Published : 29 Jul 2022 10:30 AM
Last Updated : 29 Jul 2022 10:30 AM
மதுவையும் அதைச் சுற்றி இயங்கும் உலகத்தையும் நகைச்சுவையுடன் பகடி செய்த ‘மதுபானக் கடை’ என்கிற சுயாதீனத் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கமலக்கண்ணன்.
விமர்சன ரீதியாகக் கொண்டாடப்பட்ட அந்தப் படத்துக்குப் பின் கமலக்கண்ணன் இயக்கியிருக்கும் படம் ‘வட்டம்’. தரமான கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே தயாரிப்பதில் ஆர்வம் காட்டிவரும் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.
சிபிராஜ், ஆண்ட்ரியா இணைந்து நடித்துள்ள இப்படம் இன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. படம் குறித்து எஸ்.ஆர்.பிரபு கூறும்போது “ஆண் - பெண் இடையிலான ஒரு முக்கிய பிரச்சினையை படம் பேசியிருக்கிறது. படம் பார்க்கும் அனைவரும் மற்றவர்களுக்கு இதைப் பார்க்கும்படி சிபாரிசு செய்வார்கள்” என்று கூறியிருக்கிறார்
பேயாக மாறிய இயக்குநர்!
‘யாமிருக்க பயமே' எனும் ஹாரர் காமெடிப் படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் டீகே. அவருடைய இயக்கத்தில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ‘காட்டேரி’. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜாவும் அபி அண்ட் அபி பிக்சர்ஸ் அபினேஷ் இளங்கோவனும் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் நாயகி வரலட்சுமி சரத்குமார். நாயகியை மையமாகக் கொண்ட இதில் வைபவ் நாயகனாக நடித்துள்ளார்.
“இந்தப் படத்துக்காக இயக்குநர் டீகே பேயாக உழைத்திருக்கிறார். ஹாரர் காமெடி என்றால் எப்படியிருக்க வேண்டும் என்பதை இந்தியத் திரையுலகம் இவரிடம் கற்றுக்கொள்ளலாம். முழுநீள நகைச்சுவைப் படத்தில் நடிக்க வேண்டும் என்கிற என் நீண்ட நாள் கனவு நிறைவேறிவிட்டது” என படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டார் வரலட்சுமி.
வேறொரு சந்தானம்!
‘இனிமே இப்படித்தான்’ என்று சொல்லிவிட்டு சந்தானம் நாயகனாக நடிக்கத் தொடங்கி 10 ஆண்டுகள் பறந்தோடிவிட்டன. இந்த பத்து ஆண்டுகளில் 15 படங்களில் நடித்துவிட்ட அவருக்கு ‘குலுகுலு’ படத்தில் முற்றிலும் ஒரு புதிய ‘அவதார்’ கொடுத்திருக்கிறாராம் ‘மேயாத மான் ’படப்புகழ் ரத்னகுமார். இன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தில் ‘எல்லா வேலைகளையும் செய்து பார்த்த ஒருவனை, தாதாவாக மாற்றும் ஒரு சம்பவம் நடந்தால் அதை அவன் எப்படிக் கையாள்வான்’ என்பதுதான் கதை’ எனக் கூறியிருக்கிறார் இயக்குநர்.
இந்தப் படத்திலும் அதுல்யா சந்த்ரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி என இரண்டு புதிய கதாநாயகிகள் சந்தானத்துக்கு. சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் ராஜ் நாராயணன் தயாரித்துள்ள இந்தப் படத்தை தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார் உதயநிதி ஸ்டாலின்.
‘மாயத்திரை’யில் 26
வழக்கமான பேய் படங்களின் படையெடுப்பு முடிந்துவிட்டது. தற்போது, நகைச்சுவை, சென்டிமென்ட் பேய்கள் ரசிகர்களைத் தேடத் திரையரங்குகளுக்கு வரத் தொடங்கிவிட்டன. அந்த வரிசையில், நாகர்கோயில் அருகில், திரையரங்கம் தீப்பிடித்து எரிந்து 23 ரசிகர்கள் இறந்துபோன சம்பவத்தை ஒரு பொறியாக எடுத்துகொண்டு, ‘மாயத்திரை’ படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார் டி.சம்பத்குமார்.
அரசு திரைப்படக் கல்லூரியில் இயக்கம் பயின்றுள்ள இவர், தற்போது, தனியார் கல்லூரியில் காட்சித் தகவலியல் பேராசிரியராகப் பணிபுரிந்துகொண்டே இப்படத்தை இயக்கியிருக்கிறார். கூட்டம் அதிகம் வராத டூரிங் திரையரங்கம் ஒன்றுக்கு காதலிக்க வரும் நாயகனும் நாயகியும் அங்கு வசிக்கும் 26 பேய்களிடம் மாட்டிக்கொண்டு மீண்டு வருவதுதான் கதை.
அசோக்குமார் நாயகனாகவும் சாந்தினி, ஷீலா ராஜ்குமார் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். கோலிவுட்டின் சீனியர் காஸ்டியூமரான சாய்பாபு தயாரித்துள்ள படம் இது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT