

‘எட்டு தோட்டாக்கள்’ புகழ் வெற்றி, ஷீலா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘ஜோதி’. இந்தப் படத்துக்காக கே.ஜே.யேசுதாஸ் பாடியுள்ள ‘யார் செய்த பாவமோ.. ஏன் இந்த கோலமோ.. கருவறை தேடிப் போகுதே..’ என்கிற பாடல் இணையத்தில் வெளியாகி திரையிசை ரசிகர்களை உள்ளம் உருக வைத்திருக்கிறது. பாடல் உருவான கதையைப் பற்றி படத்தின் இயக்குநர் ஏவி.கிருஷ்ணா நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
“திரைப்படங்களுக்குப் பாடுவதைக் கடந்த சில வருடங்களாகவே கே.ஜே.யேசுதாஸ் சார் நிறுத்திவிட்டார். முதல் காரணம் அவர் தற்போது வசிப்பது அமெரிக்காவில்.
அவரைப் போன்ற ஒரு கந்தர்வக் குரலோனுக்கு இசைதான் சுவாசம் என்றாலும் 82 வயது முதுமையில் அவரைத் தொந்தரவு செய்ய யாருக்குமே மனம் வராது. ஆனால், இந்தக் கதையின் மீதும், அது கொண்டிருக்கும் உணர்வின் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இருந்தது.
கதைச் சுருக்கத்தையும் கதையின் கிளைமாக்ஸில் பாடல் எப்படிப்பட்டச் சூழ்நிலையில் இடம்பெறுகிறது என்பதையும் குறிப்பிட்டு, பாடல் வரிகள், ட்யூன் ஆகியவற்றை அவருக்கு அனுப்பிவிட்டுக் காத்திருந்தோம்.
இரண்டு மாதங்கள் கழித்து அவரிடமிருந்து அழைப்பு! ‘கார்த்திக் நேத்தாவின் வரிகளும் இசையமைப்பாளர் ஹர்ஷவர்த்தனின் மெட்டும் என் மனதைக் கரையச் செய்துவிட்டன. கதைக்காக இந்தப் பாடலைப் பாடச் சம்மதிக்கிறேன்’ என்று அவர் சொன்னதும் புல்லரித்துப் போனோம்.
அமெரிக்காவிலேயே தனது குரலை ட்ராக்கில் பதிவுசெய்து இணையம் வழியாக அனுப்பிவிட்டார். அது மட்டுமல்ல; எந்தப் படத்துக்கும் அவர் ‘வீடியோ பைட்’ கொடுத்ததில்லை. ‘ஜோதி’ படத்துக்கு வீடியோவும் அனுப்பிக் கொடுத்தார்.
இது கடலூரில் நடந்த ஓர் உண்மைக் கதையின் அடிப்படையில் உருவாகியிருக்கும் படம். தாய்மைதான் மையம். மருத்துவமனையில் சேர்ந்து, குழந்தையைப் பிரசவித்துவிட்டு மயக்கத்திலிருந்து கண் விழித்தபோது அந்தத் தாய் அதிர்ந்து, நொறுங்கிப் போகிறாள்.
அவளது குழந்தை திருடப்பட்டிருந்தது. ஓடோடி வரும் சாந்தி என்கிற ஐபிஎஸ் அதிகாரி, அடுத்த 2 மணி நேரத்தில் குழந்தையைக் கண்டுபிடித்து மீட்டுக்கொண்டு வருகிறார். இந்தச் சம்பவத்துடன் இன்னும் பல நிஜ சம்பவங்களையும் சேர்த்திருக்கிறோம்.
ஏனென்றால், இப்படி இந்தியாவில் மட்டும் ஒரு நாளைக்குச் சராசரியாக 173 பிறந்த பச்சிளம் குழந்தைகள் காணாமல் போகின்றன. அவற்றில் பாதிக்கும் அதிகமான குழந்தைகள் போன திசையைக் கண்டுபிடிக்கவே முடிவதில்லை. அந்த ஆதங்கத்திலிருந்து எழுந்த படம்தான் இது” என்கிறார் ஏவி.கிருஷ்ணா.
பாடலின் ‘லிரிக் வீடியோ’வைக் காண: https://bit.ly/3v3uAOF