திரை (இசைக்) கடலோடி 5 | ஒரு ஆண் குயிலின் இதய வாழ்த்து!

திரை (இசைக்) கடலோடி 5 | ஒரு ஆண் குயிலின் இதய வாழ்த்து!
Updated on
4 min read

அவர்கள் இருவரும் ஒருவரின் எண்ணம் மற்றவரின் செயலாக ஒன்றி வாழ நினைத்த காதலர்கள்.

ஆனால்.. நினைப்பதெல்லாம் நடந்து விடுகிறதா என்ன?

விதி அவர்களைப் பிரித்து வைத்து வேடிக்கை பார்த்தது.

சந்தர்ப்ப வசத்தால் ஒரு கொலை செய்துவிட்டு சிறைக்குச் சென்று மீண்டவனை ஊரும் உறவும், பெற்றவர்களும் ஒதுக்கினாலும் கூட …

அவள் மட்டும் தன்னை மறக்காமல் தனக்காகக் காத்திருப்பாள் என்ற நம்பிக்கையோடு அவளைத் தேடி அலைந்தவன் அவளைச் சந்தித்தான்.

அவனுக்காக காத்திருப்பவளாக அல்ல. இன்னொருவனின் மனைவியாக.

அப்படியே நொறுங்கிப்போனான் அவன்.

"அவள் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும்" என்று விலக நினைத்தவனை விதி அவள் கணவனின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள வைத்தது.

நேருக்கு நேராக சந்தித்தபோது இருவரின் மனதிலும் கடந்த கால நினைவுகள் அலை மோத ஆரம்பித்தன.

அந்தச் சூழலில் அவர்களை அவன் வாழ்த்திப்பாடவேண்டும்.

அந்தப் பாடலில் அவனது கண்ணியமும் உயர்வான எண்ணமும் வெளிப்படவேண்டும். அதே நேரம் அவன் மனதின் ஏக்கமும் பிரதிபலிக்க வேண்டும்.

இப்படி ஒரு காட்சி அமைப்பிற்கு சமீபத்தில் மறைந்த கவிஞர் குமாரதேவன் அற்புதமான ஒரு பாடலைக் கொடுத்திருக்கிறார்.

காதல் கைகூடாமல் போன ஒரு ஆண்மகனின் கண்ணியம் எப்படி வெளிப்படவேண்டும் என்பதற்கு இந்தப் பாடலே சாட்சி.

'கல்யாண வசந்தம்' ராகத்தில் இந்த அருமையான பாடலுக்கு இசை அமைத்தவர் தட்சிணாமூர்த்தி ஸ்வாமி என்று அனைவராலும் பெருமதிப்போடும் மரியாதையோடும் கொண்டாடப்பட்ட வி. தட்சிணாமூர்த்தி.

1976ஆம் வருடம் எஸ்.பி. முத்துராமன் யக்கத்தில் வெளிவந்த 'ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' என்ற படத்தில் கானகந்தர்வன் கே.ஜே. யேசுதாஸின்மென்மையான மனதை வருடும் இனிய குரலில் இடம் பெற்ற இந்தப் பாடல் இந்த மாமேதையின் இசை மகுடத்தில் ஒரு வைரக்கல்லாக மிளிரும் பாடல்.

சுவாமியுடன் மேடையில் யேசுதாஸ்<br />​​​​​
சுவாமியுடன் மேடையில் யேசுதாஸ்
​​​​​

இனி பாடலுக்குள் செல்வோம்:

அவன் வாழ்த்தத் தொடங்குகிறான்:

அவளது நல்ல மனம் அவனுக்கு ஏற்கெனவே தெரிந்த ஒன்று. அவள் கணவனும் உயர்குணங்களின் உறைவிடம். இருமனங்களும் ஒன்றி விட்டபிறகு, அதில் பிரிவினை செய்ய விரும்பாமல் அவன் பாடலை இப்படி ஆரம்பிக்கிறான்.

‘நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க.
தேன்தமிழ் போல் காவிரி போல்
சிறந்து என்றும் வாழ்க..’

காதலிக்கும் எல்லாக் காதலர்களுக்கும் அவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணையவேண்டும் என்ற லட்சியம் இருக்கத்தான் செய்யும்.

ஆனால் அந்த லட்சியம் எல்லோருக்கும் ஈடேறுவது கிடையாது. காலையில் மலர்ந்த மலர் மாலையில் வாடி சருகாக உதிர்வதைப்போல வாடிவிடும். இறைவன் சொர்க்கத்தில் நிச்சயித்தபடிதான் அவரவர்களுக்கு மணவாழ்க்கை அமையும். அப்படி அமைய தனக்குக் கொடுத்துவைக்கவில்லையே என்ற ஏக்கம் அவனை அந்த நேரத்தில் தாக்கினாலும் சமாளித்துக்கொண்டு விடுகிறான்.

‘நீங்கள் இருவரும் புதுப் பொருத்தம் பொருந்திவிட்ட ஒரு இணை. பொதுவாக பத்துப்பொருத்தம் வேண்டும் என்பார்கள். அப்படி பத்துப்பொருத்தம் பார்த்து அமையும் இணைகள் கூட உங்களைப்போல மனமொத்து வாழ்வார்களா என்பது சந்தேகமே. ஆகவே நீங்க அரிதாக புதிதாக ஒரு பொருத்தம் அமைந்த தம்பதிகள். நான் மட்டும் ஒரு புலவனாக இருந்திருந்தால் உங்களை பற்றி கவிதைகள் ஒன்றல்ல: ஒரு கோடி பாடி இருப்பேன்’என்கிறான் அவன். இப்படிச் சொல்வதன் மூலம் அவனைப் பற்றி அவள் மனதில் இருந்த அவநம்பிக்கையையும், சந்தேகத்தையும் கூட போக்கி விடுகிறான் அவன்.

‘பூவுலகின் இலட்சியங்கள் பூப்போலே வாடும்
தெய்வ சொர்க்க நிச்சயம் தான் திருமணமாய்க் கூடும்
பொருத்தம் என்றால் புதுப்பொருத்தம் பொருந்தி விட்ட ஜோடி - நான்
புலவன் என்றால் பாடிடுவேன் கவிதை ஒரு கோடி.’

ஒரு கணவனின் மேன்மை என்பது அவனுக்கு அமையும் மனைவியின் குணங்களையே சார்ந்திருக்கிறது . ஆகவே அடுத்த சரணத்தில் அவளது சிறப்புகளை அடுக்குகிறான் அவன்.

தன்மையாக பேசுவதிலும் மென்மையான குணத்திலும் அவள் மனமானது தாமரை மலரைப் போன்றது. பெண்குலத்திற்கு இருக்கக்கூடிய நற்குணங்கள் எல்லாவற்றையும் இவள் சிரமப்பட்டு தேடி அடையவில்லை. அவை எல்லாமே இவளைத் தேடி வந்து அடைக்கலமாகி விட்டன. உனது வீட்டை ஒரு கோவிலாக அலங்கரிக்க வந்தவள் என்று சொல்லிக்கொண்டே வந்தவன்.. சரணத்தின் கடைசி வரியில் நச்சென்று வைக்கிறான் பாருங்கள் ஒரு அழுத்தம். அங்கு நிற்கிறார் கவிஞர் குமாரதேவன். நான் நினைத்தால் உங்கள் இல்லறத்தில் புயல் வீச வைக்கலாம். ஆனால்.. இவளுடன் வாழ நீ கொடுத்து வைத்தவன் அல்லவா.. அந்தக் கொடுப்பினையை நான் கெடுக்க விரும்பவில்லை. ஆகவே இவளுடன் ஒன்றி வாழும் நிலையை உனக்கே கொடுத்து நான் வாழ்த்துகிறேன் என்று கூறுகிறான் அந்த முன்னாள் காதலன்.

‘தன்மையிலும் மென்மையிலும்
தாமரை போல் நெஞ்சம்
தாய்க்குலத்தின் மேன்மை எல்லாம்
தலைவியிடம் தஞ்சம்
ஆலயமாய் வீடு தனை
அலங்கரிக்க வந்தாள் - நீ
வாழும் நிலை உனக்களித்து
வாழ்த்துகிறேன் நானே’

இறுதிச் சரணத்திலும் அவன் அடைந்த சிறப்பினையே கூறுகிறான். இப்படி பாடல் முழுதுமே கணவனான அவனையே முன் நிறுத்தி அவன் மனைவியின் பெருமைகளையே அந்தக் காதலன் கூறுகிறான்.

பிறந்த நாள் விழா அவனுக்குத்தானே. அப்படி இருக்க அந்தக் கணவனைத்தானே வாழ்த்த வேண்டும். அவனை வேறு எப்படி வாழ்த்த முடியும்?.

அவனைப்பற்றி இவனுக்கு தெரிந்ததெல்லாம் தன் மனம் நிறைந்தவளின் கணவன் என்பது மட்டும்தானே!. ஆகவே அவளைப் பற்றிச் சொல்லித்தானே அவனை வாழ்த்த முடியும்?

கதையின் இந்த நுணுக்கமான முடிச்சை வெகு அழகாகப் பாடல் முழுவதிலும் கையாண்டிருக்கிறார் கவிஞர் குமார தேவன்.

பொதுவாக மணவாழ்க்கை அமைய ஒரு மனைவி ஒருவனுக்கு அமைய வேண்டும். அவளும் நல்ல குலமகளாய் அமைய கொடுத்து வைத்திருக்க வேண்டும். அப்படி அமைபவளால் அவனுக்கு கிடைக்கும் அருமைகளும் பெருமைகளும் தான் இல்லறத்திற்கு இனிமை சேர்க்கும். இவை அனைத்தையுமே இவளை மனைவியாக அடைந்ததால் பெற்றுவிட்ட நீ ஆனந்தமாய் வாழவேண்டும் என்று வாழ்த்திப் பாடலை முடிக்கிறான் அந்த முன்னாள் காதலன்.

‘மணவாழ்க்கை அமைவதற்கோ மனைவி வாய்க்க வேண்டும்.
குலமகளாய்க் கிடைப்பதற்கோ கொடுத்து வைக்க வேண்டும்.
அருமைகளும் பெருமைகளும் நிறைந்தது தான் இன்பம் - நீ
அத்தனையும் பெற்றுவிட்டாய் ஆனந்தமாய் வாழ்க’

வாழ்த்துப்பாடலாக இருந்தாலும்ஒரு கண்ணியமான காதலனின் மனம் முழுவதும் இழையோடும் ஏக்கத்தை பாடலின் ஆரம்பம் முதல் இறுதிவரை ஒவ்வொரு அடியிலும் தான் அமைத்திருக்கும் இசையின் மூலம் நம்மை உணர வைத்திருக்கிறார் தட்சிணாமூர்த்தி. அவருக்கு சரியான பக்கபலமாக ஜேசுதாஸும் தனது கந்தர்வக் குரலால் நம் மனதை உருக வைக்கிறார்.

ஒரு ஆண்குயிலின் சோகத்தை உள்ளடக்கிய இந்தக் கீதம் திரை இசைக் கடலில் கிடைத்தற்கரிய ஒரு அபூர்வமான முத்து.

(தொடர்ந்து முத்தெடுப்போம்)

வி. தட்சிணாமூர்த்தி

data-title="தட்சிணாமூர்த்தி சுவாமியும் இளையராஜவும்">

பிறந்த தினம் : டிசம்பர் 9 - 1919

பெற்றோர் : வெங்கடேஸ்வர அய்யர் - பார்வதி அம்மாள்

பிறந்த இடம் : முல்லைக்கல், ஆலப்புழை

கல்வித் தகுதி : பள்ளி இறுதிப்படிப்பு.

இசைப் பயிற்சி : முதல் குரு தாயார். பிறகு திருவனந்தபுரம் வெங்கடாச்சல போற்றி.
13ஆம் வயதில் அம்பலப்புழை கிருஷ்ணன் ஆலயத்தில் முதல் கச்சேரி.

இசை அமைத்த முதல் படம் : நல்ல தங்காள் (1948 ) மலையாளம் மற்றும் தமிழ்.

சிறப்பு : ஒரே குடும்பத்தில் நான்கு தலை முறையைச் சேர்ந்த பாடகர்கள் இவர் இசையில் பாடி இருக்கிறார்கள். அகஸ்டின் ஜோசப் - அவரது மகன் கே.ஜே. ஜேசுதாஸ், விஜய் ஜேசுதாஸ் (இடைநாழியில் ஒரு கலோச்சா), அவரது மகள் அமேயா (ச்யாமா ராகம்)

இசை அரசி பி. சுசீலாவை "சீதா" என்ற படத்தின் மூலம் மலையாளத் திரை உலகிற்கு அறிமுகம் செய்தவர்.

இசைஞானி இளையராஜா, அவரது மகள் பவதாரிணி - இருவருக்கும் கர்நாடக சங்கீதம் கற்றுத் தந்த குரு.

தமிழில் பிரபலமான படங்கள் : ஜீவநாடி, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, நந்தா என் நிலா.

விருதுகள் : கேரள அரசாங்கத்தின் இசைக்கான மிக உயரிய விருதான ஜெ.சி. டேனியல் விருது உள்ளிட்ட பல சிறப்பு விருதுகள்.

மறைந்த தினம் : ஆகஸ்ட் 2 , 2013

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in