

இவருடைய படம் என்றாலே இளைஞர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கும். அதற்குக் காரணம் கதையுடன் இணைந்துவரும் நகைச்சுவை. அவர் இயக்குநர் எம். ராஜேஷ். வரவிருக்கும் தீபாவளி வெளியீடாக ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தை உருவாக்கியிருக்கிறார். அவருடன் பேசியதிலிருந்து...
இம்முறை மது அருந்தும் காட்சிகள் இல்லாமல் படமெடுத்து இருக்கிறீர்களாமே... காமெடி காட்சிகள் எழுதுவது கடினமாக இருந்ததா?
நிறைய குடித்துவிட்டால் போதையில் பேசுவார்கள், அதில் ஏதாவது காமெடி வைக்கலாம் என்றுதான் மது அருந்தும் காட்சிகள் வைத்தேன். உண்மையில், டாஸ்மாக்கை விளம்பரப்படுத்த வேண்டும் என்பது என் எண்ணமில்லை.
இனி என் படங்களில் குடிக்காட்சிகள் இருக்காது. ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தின் கதையில் மது அருந்தும் காட்சிகள் தேவைப்படவில்லை. நானும் புகுத்தவில்லை. இந்தக் காட்சிகள் இல்லாமல் காமெடி காட்சிகள் எழுதியது எளிதாகத்தான் இருந்தது.
இக்கதையில் ஒரு பயணம் இருக்கிறது. அந்தப் பயணத்தில் வரும் சிறு சிறு விஷயங்கள் மூலமாக காமெடியை அமைத்திருக்கிறேன். வழக்கமான காமெடிக் காட்சிகளாக இல்லாமல், வேறு ஒரு களத்தில் இப்படத்தின் காமெடி நன்றாக அமைந்திருக்கிறது.
சந்தானம் இல்லாமல் படம் இயக்கிய அனுபவம்?
கஷ்டமாகத்தான் இருந்தது. காமெடி ஏரியாவை அவரிடம் கொடுத்துவிடுவேன். அவருடன் இருக்கும் அணியினர் காமெடிக்குத் தகுந்தாற்போல் வசனங்கள் எழுதிக் கொடுப்பார்கள். அதில் நன்றாக இருப்பதை எடுத்து உபயோகப்படுத்திக்கொள்வேன். முதல் படத்தில் எனக்கு சந்தானம் யாரென்றே தெரியாமல் அவருடன் இணைந்து பணியாற்றினேன்.
சந்தானம் இல்லாத இடத்தை நிறைய நடிகர்கள் இணைந்து ஈடுகட்டியிருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் ஆர்.ஜே.பாலாஜி. ‘சிவா மனசுல சக்தி’ படத்தில் சந்தானத்திடம் ஒரு யதார்த்தம் இருந்தது. அதே போல இதில் ஆர்.ஜே.பாலாஜியின் கதாபாத்திரமும் பேசப்படும்.
‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தின் கதை என்ன?
சென்னையிலிருந்து பாண்டிச்சேரி வழியாக மதுரை போவது போல ஒரு பயணம். இடையே ஒரு நண்பனை ஏற்றிக்கொண்டு போவதுபோலத் திரைக்கதை அமைத்திருக்கிறேன். என்னுடைய முந்தைய படங்கள் போல இதுவும் ஒரு ஜாலியான படம்தான்.
ஒரே வித்தியாசம் இதில் பயணம் இருக்கும். இப்படத்தின் மூலம் ஜி.வி.பிரகாஷ் அடுத்த கட்டத்துக்கு நகர்வார் என்று எதிர்பார்க்கிறேன். விஸ்காம் முடித்துவிட்டு விளம்பரம் படம் இயக்குவதற்கு முயற்சி செய்யும் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கிறார்.
உங்களின் ‘அழகுராஜா’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ ஆகிய படங்கள் வரவேற்புப் பெறவில்லையே...
‘அழகுராஜா’ தவறானதுக்கு நான் தான் காரணம். ஒவ்வொரு நாயகனும் ஒவ்வொரு இமேஜ் இருக்கிறது. அவருடைய படம் இப்படித்தான் இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள். கார்த்தியின் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதனை நான் அப்படத்தில் கொடுக்கவில்லை.
‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தில் என் மீது எந்தத் தப்பும் கிடையாது. அந்தப் படம் தனியாக வெளியாகியிருந்தால் இன்னும் அதிகமாக வசூல் செய்திருக்கும். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘பாஸ் (எ) பாஸ்கரன்’ ஆகிய படங்கள் தனியாக வெளிவந்தன. இப்போது அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் 4 படங்கள் வெளியாகின்றன. அதனால் வசூல் பாதிக்கிறது.
ராஜேஷிடமிருந்து சீரியஸான படங்களை எதிர்பார்க்கவே முடியாதா?
என்னை வைத்து சீரியஸ் படங்கள் எடுக்கத் தயாரிப்பாளர் தயார் என்றால் என்னிடம் கதை இருக்கிறது. என்னிடம் யாருமே சீரியஸ் படங்கள் குறித்துப் பேசவே தயாராக இல்லை. சீரியஸ் கதை சொன்னால் “சூப்பர் சார்... நம்ம கதையைச் சொல்லுங்கள்” என்று தான் கேட்கிறார்கள். அதற்கு என்னுடைய காமெடி படங்களின் வெற்றிதான் காரணம். அனைவருமே ராஜேஷ் படங்கள் என்றாலே இப்படித்தான் இருக்கும் என்று முடிவு செய்துவிட்டார்கள்.
எஸ்.ஏ.சந்திரசேகரிடமிருந்து வந்தவர் நீங்கள். எப்போது விஜய்யை இயக்கப் போகிறீர்கள்?
இடையே அவரைச் சந்தித்தேன். ஒரு படம் பண்ணலாம் என்று பேசினோம். எனக்கு ஏற்றவாறு ஒரு நல்ல கதை அமைந்தால் சொல்லுங்கள் பண்ணலாம் என்று சொல்லியிருக்கிறார். அவருக்கான கதையாக ஒரு எண்ணம் இருக்கிறது. சரியாக அமையும் பட்சத்தில் கண்டிப்பாக பண்ணுவேன்.
- ராஜேஷ்
ஒரு இயக்குநராக ‘யு’ சான்றிதழில் படம் இயக்க வேண்டும் என்று நிலவும் சூழல் உங்களுடைய கதைக்களத்தைப் பாதித்திருக்கிறதா?
கண்டிப்பாகப் பாதித்திருக்கிறது. ‘யு’ சான்றிதழ் கிடைத்தால் வரிச் சலுகை கிடைக்கிறது. அதனால் தயாரிப்பாளருக்குப் பெரிய தொகை சேமிப்பாகிறது. சிறு முதலீட்டுப் படங்களுக்கு வரிச் சலுகை என்பது மிக முக்கியமாகத் தேவைப்படுகிறது. படத்தின் கதை எழுதும் போதே ‘யு’ வாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தொடங்குகிறேன்.
5 படங்கள் இயக்கிவிட்டதால் எதெல்லாம் காட்சியாக வைத்தால் ‘யு’ கிடைக்கும் என்பது தெரிந்துவிட்டது. கதை எழுதும்போதே தோன்றுவது கண்டிப்பாகக் கதையைப் பாதிக்கும்.
நான் தயாரிப்பாளருக்குப் பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என நினைக்கும்போது வேறு வழியில்லை. சில விஷயங்களைச் சொல்ல வேண்டும் என நினைப்பேன், சொன்னால் ‘யு’ கிடைக்காது என்பதால் கதையிலிருந்து தூக்கிவிடுவேன்.