

கஜல் என்ற கவி வடிவம், அதன் பாடு பொருள், ஒரே மீட்டரில் செதுக்கப்பட்ட எளிய வரிகள், மெல்லிய இசை, அதைப் பாடுபவரின் குரல் இனிமை ஆகிய நான்கு அம்சங்களும் சமமாக இணைந்த சங்கமம். இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பே, அரேபிய நாட்டில் வழக்கத்தில் இருந்த இந்தப் பாடல் வடிவின் மையப் பொருள், காதலர்களின் அளவில்லாத (நிறைவேறாத) காதல், ஆற்றாமை சார்ந்தே அமைந்திருக்கும்.
பாரசிக மொழியில் தொடக்கத்தில் எழுதப்பட்ட கஜல்கள் பின்னர் உருது மொழியில் வளம் பெற்று தற்போது இந்தியத் துணைக் கண்டம் முழுவதற்கும் பொதுவான பெரும் ரசனைகளில் ஒன்றாக விளங்குகிறது.
இந்தித் திரைப் பாடல்களில் வெகுவாக இடம்பெற்றுள்ள இந்த இசை வடிவம், தமிழ்த் திரையிசையில் இதுவரை சரியான முறையில் அறிமுகம் ஆகவில்லை என்பது இங்கு குறிப்பிடத் தக்கது (இதன் மாற்று வடிவான ‘கவ்வாலி’யை, ‘பாரடி பெண்ணே கொஞ்சம்’ என்ற பாடல் மூலம் இசையமைப்பாளர் வேதா தமிழ்த் திரைக்கு அறிமுகம் செய்தார்).
‘கிங் ஆஃப் கஜல்’ எனப் புகழப்பட்ட தலத் முகமது, கஜல் பாடல்களின் ஜீவனாகத் திகழும் தனித்தன்மையுடைய மிருதுவான குரலை இயல்பாகவே பெற்றவராக விளங்கினார். ‘Silky voice‘ என்று மக்கள் போற்றிய அந்த பட்டுக் குரலில் பொருள் செறிந்த எளிமையான கஜல் வரிகளை அவர் பாடியபொழுது ரசிகர்கள் மெய் மறந்தனர்.
‘தேக் கபீரா ரோயா’ (பார் கபீரா அழுவதை) என்ற திரைப்படத்துக்காக ராஜேந்திர கிஷன் எழுதி, மன்மோகன் இசை அமைத்த ஒரு கஜல் மேற்கூறிய பரவசத்தை நமக்கு இன்றும் அளிக்கிறது. சிறிய சொற்கள் மூலம் ஆழமான உணர்வைக் காட்டும் அப்பாடலை, அசோக்குமார், கிஷோர் குமார் ஆகியோரின் சகோதரர் அமீத்குமார் பாடியிருக்கிறார். மராட்டிய மாநில சைக்கிள் வீராங்கனையாக இருந்து, பிறகு திரையில் கதாநாயகியாக வலம் வந்து, பின்னாளில் கொடுமைக்காரி மாமியாராகத் திரையில் புகழ் பெற்ற சுபா கோட்டேயை நோக்கிப் பாடப்படும் பாடல் இது.
“ஹம்ஸே நா ஆயா ந கயா,தும்ஸே ந புலாயா ந கயா, ஃபாஸ்லா பியார் மே மிட்டாயா ந கயா” என்று தொடங்கும் அந்த கஜல் பாடலின் பொருள்:
என்னால் எட்ட இயலவில்லை
உன்னால் மறக்க முடியவில்லை,
(நம்) காதலுக்கு நடுவில் இருந்த இடைவெளியை
உன்னைச் சந்தித்த அந்தப் பொழுது
நினைவில் இருக்கிறது
ஒரு சமிக்ஞையில் இரண்டு கைகள்
நீண்டு பேச்சைத் தொடங்கின
பார்த்துக்கொண்டே இருக்கும்போது
பகல் மறைந்து இரவு நுழைந்த
அந்த நிகழ்வின் பொழுதை
இன்றுவரை என்னால் மறக்க முடியவில்லை
யாருக்குத் தெரியும்
நாம் சந்தித்ததே பிரிவதற்காகத்தான் என்று
நம் விதி ஏற்பட்டதே கெடுவதற்காகவே என்று
காதல் செடியின் கிளை நடப்பட்டதே
வாடுவதற்காகவே என்று
நினைவுகள் (மறையாமல்) நிலைத்துவிடுகின்றன
காலம் கடந்துவிடுகிறது
பூக்கள் பூத்து, பிறகு கருகிவிடுகின்றன
இங்கு எல்லாமே சென்றுவிடுகின்றன
நெஞ்சின் வலி மட்டும் நின்றுவிடுகிறது
நீ ஏற்படுத்திய காதல் கறையைப் போக்க இயலாமல் நான்...
இப்படிப்பட்ட பொருள் தரும் இப்பாடல் மட்டுமின்றி மன்னா டே பாடிய ‘கோன் ஆயா மேரே மன் கே துவாரே’என்ற அமரத்துவப் பாடல், ‘எனது கைகள் மீட்டும்போது வீணை அழுகின்றது’ என்ற தமிழ்ப் பாடலை நினைவுபடுத்தும், ‘மேரி பீனா தும் பி ரோயே’ (என் வீணை நீ இல்லாமல் அழுகின்றது) என்ற லதாவின் பாடலும் இப்படத்தின் சிறப்பம்சமாகத் திகழ்கிறது.