

'வீரபாண்டிய கட்டபொம்மன்' - நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ஆசியா கண்டத்திலேயே தலை சிறந்த நடிகர் என்ற பெருமையை கெய்ரோவில் நடைபெற்ற ஆசிய - ஆப்பிரிக்க திரைப்படவிழாவில் பெற்றுத் தந்த படம். அது மட்டுமல்ல; அந்தப் படத்துக்கு இசையமைத்த இசை அமைப்பாளருக்கு ‘ஆசியா கண்டத்திலேயே சிறந்த இசை அமைப்பாளர்’ என்கிற பெருமையைப் பெற்றுத்தந்த படமும் கூட!
தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற இசை மேதை ‘இசைச் சக்கரவர்த்தி’ஜி. ராமநாதன் தான் அந்த ஒப்பற்ற பெருமையைப் பெற்ற கலைஞர். படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் பி.ஆர். பந்துலுவின் ஆஸ்தானப் பாடலாசிரியராக இருந்த கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியம். அனைத்து அம்சங்களிலும் ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கும் இந்தப் படத்தில் ஜி. ராமநாதனின் இசையின் திறத்தை எப்படி அளவிடுவது? நினைத்துப் பார்க்கவே பிரமிக்க வைக்கிறது. அதிலும் இன்றளவும் கேட்பவர் மனதில் இனிமையையும் உற்சாகத்தையும் பரவ விடும் காதல் பாடல் - கவிஞர் கு.மா. பாவின் பெயர் சொல்லும் ‘இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே’பாடல் தான். இந்தப் பாடலுக்கு ஒரு தனிச் சிறப்பும் உண்டு.
இதுதான் பின்னணிப்பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களும் இசை அரசி பி. சுசீலாவும் இணைந்து பாடிய முதல் பாடல். ‘பீம்ப்ளாஸ்' ராகத்தில் வெண்ணிலாவின் குளிர்ச்சியோடு தென்றலின் மென்மையும் பொங்க, இருவர் குரலிலும் வெளிப்படும் இனிமை காலத்தை வென்று இன்றளவும் நிலைத்திருக்கிறதே! ‘உயர்வு நவிற்சி அணி’வகையை வெகு அற்புதமாகக் கையாண்டு பாடலை வடிவமைத்திருக்கிறார் கவிஞர் கு.மா.பா.
இரவின் மடியில், நிலவின் நிழலில் சந்திக்கும் காதலர்கள் இப்படித்தான் பாடுவார்களோ என்று வியக்க வைக்கிறது பாடல்.
‘இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே’ முதல் வரியிலேயே வார்த்தை நயத்தால் விளையாடி இருக்கிறார் கவிஞர். பொதுவாக தென்றல் காற்றைத்தான் வீசுகிறது என்று சொல்வதுண்டு. ஆனால் கவிஞரோ ‘நிலா வீசுகிறது’ என்று சொல்கிறார். நிறைந்திருக்கும் மனதில் பொங்கி வரும் இன்பம் அவளை அப்படி மரபு மயக்கத்தில் ஆழ்த்தி விடுகிறது. அந்த வெண்ணிலா அவளது அழகைக் கண்டதும் வாயடைத்துப்போய் பேச வார்த்தைகள் இல்லாமல் மௌனத்தையே மொழியாகக் கொள்கிறதாம்.
‘என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே..’
அதே நேரம் அவளது மனம் கவர்ந்தவனுக்கோ மனதில் ஒரு ஏக்கம்.. வாட்டம்.. தளர்வு..
ஏனாம்?
அவனே சொல்கிறான்:
‘தென்றல் உன்னைச் சொந்தமாய் தீண்டுதே - இதை
எண்ணி எண்ணி.. எந்தன் நெஞ்சம் ஏங்குதே..’
குளிர்ச்சியாக வீசும் தென்றல் காற்று மிகவும் சுதந்திரமாக எந்தத் தடையும் இல்லாமல் அவள் உடலை சர்வ சாதாரணமாக தீண்டுகிறதே. ஊரறிய அவளை மணந்த பிறகுதானே அவனால் அவள் உடலைத் தீண்ட முடியும். தனிமையில் சந்தித்தாலும் மரபு மீறாத ஆண்மகனின் கம்பீரம் எத்தனை நளினமாக இந்த வார்த்தைகளில் வெளிப்படுகிறது! அந்த ஏக்கத்தைப் போக்க வேண்டாமா? ஆகவே அவள் அவனைத் தேற்றும் விதமாக இப்படிக் கூறுகிறாள். ‘என் கண்கள் என்றும் உன்னையே நாடுகிறது. என் உயிரே என்றும் உனது சொந்தம் என்று ஆனபிறகு வீண் கலக்கம் ஏன்? அன்பாகப் பேசிப்பழகும் நாம் நினைப்பது போல உலகத்தில் அளவில்லாத இன்பம் மட்டும் தான் நமக்காக வாழ்வில் காத்திருக்கிறது’ என்று அவனுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாகப் பேசி உற்சாகமூட்டுகிறாள் அவள்..
‘கண்கள் நாடும் கண்ணாளா எந்தன் ஜீவனே
எந்த நாளும் உன் சொந்தம்தான் ஆனதிலே..
கொஞ்சிப் பேசி நம் எண்ணம்போல் பாரிலே
இனி கொள்ளை கொள்ளை இன்பம்தானே வாழ்விலே’
இப்போது அவளது உற்சாகம் அவனையும் தொற்றிக்கொள்கிறது.
‘துள்ளி ஆடும் பெண்மானே என் வாழ்விலே
இன்ப தீபம் உன் ரூபம்தான் மா மயிலே......
வெள்ளம் போலே என் ஆவல் மீறுதே - ஒரு
எல்லை இல்லா இன்பம் அலை மோதுதே’
வெள்ளம் போல ஆவல் எல்லை மீறி இன்ப அலை மனதில் பாய்கிறதாமே? இது எதனால்?
அதை அவள் சொல்கிறாள்!. காரணத்தையா சொல்கிறாள்? உண்மைக்காதலின் தன்மையையே அவள் வாயிலாக ஒரே வரிக்குள் எவ்வளவு அற்புதமாக சொல்லிவிடுகிறார் கவிஞர். கனிக்குள் இயற்கையிலேயே இருக்கும் இனிய நறுஞ்சுவை அந்தப் பழத்திற்குள்ளேயே ஊறித் தனியாக பிரிக்க முடியாத வண்ணம் வியாபித்திருக்கிறதல்லவா? அதுபோல உண்மைக் காதலும் அன்பிற்குள் ஊறித்திளைத்திருக்கிறது. இதை உவமை ஏதும் சொல்லாமல் "அன்பில் ஊறும் மெய்க்காதல் போலே" என்ற வார்த்தைகளுக்குள் அற்புதமாக கவிஞர் கு.மா.பா. அவர்கள் அமைத்திருக்கிறார்.
‘அன்பில் ஊறும் மெய்க்காதல் போலே பாரிலே
இன்பம் ஏதும் வேறில்லையே ஆருயிரே’
அந்த வார்த்தைகள் அவனுக்கு கரும்புச்சாறைப் போல தித்திக்கின்றன. இல்லை இல்லை. அவள் சொற்களுக்கு அந்தக் கருப்பஞ்சாறு கூட ஈடாகாது.
‘கன்னல் சாறும் உன் சொல்லைப் போல் ஆகுமோ - என்னைக்
கண்டும் உந்தன் வண்டுவிழி நாணுமோ’
எளிமையான வார்த்தைகள் - அவற்றுக்குள் பொதிந்திருக்கும் நயமான நுட்பமான கருத்துக்கள் - இவற்றில் கலவை தான் கவிஞர் கு.மா. பாலசுப்ரமணியம் அவர்களின் இந்தப் பாடல். இசைச் சக்கரவர்த்தி ஜி. ராமநாதன்தான் வார்த்தைகளின் நயம் குன்றாத வண்ணம் எவ்வளவு அழகாக இசை வடிவம் கொடுத்திருக்கிறார்! பொதுவாக சோகத்துக்கு என்றே முத்திரை குத்தப்பட்ட ஷெனாய் இந்தப் பாடலின் இணைப்பிசையில் காதல் வயப்பட்ட இரு நெஞ்சங்களில் பொங்கும் உற்சாகத்திற்கு எவ்வளவு அழகாக இணை சேர்கிறது. இசை அரசி பி. சுசீலா அவர்களின் குரலில் வெளிப்படும் இனிமை - குறிப்பாக சரணங்களில் வரும் அந்த "ஹம்மிங்" - பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒன்று.
இசைக்கு ஈடுகொடுக்கும் வண்ணம் அமைந்த நாட்டியப் பேரொளி பத்மினி அவர்களின் நடனம், காட்சி அமைப்பு அனைத்தும் ஒன்று சேர்ந்து திரை இசைக் கடலில் மாபெரும் வெற்றிப்பாடலாக மாற்றி விட்டன என்றால் அது மிகையல்ல.
(தொடர்ந்து முத்தெடுப்போம்)
| ‘இசைச் சக்கரவர்த்தி’ ஜி. ராமநாதன். |
பிறந்த வருடம் : 1910 தந்தை பெயர் : கோபால அய்யர் பிறந்த இடம் : பிச்சாண்டார் கோவில் (பட்டுக்கோட்டை) திரை இசை அனுபவம்: ஆரம்பத்தில் தமையனாரின் கதா காலட்சேபங்களுக்கு ஹார்மோனியம் வாசிப்பு. ஸ்பெஷல் நாடகங்களில் ராஜபார்ட் நடிகருக்கே சவால் விடும் ஹார்மோனிய வாசிப்பு ‘FAST FINGER’ ராமநாதன் என்று பெயர் வாங்கிக்கொடுத்தது. பாபநாசம் சிவனிடம் உதவியாளராக ‘அசோக் குமார்’படத்தில் பணியாற்றினார். இசை அமைத்த முதல் படம் : பரசுராமர் பிரபலமான படங்களில் சில : சிவகவி, ஹரிதாஸ், மதுரை வீரன், தூக்கு தூக்கி, வீரபாண்டிய கட்டபொம்மன், நான் பெற்ற செல்வம், கப்பலோட்டிய தமிழன், தெய்வத்தின் தெய்வம். சாதனை : ஆசியா கண்டத்திலேயே சிறந்த இசையமைப்பாளராக ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’படத்தின் இசைக்காக கெய்ரோவில் பெற்ற விருது. தமிழ்ப்படத்திற்கு அமைத்த இசைக்காக உலகளாவிய அங்கீகாரம் பெற்ற இசை அமைப்பாளர் இவர் ஒருவர் மட்டுமே. மறைந்த தினம் : நவம்பர் 20 - 1963 |