யார்க்கர்களை வீசவும் அற்புதமான கவர் டிரைவ்களை அடிக்கவும் தெரிந்த பலர், கிரிக்கெட் தேர்வில் ஊடுருவியுள்ள அரசியலால் அடுத்த நிலைகளுக்குச் செல்வதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலர், தினக்கூலிகளாகவும் மாதச் சம்பளக்காரர்களாகவும் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையை அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறது ‘ஏகலைவன்’ குறும்படம்.
முன்னேறிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்த சர்ஜுன் (இயேல்), ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வசிக்கும் அன்பு (வேல்பிரசாத்) இருவரும் தலைசிறந்த பந்து வீச்சாளர்கள்.
அன்புவை தனது போட்டியாளனாக ஏற்றுக்கொள்ள முடியாத சர்ஜுனும் அவனுடைய பயிற்சியாளரான ரிஷியும் (ஆனந்த் கார்த்தி) இணைந்து, அன்புவை கிரிக்கெட் விளையாடவே முடியாத நிலைக்குத் தள்ள முயல்கிறார்கள். இறுதியில் அன்புவுக்கு என்ன ஆனது என்பதைப் படத்தைப் பார்த்துத்தெரிந்துகொள்ளலாம்.
சுயாதீன இயக்குநர் அருண் பகத் இயக்கியிருக்கும் இக்குறும்படம், நக்கலைட்ஸ் ஒரிஜினல்ஸ் ஓ.டி.டிதளத்தில் கடந்த ஜூலை 15இல் வெளியானது. விரைவில் நக்கலைட்ஸ் யூடியூப் சேனலிலும் இதைக் காண முடியும்.
மகாபாரத புராணத்தில் இடம்பெற்ற ஏகலைவனின் கதையை கிரிக்கெட் உலகுக்குள் பொருத்திப் பிறப்பின் காரணமாக திறமைசாலிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் நிலை இன்றைக்கும் தொடர்வதைப் படம்பிடித்துக் காண்பித்திருக்கிறார் இயக்குநர். அதோடு சமகாலத்தில் நிகழ்ந்துள்ள மாற்றங்களையும் இணைத்துப் பேசியுள்ளார்.
35 நிமிடத்துக்கு நீளும் இக்குறும்படத்தில் ஹவுசிங் போர்டிலும் ஆடுகளத்திலும் நடக்கும் கிரிக்கெட் காட்சிகள் இடம்பெறுகின்றன. அவை அசலான கிரிக்கெட் போட்டியைக் காணும் உணர்வை அளிக்கின்றன.
குறும்படத்துக்கான பொருட்செலவு உள்ளிட்ட நெருக்கடிகளை வைத்துப் பார்க்கையில், இது வியப்புக்குரிய விஷயம்! இசையரசு எழுதிப் பாடியிருக்கும் பாடல், கதையின் கருப்பொருளைக் கச்சிதமாகக் கடத்திவிடுகிறது. நடிகர்கள் அனைவருமே கதைக்குத் தேவையானதைத் தந்திருக்கிறார்கள்.
பிருதிவியின் பின்னணி இசை கவனிக்கவைக்கிறது. கே.நந்தகுமாரனின் ஒளிப்பதிவு, கிரிக்கெட் போட்டிக் காட்சிகளில் ‘லைவ்’ ஆக காணும் உணர்வைத் தருகிறது.
சென்னையில் நடைபெற்ற மவுண்ட் நெக்ஸ்ட் குறும்பட விழாவில் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் ஆகிய பிரிவுகளில் முதல் பரிசை வென்றுள்ளது. இயக்குநர்கள் வசந்தபாலன், சி.வி.குமார் ஆகிய இருவரும் இந்தப் போட்டியில் நடுவர்களாக இருந்து பரிசுக்குரிய படங்களைத் தேர்வுசெய்துள்ளனர்.
இதுதவிர ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகரில் 2023 பிப்ரவரியில் நடத்தப்பட இருக்கும் ‘BCN’ விளையாட்டுத் திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவுக்கும் தேர்வாகியுள்ளது ‘ஏகலைவன்’.