

இந்தியத் தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பின் (FICCI) சார்பில் கான் சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு திரும்பியிருக்கிறார் கமல் ஹாசன். “உலக அளவில் தமிழ் சினிமாவுக்கு அதிகரித்துவரும் வாய்ப்புகளை இளம் தமிழ் சினிமா இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கும் கமல், தமிழ் சினிமாவின் எதிர்காலம் குறித்தும், அது அடுத்த கட்டத்துக்கு நகர என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் முற்றிலும் புதிய பார்வைகளை முன்வைத்துள்ளார். தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் பத்திரிகையாளர்கள் கார்த்தி சுப்ரமணியன், உத்தவ் நாயர் ஆகியோரிடம் அவர் பிரத்தியேகமாகப் பேசியதிலிருந்து சில பகுதிகள்...
கான் அனுபவம்
“முதல் முறை நான் கான் திருவிழாவுக்குச் சென்றபோது, தொழில்நுட்பக் கலைஞர்களின் குழுவில் ஒருவனாகச் சென்றிருந்தேன். இன்டெல் நிறுவனம் என்னை அழைத்துச் சென்றது. தமிழகத்தில் பார்வையாளர்கள் விரும்பும் சினிமாவும், கானில் தேர்வாகும் தமிழ் சினிமாவும் வேறு வேறு வகையாக இருந்தது எனக்குத் தெரியவந்தது. இந்த முறை போனபோது, கோடம்பாக்கத்தில் அங்கீகாரத்தைப் பெற முடியாத சின்னஞ்சிறு சினிமா இயக்குநர்களுக்கு அங்கே வரவேற்பு இருப்பதைப் பார்த்து மனம் நெகிழ்ந்து போனேன்.
தேவை திரைப்பட இயக்கங்கள்
தமிழகத்தில் சிற்றூர்களில் வசிக்கும் சினிமா பார்வையாளர்களுக்கும் தரமான சர்வதேச சினிமா படைப்புகளைப் பார்க்கும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்குத் திரைப்பட இயக்கங்களைச் சிறு நகரங்களில் ஆரம்பிக்க வேண்டிய அவசியம் உள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே இன்று திரைப்பட இயக்கங்கள் இயங்கிவருகின்றன. ஆனால் இவை பி அண்ட் சி சென்டர்களுக்கும் நகர வேண்டிய தேவை உள்ளது. சர்வதேச சினிமாக்களைத் தமிழ்ப் பார்வையாளர்கள் பார்ப்பதன் வாயிலாக மட்டுமே உள்ளூர் சினிமாவின் உள்ளடக்கம் மாறும்.
அண்டை மாநிலமான கேரளத்தில் அதைப் போன்ற இயக்கங்கள் வாயிலாகவே திரைப்பட இயக்குநர்கள் மற்றும் சினிமா ரசிகர்களின் ரசனையுணர்வு மேம்பட்டுள்ளது. ரசனை மேம்படும்போதுதான் நம்மூரில் எடுக்கப்படும் திரைப் படங்களையும் தரமாக எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
தமிழ் சினிமாவுக்கு என்ன தடை?
தமிழ்த் திரைப்படத் துறையைப் பொறுத்தவரை நாம் தன்னிறைவாக உள்ளோம். அதுதான் பிரச்சினை. அது குறித்து சந்தோஷமாகவும் இருக்கிறோம். நாமே படங்களைத் தயாரித்து, நாட்டுக் கள்ளைப் போல நாமே நுகர்கிறோம். அதை நாம் பாட்டிலில் அடைத்துச் சந்தைப்படுத்த முடியாது. ஆனால் நமக்குத் தமிழகத்துக்கு வெளியே பெரிய சந்தை உள்ளது. அயல்வாழ் தமிழ்ப் பார்வையாளர்களை மட்டுமே சொல்லவில்லை. உலகளாவிய பார்வையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை நாம் கவனத்தில் கொள்ளத் தவறிவிட்டோம்.
ஆங்கிலத்தில் தமிழ்ப் படங்கள்
இந்தியா ஆங்கிலம் பேசும் நாடாக உள்ளது. குஜராத்தில் ஒருவர் தொலைந்து போகாமல் இருக்க ஆங்கிலத்தைப் பயன்படுத்துகிறார். பஞ்சாபிலும் தமிழகத்திலும் இதே நிலைதான் உள்ளது. நம்மில் பெரும்பாலானவர்கள் ஆங்கிலத்தில் பேசுகிறோம். அந்த ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு நாம் உலகத்துடன் பேச முயல்வோம்.
மனித வளத்தில் முதலீடு தேவை
இந்திய சினிமாத் துறையைப் பொறுத்தவரை, பெரிய நிறுவனங்கள் எதுவும் சினிமா சார்ந்த மனித வளத்திற்குப் போதிய முதலீட்டைச் செலுத்தவில்லை. அக்காலத்தில் இயக்குநர் கே. பாலச்சந்தர் போன்றவர்கள் நிறைய பேருக்குப் பயிற்சி அளித்தார்கள். இன்று, ஒரு கதையைச் சொல்லத் தெரிந்த யாரும் இயக்குநர் ஆகும் நிலை உள்ளது. சினிமா பயிலகங்கள் இன்னும் நிறைய தேவை. நடிகர்களுக்குப் பயிற்சி தேவை. நடிப்பு என்பது முழுமையான கலை. வண்ணங்களைக் கலக்கத் தெரிவதால் ஒருவர் ஓவியர் என்று தன்னைச் சொல்லிக்கொள்ள முடியாது. ஒரு ஓவியர் உலகத்தையும், அதன் பரிமாணங்களையும் முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும்
டிக்கெட் விலையை உயர்த்த வேண்டும்
தமிழகத்திலும் ஆந்திராவிலும் மட்டுமே தியேட்டர் கட்டணத்தை அரசு நிர்ணயிக்கும் நிலை உள்ளது. மெர்சிடஸ் பென்ஸ் காரின் விலையையும், கோக் விலையையும் அந்தந்த நிறுவனத்தினரே நிர்ணயிக்கும்போது, திரையரங்க அனுமதிக் கட்டணத்தை மட்டும் அரசு ஏன் நிர்ணயிக்க வேண்டும்? தமிழகம்தான் இருப்பதிலேயே சினிமா பார்ப்பதற்கு மலிவான இடமாக இருக்கிறது. திரைப்படத்தின் உள்ளடக்கத்திற்கோ, திரைத் துறையினரின் ஆரோக்கியத்திற்கோ இது உகந்ததல்ல.
தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் வெளியான கட்டுரையிலிருந்து தமிழில்: சங்கர்